சிறப்புக் களம்

யோகி, சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த சுப்ரமணியன் - என்ன நடந்தது தேசிய பங்குச் சந்தையில்?

webteam

கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்தியாக மாறி இருக்கிறார் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா. இவரின் நடவடிக்கைகள் குறித்து கடந்த வாரம் 190 பக்க அறிக்கையை அளித்த செபி, 3 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இவருக்கு மட்டுமல்லாமல் முக்கிய அதிகாரிகள் சிலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த 190 பக்க அறிக்கையில் இருந்து தினமும் ஒரு தகவல் வெளியாகி கொண்டு இருக்கிறது.

தற்போது வருமான வரித்துறை, சிபிஐ அமலாக்கத்துறை என அனைத்து அமைப்புகளும் விசாரணையை முடுக்கி விட்டிருக்கின்றன. அதிரடியாக சித்ரா ராமகிருஷ்ணா மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதால் இவரால் வெளிநாடு செல்ல முடியாது.

NSE(என்.எஸ்.இ.):

ஹர்ஷத் மேத்தாவின் ஹவாலா முறைகேடு காரணமாக மற்றொரு புதிய பங்குச் சந்தை தேவை என்பதால் அப்போது என்.எஸ்.இ. தொடங்கப்பட்டது. ஐடிபிஐ வங்கியில் இருந்து சிலர் புதிய பங்குச்சந்தை தொடங்குவதற்கு சென்றனர். அப்படி சென்றவர்களில் ஒருவர் தான் சித்ரா ராமகிருஷ்ணா. சி.ஏ. முடித்த சித்ரா ராமகிருஷ்ணா ஐடிபிஐ வங்கியில் அப்போது பணிபுரிந்து கொண்டிருந்தார்.

என்.எஸ்.இ-யின் முதல் தலைவர் ஆர்.ஹெச்.பாட்டீல். இவர் இருந்தவரை சிறப்பாக செயல்பட்ட என்.எஸ்.இ. இவருக்கு பிறகு பல சிக்கல்களை சந்தித்தது. ரவி நாராயண் துணை தலைவராகவும், சித்ரா ராமகிருஷ்ணா இணை நிர்வாக இயக்குநராகவும் (2009) பதவி உயர்ந்தார்கள். அப்போதுதான் ‘கோ லோகேஷன்’ முறைகேடு நடந்தது. எந்த சர்வரில் குறைவான நபர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அந்த சர்வரில் புரோக்கர்கள் நுழைந்து மற்றவர்களுக்கு கிடைக்கும் முன்பு அதிக லாபத்தில் வாங்கி விற்று வந்தனர்.இதுதான் கோ லோஷன் முறைகேடு. 2010-12 வரையிலான காலகட்டத்தில் நடந்த இந்த முறைகேட்டுக்கு சமீபத்தில்தான் 1,000 கோடி அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

2013-ம் ஆண்டு என்.எஸ்.இ.யின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா ஏப்ரல் 1-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். 2015-ம் ஆண்டு செபிக்கு ஒரு மெயில் வரும் வரையில் அசைக்க முடியாத நபராகவே சித்ரா இருந்தார். என்.எஸ்.இ.யில் நடக்கும் முறைகேடுகள் (கோ லோகேஷன் முறைகேடு) பற்றி விசாரிக்க வேண்டும் என மெயில் வந்தது. அதை மறுத்து எந்த முறைகேடும் நடக்கவில்லை என என்.எஸ்.இ. விளக்கம் கொடுத்தது. ஆனால் அழுத்தம் அதிகரிக்கவே என்.எஸ்.இ.யின் தொழில்நுட்ப குழு, கார்ப்பரேட் கவர்னன்ஸ் என அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

யார் ஆனந்த் சுப்ரமணியன்?

சமீபத்தில் செபி அறிக்கையின் முக்கியமான அம்சம் ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை விதிகளுக்கு மீறி முக்கிய பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டது என்பதுதான். அவரை நியமனம் செய்தது மட்டுமல்லாமல் ஒரு யோகியின் வழிகாட்டுதலில் 20 ஆண்டுகளுக்கு மாறாக சித்ரா செயல்பட்டிருக்கிறார் என செபி குறிப்பிட்டிருந்தது.

பால்பர் லாறியின் நிறுவனத்தில் (துணை) ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவரை எப்படி 1.68 கோடி ரூபாய் ஊதியத்தில் நியமனம் செய்தார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. தவிர தொடர்ச்சியாக சம்பளம் உயரந்துகொண்டே வந்தது. 5 கோடி ரூபாய் அளவுக்கு (ஆண்டுக்கு) இவரது சம்பளம் உயர்ந்தது. இவ்வளவு பெரிய சம்பளம் இருந்தாலும் ஆனந்த் முழு நேர பணியாளர் இல்லை. ஆலோசகர் மட்டுமே. ஆனால் அளவில்லாத அதிகாரங்களுடன் செயல்பட்டிருக்கிறார். உள்நாட்டில் பிஸினஸ் வகுப்பு, வெளிநாடு பயணங்களுக்கு முதல் வகுப்பு எனப் பயணங்களுக்கு அதிகம் செலவிட்டிருக்கிறார்.

பங்குச் சந்தை நிறுவனம் என்பது செபியின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனால் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பற்றி (key management personnel) செபிக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் செபிக்கு வழங்கப்பட்ட பட்டியலில் ஆனந்த பெயர் இல்லை. நிர்வாக இயக்குநர் அறைக்கு அருகில் இருக்கும் ஒருவருக்கு முழு அதிகாரமும் இருக்கும், கோடிகளில் சம்பளமும் இருக்கும். ஆனால் அவர் முக்கிய அதிகாரியாக இருக்க மாட்டார் என்பதுதான் இதில் உள்ள முக்கியமான சிக்கல்.

ஆலோசகர் பொறுப்பு என்பது குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே. ஆனால் நீண்ட காலத்துக்கு, அதுவும் கோடிகளில் சம்பளத்துடன் எப்படி நியமனம் செய்யப்பட்டார்? ஆனந்த் ஆலோசகராக இருந்த சமயத்தில் பல துறைகளில் ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான எல்லைகள் விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதிகபட்ச சம்பளம் ரூ.60 லட்சம் மட்டுமே. ஆனால் ஆனந்துக்கு மட்டுமே கோடிகளில் சம்பளம் வழங்கப்பட்டது. பணி நாட்களும் குறைவாகவே இருந்தன.

தவிர மற்ற ஆலோசகர்களுக்கு அந்த துறைகளில் போதுமான அனுபவம் இருக்கிறது. ஆனால் எந்தவிதமான அனுபவம் இல்லாமல் எப்படி முக்கிய பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார்?. ஒவ்வொரு நியனமும் ஹெச்.ஆர். துறையின் அனுமதியுடன் நடந்தது. ஆனால் ஆனந்த் சுப்ரமணியனை யாரும் நேர்காணல் செய்யவில்லை. நேரடியாக சித்ரா மட்டுமே நேர்காணல் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். முக்கிய பொறுப்பில் நியமனம் செய்யும் போது இயக்குநர் குழு அனுமதி அல்லது தீர்மானம் என எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அவரது சம்பள நிர்ணயத்தில் ஹெச்.ஆர் அல்லது இயக்குநர் குழுவுக்கு எந்த தொடர்பும் இல்லை.

ஆனந்த சுப்ரமணியன் விஷயத்தில் எந்த விதிமுறையும் பின்பற்றவில்லை. தவிர இவை அனைத்தும் இமயமலையில் உள்ள யோகியின் ஆலோசனையிலேயே இது நடைபெற்றிருக்கிறது. இவரது நியமனம் தவிர பலரின் நியமனமும் யோகியின் ஆலோசனையின் பேரிலே நடைபெற்றிருக்கிறது. ஒவ்வொரு முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும், நியமனங்களின் போதும் சித்ரா ராமகிருஷ்ணன் அந்த யோகியுடன் கலந்து ஆலோசித்து உள்ளார்.

உங்களுக்கு ஆலோசனை வழங்க இயக்குநர் குழு இருக்கிறதே என்று கேட்டதற்கு சித்ரா ராமகிருஷ்ணாவின் பதில் இதுதான். ``இயக்குநர் குழு உள்ளிட்ட யாராக இருந்தாலும், அவர்களுக்கு தெரிந்த வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்பது இயல்பதுதான். அதுபோலவே நான் யோகியுடம் ஆலோசனை கேட்டேன்’’ என கூறியிருக்கிறார். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இமயமலை பகுதியில் அவரை பார்த்தேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆனந்த சுப்ரமணியன்தான் யோகியா?

என்.எஸ்.இ. முக்கிய பொறுப்பில் இருந்தது சுனிதா ஆனந்த். சென்னை அலுவலகம் இவர் தலைமையில்தான் செயல்பட்டது. இவரின் கணவர்தான் ஆனந்த சுப்ரமணியன். இவர் முக்கிய பொறுப்பில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக சுனிதா ஆனந்த தினசரி பொறுப்புகளில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து ஆனந்த் முக்கிய பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார். அதற்கு பிறகு சுனிதா ஆனந்தும் பணியில் இருந்து விலகி ஆலோசகராக இணைக்கிறார். (இவருக்கு 60 லட்சம் சம்பளம் வழங்கபடுகிறது. இது செபியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது)

இந்த நிலையில் ஆனந்த் தான் யோகி என ‘எர்னஸ்ட் அண்ட் யங்’ குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் செபி இதனை மறுத்திருக்கிறது. வேறு ஒரு நபர் இருக்கக்கூடும் என செபி கூறியிருக்கிறது. அவர்களுடன் சந்திப்பு நடந்திருக்கும் என செபியின் அறிக்கை கூறுகிறது.

ஆலோசகர் என்னும் நிலையில் இருந்து குழும தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக ( சி.ஒ.ஓ.) நியமனம் செய்யப்பட்டார். அப்போது இருந்த இயக்குநர் குழு இவரது பதவி உயர்வு குறித்து எந்த கருத்தையும் கூறவில்லை.

ஆனந்த் இல்லாமல் எந்த முடிவையும் சித்ரா எடுத்ததில்லை. ஒருவேளை என்.எஸ்.இ. அதிகாரிகள் யாராவது நேரடியாக பார்க்க வந்தால் ஆனந்த் மூலமாகவே சந்திக்க வேண்டும் என சித்ரா கூறியிருக்கிறார். ( Absolute power புத்தகத்தில் இருந்து பக்கம் 242).

இந்த சமயத்தில்தான் அந்த whistleblower மெயில் வந்தது. அதனை அடுத்து ஆனந்த் சுப்ரமணியன் குறித்து இயக்குநர் குழு விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அப்போது இயக்குநர் குழுவில் புதிதாக இணைந்த கேபிஎம்ஜியின் முன்னாள் துணை சி.இ.ஓ. தினேஷ் கன்பார் இது குறித்து விசாரிக்கத் தொடங்குகிறார். 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய விசாரணை அக்டோபரில் முடிகிறது. அப்போது இயக்குநர் குழுக் கூட்டம் நடந்தது. அதில் சித்ராவை அழைத்த இயக்குநர் குழு, ‘அடுத்த 15 நிமிடத்தில் ஆனந்த் ராஜினாமா செய்து வெளியேற வேண்டும். அதன் பிறகு நீங்கள் சந்திக்கவும்’ எனக் கூறியது. எந்தவிதமான கருத்துக்கும் இடமில்லாமல் அப்போதே ஆனந்த் வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து விசாரணை வளையத்துக்குள் சித்ரா கொண்டு வரப்பட்டார். 2016-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி நடக்க இருந்த இயக்குநர் குழு கூட்டத்துக்கு முன்பாக சித்ரா ராஜினாமா செய்தார். ஒரு வேளை அவராக ராஜினாமா செய்யாவிட்டாலும் நீக்கப்பட்டிருப்பார் என்பதுதான் அப்போதைய சூழலாக இருந்தது.

ஆனந்த், சித்ராவை இயக்கினாரா? யோகி, ஆனந்த் மூலமாக சித்ராவை இயக்கினாரா? யார் இந்த யோகி என்பதுதான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.

என்ன இழப்பு?

என்.எஸ்.இ நிறுவனத்தின் ஐபிஓ என்பது பல ஆண்டு காலமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இன்னமும் ஐபிஓ வெளியாகவில்லை. 2007-ம் ஆண்டு முதல் பல முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். நியூயார்க் பங்குசந்தை (என்.ஒ.எஸ்.இ) சிட்டி குரூப், கோல்ட்மேன் சாக்ஸ், நார்வெஸ்ட் பார்ட்னர்ஸ், எல்.ஐ.சி., எஸ்பிஐ, ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. பல ஆண்டுகளாக ஐபிஓ தொடர்பான பேச்சு வார்த்தைக்கு சித்ரா ராமகிருஷ்ணா முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பலரும் ஐபிஓ வரும் என காத்திருந்தனர். ஆனால் ஐபிஒ வெளியாகவில்லை என்பதால் ஐபிஓவுக்கு முன்பாகவே மற்ற நிறுவனங்களிடம் விற்று விட்டு வெளியேறினார். தற்போது இருக்கும் முதலீட்டாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்தியாவில் இரண்டு முக்கியமான எக்ஸ்சேஞ்ச் உள்ளன. பிஎஸ்.இ மற்றும் என்.எஸ்.இ. ஒரு எக்ஸ்சேஞ்ச் தன்னுடைய சொந்த எக்ஸ்சேஞ்சில் பட்டியல் செய்ய முடியாது என்பதுதான் செபியின் விதி. ஆனால் என்.எஸ்.இயை பி.எஸ்.இயில் பட்டியல் செய்ய என்.எஸ்.இ. நிர்வாகம் விரும்பவில்லை. அதனால் விதியை மாற்ற முயற்சி செய்தது. இது குறித்து செபியின் 190 பக்க ஆர்டரில் இருக்கிறது. ஆனால் செபி உறுதியாக இருந்ததால் வெளிநாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிட என்.எஸ்.இ திட்டமிட்டது. அதற்குள் கோ லோகேஷன் உள்ளிட்ட முறைகேடுகள் வந்ததால் என்.எஸ்.இ.யின் ஐபிஓ திட்டம் பல ஆண்டுகளாக தள்ளிபோய்க்கொண்டே வருகிறது.

நிப்டி இவ்வளவு புள்ளிகள் உயர்ந்தது, சரிந்தது என்று மட்டுமே செய்திகள் வெளியான நிலையில் தற்போது பரவலாக இந்த விவகாரம் எழுதப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் விடை தெரியாத கேள்விகள் பலவும் இருக்கின்றன.

- வாசு கார்த்தி