சமீப காலமாகவே நாடுமுழுவதும் நாய்கடிப்பதால் ஏற்படக்கூடிய ரேபிஸ் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள், நாய்கள் இருக்கும் பாதையை பயன்படுத்துவதற்கு கூட அச்சப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தில் உள்ள பிப்ரௌலி கிராமத்தில் அதிர்ச்சி தரத்தக்க சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இறுதிச் சடங்கு ஒன்றில், எருமை மாட்டின் பாலை கொண்டு தயாரிக்கப்பட்ட தயிரில் செய்யப்பட்ட ரைத்தா பரிமாறப்பட்டிருக்கிறது. இதை அறியாமல் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்கள் அந்த உணவை உட்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே மாடு உயிரிழந்தது. வெறிநாய் கடித்து தொற்று ஏற்பட்டு மாடு உயிரிழந்தது தெரியவந்தது.
இதன் காரணமாக அந்த உணவை சாப்பிட்ட 200 பேரும் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் ரேபிஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ரமேஷ்வர் மிஸ்ரா கூறுகையில் ப்ரௌலி கிராமத்தில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி ஒருவர் வீட்டில் இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. அங்கு வந்த மக்களுக்கு மாட்டு பாலினால் தயாரிக்கப்பட்ட தயிரை கொண்டு செய்யப்பட்ட ரைத்தா பரிமாறப்பட்டுள்ளது. அந்த மாடு வெறிநாய் கடித்து, தொற்று ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் கடந்த 26 ஆம் தேதி உயிரிழந்துள்ளது. அவர்கள் அந்த, உயிரிழந்த மாட்டின் பாலைத் தான் உணவு தயாரிப்பதற்கு பயன் பயன்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த மாடு வெறிநாய் கடித்து தொற்று ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவரவே, அந்த மாட்டின் பாலில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட கிராம மக்களில் சிலர் தங்களுக்கு ரேபிஸ் தோற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அங்குள்ள சுகாதார மையத்திற்கு சென்று நடந்ததை கூறி, தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். இந்த தகவல் மாவட்ட சுகாதார அமைப்பிற்க்கு தெரிய வரவே, அந்த இறுதி சடங்கில் பங்கேற்ற அனைவருக்கும் தடுப்புழி வழங்க உத்தரவிட்டோம். அதன் பேரில் அக்கிராமத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோருக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும், பாலை சூடு செய்து பயன்படுத்தியிருந்தால் ரேபிஸ் நோய் கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் அவர்கள் தயிராக அப்படியே பயன்படுத்தியுள்ளனர். அதனால் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் அந்த கிராமத்தை சேர்த்த மக்களை தொடர்ந்து கண்கணிக்கவும் சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
- ராஜ்குமார்.ர