2024 ஆம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட ஒரு பாதிப்பு என்றால் அதில் ஹீட் ஸ்ட்ரோக் நிச்சயம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பவாதம் என்பது ஒரு அவசர மருத்துவ நிலையாகும். பொதுவாக இந்நிலையின்போது உடலின் வெப்பநிலை 40°C அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும். அதீத வெயிலில் ஒருவர் இருக்கும்போது, உடல் சாதாரண வெப்ப நிலையை தானாகவே கையாள முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. எனவே, வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், வெப்ப வாதத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மேலும், ஹீட் ஸ்ட்ரோக் என்பது கடுமையான வேலை காரணமாக உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு, இதயம் தொடங்கி பல்வேறு உறுப்புகள் செயல் இழப்பது ஆகும். அதாவது உடலின் சூட்டை தணிக்கும் பல்வேறு பாகங்கள் மொத்தமாக செயல் இழந்து உறுப்பு பாதிப்புகள் ஏற்பட வழி வகுக்கும். ஹீட் ஸ்ட்ரோக் பொதுவாக உடலின் மைய வெப்பநிலை 104°F (40°C) அல்லது அதற்கு மேல் உயரும் போது ஏற்படும். வெப்ப பக்கவாதம் இதனால் உருவாகலாம்.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் மூளையை திண்ணும் அமீபா தொற்று குறித்தான செய்திகளை அதிகம் பார்த்திருப்போம்.
ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற மூளையைத் திண்ணும் அமீபாவால் 5 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
நெக்லேரியா என்பது ஓர் ஒற்றை செல் உயிரினம். இந்த அமீபா ஏரிகள், ஆறுகளில் காணப்படும். அனைத்துவகை அமீபாவும் கொல்லும் தன்மையுடன் இருக்காது. நெக்லேரியா ஃபோலேரி எனும் அமீதான் மனிதர்களின் மூக்கு வழியாக நுழைந்து, மூளைக்குச் சென்று திசுக்களையும், நரம்புகளையும் தாக்கி சேதப்படுத்தி, மூளையில் `Primary amebic meningoencephalitis' தொற்றை ஏற்படுத்துகிறது.
அரிதான தொற்றாக இருந்தாலும், விரைவில் மரணம் ஏற்படுத்த கூடிய ஒன்றாக கருதப்படும் இத்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க்கில் 1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்கு ஒருவித வைரஸால் பாதிப்புக்கு ஆளானது. இதனால் அந்த வைரஸ் நோய்க்கு குரங்கு அம்மை என பெயர் வந்தது.
குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய் ஆகும். இந்த நோய் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. 2022 ம் ஆண்டு முதன் முதலாக ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதில் க்ளேட் 1 மற்றும் க்ளேட் 1b என இருவகைகளையும் கொண்டிருந்தது. உலக சுதாகார அமைப்பு இந்த பரவலை அவசர நிலையாக அறிவித்துள்ளது. மேலும், குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என என மாற்றியது.
இதன்பாதிப்பு இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கேரள மாநிலம் மலப்புரத்தில் ஒருவருக்கு எம்.பாக்ஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து UNM செவிலியர் கல்லூரியின் பேராசிரியரான சியாங்ஜோன் ஜான் யூ தலைமையில் இந்த ஆராய்ச்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், 47 நாய்கள் மற்றும் 23 மனித விந்தணுக்களில் 12 வகையான மைக்ரோபிளாஸ்டிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றது.
இது குறித்து பேராசிரியரான சியாங்ஜோன் ஜான் யூ தெரிவிக்கையில், “இந்த மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் சுற்று சூழலில் பரவி, மனிதர்களின் உணர்திறன் கொண்ட பகுதிகளை மிகவும் தாக்குகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது” என்றுள்ளார். மேலும், இந்த பிளாஸ்டிக்ஸ் ஆண்களில் ஆண்மைக்குறைவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை கண்டறிய கூடுதல் ஆய்வுகள் தேவை என்று தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் உள்ள பொது சுகாதார வைராலஜி ஆய்வகத்திலிருந்து ஹென்ட்ரா வைரஸ், லிஸ்ஸா வைரஸ், ஹாண்டா வைரஸ் உள்ளிட்ட பல தொற்று வைரஸ்களின் 323 மாதிரிகள், காணாமல் போயிருப்பதாக, டிசம்பர் 9 ஆம் தேதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மாதிரிகள் கடந்த ஆகஸ்ட் 2023 முதலே காணவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போதுதான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காணாமல்போன வைரஸ் மாதிரிகள் திருடப்பட்டுள்ளதா அல்லது அழிக்கப்பட்டுவிட்டதா என்பதை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
காணாமல் போன ஹெண்ட்ரா என்பது, ஒரு ஜூனோடிக் (விலங்கிலிருந்து மனிதனுக்கு) வைரஸ் தொற்றாகும், இது ஆஸ்திரேலியாவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லிசா வைரஸ், ரேபிஸை ஏற்படுத்தும் வைரஸ்களின் குழுவாகும். இருப்பினும், சமூகத்திற்கு ஆபத்துக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவை மட்டுமன்றி புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா, காசநோயால் புதிதாக 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாக WHO சொன்ன அதிர்ச்சி தகவல், மனிதர்களில் மரபணு திருத்த தொழில்நுட்பத்தை செய்ய உலகின் முதல் நாடாக ஒப்புதல் அளித்த தென்னாப்ரிக்கா என இன்னும் பல சம்பவங்கள் மருத்துவத்துறையில் பேசுபொருளாகி உள்ளன.