ஹெல்த்

உடலுறுப்பு தானம் செய்த ராணுவ வீரரின் மனைவி

webteam

சமீப ஆண்டுகளாக உடல் உறுப்பு தானம் மக்களிடையே அதிக விழிப்புணர்ச்சி பெற்று வரும் நிலையில் மூளைசாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, வேறொருவருக்கு பொருத்தப்பட்டு, அவர்கள் உயிர் வாழ்ந்து வரும் நிலையில் நேற்று  மூளைசாவு அடைந்த ராணுவ வீரரின் மனைவியின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, கண்ணமங்கலத்தை சேர்ந்தவர்  செந்தில் குமார். இவர் இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா(37). இவருக்கு மூளையில் இரத்தப்போக்கு மற்றும் ரத்தம் உறைவு காரணமாக கடந்த (09.03.2023) ஒன்பதாம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி (10.03.2023) மூளைச் சாவு அடைந்துள்ளார்.

இதனை அடுத்து அவரின் உறவினர்கள் அனுமதியோடு உயிரிழந்த சத்யாவின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நுரையீரல் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், கல்லீரல் சென்னை குமரன் மருத்துவமனைக்கும், இரண்டு கிட்னிகள் சென்னை மியாட் மற்றும் SRMC மருத்துவமனைக்கும், கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. தானமாக பெறப்பட்ட சத்தியாவின் உடல் உறுப்புகள் இன்று காலை ஆம்புலென்ஸ் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. இவரின் உடல் உறுப்பு தானத்தால் பலர் உயிர் பெறுவதுடன், இறந்தும், சத்தியாவின் உடல் உறுப்புகள் உயிர்பித்து இருக்கிறது.