சிறப்புக் களம்

கொரோனா வீட்டுத்தனிமையில் இருப்போரும் இலவசமாக மருத்துவரை அணுக உதவும் வலைதளம்!

கொரோனா வீட்டுத்தனிமையில் இருப்போரும் இலவசமாக மருத்துவரை அணுக உதவும் வலைதளம்!

நிவேதா ஜெகராஜா

கொரோனா காலத்தில், வீட்டுத்தனிமையில் இருக்கும் நோயாளிகளை, அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் மருத்துவர்கள் இணைக்க, யானா இந்தியா என்ற தளம் தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தின் தீவிரம் காரணமாக, நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் யாவும் நாடு முழுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. இவற்றை தவிர்க்க, லேசான மற்றும் மிதமான கொரோனா அறிகுறிகள் தெரியவரும் நோயாளிகள், முடிந்தவரை வீட்டுத்தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றார்கள் மருத்துவர்கள். இதன் தொடர்ச்சியாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய கையேடுகள், அவர்களை பராமரிப்பவர்களுக்கான கையேடுகள் போன்றவற்றை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டும், அதுசார்ந்த விழிப்புணர்வை அதிகப்படுத்தியும் வருகிறது.

இருப்பினும் மருத்துவமனையில் இருப்பதையே பாதுகாப்பு என சிலர் நினைக்கின்றனர். காரணம், வீட்டுத்தனிமையில் இருந்தாலும், கொரோனா தொடர்பான பல சந்தேகங்களும் பயங்களும் அவர்கள் மனதில் இருந்துக்கொண்டே இருக்கிறது. இந்த பயத்தின் வெளிப்பாடாக லேசான மூச்சுத்திணறல் அல்லது தொடர் இருமல் போன்றவை வீட்டுத்தனிமையின்போது தெரியவந்தால், உடனடியாக பதற்றமாகிவிடுகின்றனர்.

இப்படியான பயத்தை போக்க, 'எப்போதும் உங்களுக்கு அருகிலிருக்கும் மருத்துவரோடு தொடர்பிலிருக்கள்; கொஞ்சம் அசௌகரியம் ஏற்பட்டாலும் உடனடியாக அந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்' என அரசின் கையேடு சொல்கிறது. ஆனால், இந்த பெருந்தொற்று காலத்தில், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவ்வளவு எளிதாக நடக்கும் காரியமில்லை. அந்த அளவுக்கு எல்லா மருத்துவர்களும் பிஸியாகவே இருக்கிறார்கள். இதனால் உடனடியாக மருத்துவரை நாடலாம் எனும் நேரத்தில், அம்மருத்துவர் வேறு பணியில் இருந்துவிட்டால், நோயாளியின் பதற்றம் மேலும் அதிகரிக்கிறது. ஆனால் இப்படியான சூழலில் மருத்துவர்களை குறைபட்டுக்கொள்ள முடியாது. 

இப்படியான சிக்கலை தவிர்க்க, கோயம்புத்தூரை சேர்ந்த தன்னார்வலர்கள் குழுவினர் 'யானா இந்தியா' என்ற பெயரில் வலைதளத்தை உருவாக்கியிருக்கின்றனர். https://yanaindia.org/ என்ற பெயரில் இவர்கள் தொடங்கியிருக்கும் அந்த வலைதளத்தில், வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு உடனடி மருத்துவ சேவை அமைத்துக்கொடுக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றது.

இந்த வலைதள சேவை குறித்து இதன் தன்னார்வலர் கண்ணன் வெங்கடசுப்ரமணியன் நம்மிடையே விரிவாகப் பேசினார்.

"கொரோனா அச்சம் உலகையே அச்சுறுத்தி வந்தாலும், `இங்கு யாரும் தனித்துவிடப்பட்டவர்கள் இல்லை' என்ற நோக்கத்திலிருந்துதான் நாங்கள் இந்த அமைப்பையே தொடங்கினோம். ஆங்கிலத்தில் நாங்கள் வைத்திருக்கும் YANA என்பதன் விரிவாக்கம், You Are Not Alone என்பதுதான். இந்தத் தளத்தின் வழியாக இப்போதைக்கு நாங்கள் தமிழகத்துக்குட்பட்டு மட்டும்தான் சேவையாற்றி வருகிறோம்.

இந்த தளத்தை கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுத்தனிமையில் இருப்பவர்கள், கொரோனா அறிகுறிகள் தெரியவந்து அதனால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டவர்கள், அப்படியானவர்களை கவனித்துக்கொள்பவர்கள் ஆகியோர் உபயோகித்து, பயன்பெறலாம்.

இதை உபயோகிக்கும் முறை மிக எளிமையானது. எங்கள் தளத்துக்குள் வந்தவுடன், அதில் *Appoinment* என்ற இடத்துக்குள் சென்று, முதலில் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். பின், நோயாளி பற்றிய அடிப்படை விவரங்கள், அவருக்கு இருக்கும் அறிகுறிகள், கடைசியாக மருத்துவரை நேரில் சந்தித்தது எப்போது, அவருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாத்திரைகள் / அறிவுரைகள் குறித்த சில விவரங்கள், தற்போதைய அவரின் ஆக்சிஜன் அளவு போன்றவற்றை முதலில் பதிவிட வேண்டும். மேலும், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக வந்த ரிசல்ட் அட்டை, சி.டி.ஸ்கேன் ரிப்போர்ட் போன்றவற்றின் புகைப்படங்களையும் பதிவிட வேண்டும். நோயாளியை  கவனித்துக்கொள்பவர்தான் இந்தத் தளத்தை பயன்படுத்திகிறார் என்றால், அவர் தன் பெயரில், நோயாளியின் விவரங்களை பெற்று இவற்றை செய்யலாம்.

இதற்கு அடுத்தபடியாக, உடனடியாக சிகிச்சை தேவைப்படுபவர்கள், அவர்கள் சொல்ல விரும்பும் செய்தியை பதிவிடவும் தனியாக ஒரு பாக்ஸ் இருக்கும். அதில் அவர்கள் தேவையின் அவசியம் மற்றும் அவசரத்தை பதிவிடலாம். இவற்றையெல்லாம் பதிவிட்ட பின், மருத்துவரை சந்திக்க *Request an Appointment* கொடுக்க வேண்டும்.

இதை கொடுத்தவுடன், எங்களுக்கு தகவல் வந்துவிடும். உடனடியாக நாங்கள் எங்களுடைய மருத்துவ குழுவில் அந்த நேரத்தில் ஓய்விலிருக்கும் மருத்துவரை தொடர்பு கொண்டு, ஜூம் செயலி வழியாக மருத்துவர் - நோயாளிக்கு இடையிலான நேர்முக ஆலோசனைக்கு ஏற்பாடு செய்வோம். அந்த வீடியோ-கால் வழியாக, நோயாளி மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். ஆலோசனை வழியாக, மருந்து மாத்திரை தொடர்பான பரிந்துரைகளையும்கூட அவர்கள் கேட்டுக் கொள்ளலாம்; ஆக்சிஜன் தொடர்பான சந்தேகங்களை கேட்கலாம்; வேறு உடல்சார்ந்த எந்தவொரு கேள்வியையும் கேட்கலாம். அனைத்துக்குமே மருத்துவர் விளக்கமளிப்பார். இந்த மருத்துவர்களின் ஆலோசனை, முற்றிலும் இலவசமானது.

ஒரேயொரு நிபந்தனை, கேள்வி அனைத்தும் கொரோனா தொடர்பாகவும், குறிப்பிட்டு நோயாளி தொடர்பாகவும் இருக்க வேண்டும். இணை நோய்கள் இருந்து, கொரோனா உறுதிசெய்யப்பட்டவர் எனும்போது, அதுசார்ந்த கேள்விகளை கேட்கலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் இதை நாங்கள் தொடங்கினோம் என்பதால், இப்போதைக்கு வீடியோ-கால் சேவை மட்டுமே எங்களால் அளிக்க முடிந்திருக்கிறது. விரைவில், இன்னும் கூடுதலாக சில சேவைகளை அறிமுகப்படுத்தவிருக்கிறோம். அவற்றில் குறிப்பாக தமிழகம் முழுவதும் கொரோனா படுக்கைகள் எந்த மருத்துவமனைகளில் எவ்வளவு இருக்கிறது என்ற தகவல், கொரோனா நோயாளிகளுக்கான வீட்தேடிவரும் உணவு தொடர்பான சேவைகள் பற்றிய விவரம், கொரோனா பரிசோதனை மையங்கள் குறித்த அடிப்படை தகவல்கள் போன்றவற்றை இணைக்கவிருக்கிறோம்.

அதேபோல், இப்போதைக்கு இந்த சேவை ஆங்கிலத்தில் மட்டும்தான் எங்கள் தளத்தில் இருக்கிறது. விரைவில் தமிழ் வழியிலும் வலைதளத்தில் தகவல் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம். தமிழிலும் தயார் செய்துவிட்டுதான் வலைதளத்தை தொடங்கவேண்டுமென முதலில் நினைத்தோம். ஆனால், அதற்கு இன்னும் சில நாட்களாகும். நாட்கள் செல்ல செல்ல, கொரோனாவின் தீவிரம் தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதால், உடனடியாக தொடக்க நிலை சேவைகளை தொடங்கிவிட்டோம்.

நாங்கள் கோவையிலிருந்து செயல்படுகிறோம் என்பதால் எங்களுடைய இந்த சேவைக்கு, கோயம்புத்தூரை சேர்ந்த சில தன்னார்வ நண்பர்கள் உதவிவருகின்றனர். டேட்டாபேஸ் (தரவு அறிவியல் மாணவர்கள்) பயிலும் கல்லூரி மாணவர்கள் குழு எங்களோடு இணைந்துள்ளனர். அவர்கள், வலைதள மேம்பாட்டுக்கு உதவுகின்றனர். குறிப்பாக அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் இரண்டாம் ஆண்டு தரவு அறிவியல் மாணவர்கள் முழுவதுமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். அவர்கள் போக, என்னுடைய நண்பர்கள் குழு வழியாகவும் உதவி கிடைக்கிறது. இவர்கள் மூலமாக வலைதள மேம்பாட்டு பணி தடையின்றி நடக்கிறது. நண்பர் குழு மூலமாகத்தான் மருத்துவர்களையும் இணைக்கத் தொடங்கினோம். நாங்கள் தொடர்புகொண்ட அனைத்து மருத்துவர்களுமே உடனடியாக முன்வந்து எங்களோடு இணைந்தனர். மருத்துவர் அகிலா அய்யாவு, மற்ற மருத்துவர்களை ஒருங்கிணைத்து இந்த டெலி கண்சல்ட் நடைபெறச் செய்கிறார். இவர்களின் உத்வேகம்தான், எங்களையும் உத்வேகப்படுத்துகிறது.

இணைய வழி சேவையென்பதால், கோவையை தாண்டி தமிழ் பேசும் அனைத்து நிலப்பரப்பு மக்களுக்கும் எங்களால் இதை தரமுடிகிறது. சமீபத்தில், இந்தி தெரிந்த நபரொருவர் கூட, எங்கள் சேவை வழியாக பயன்பெற்றார். அதுபோன்ற நேரத்தில் உதவுவதற்காக தற்காலிகமாக வேற்றுமொழி திறன் உடையவர்களையும் எங்களோடு இணைத்துள்ளோம். எல்லா மொழிக்கும் மொழிப்பெயர்ப்பு தெரிந்த நபரை நியமிப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதால், தமிழ் - ஆங்கிலம் வழியில் மட்டும் சேவைகள் தொடர்கின்றன.

பெருந்தொற்று நேரத்தில், எங்களின் இந்த சேவையை, கொரோனா நோயாளிகளும் அவர்களின் பராமரிப்பாளர்களும் எந்த மனத்தடையும் இன்றி பெற்றுக்கொண்டு, முழு பயனையும் பெற வேண்டுமென வேண்டி விரும்பு கேட்டுகொள்கிறோம். உடலால் விலகியும், மனதால் இணைந்தும் இருப்போமாக" என்றார் புன்னகையுடன்.

இவர்கள் சொல்வதுபோல இந்த இரண்டாவது அலை கொரோனாவை, நம்பிக்கையோடு கடப்போம் மக்களே!