சிறப்புக் களம்

Death bedகளின் ராஜா... அற்புதங்களின் அவதாரன்! - HBD அண்டர்டேக்கர்

கலிலுல்லா

எதிராளியின் கழுத்தில் அந்த ரெஸ்லரின் கைகள் பற்றியிருக்கின்றன. இன்னும் சற்று நேரத்தில் அவர் தூக்கிவீசப்படலாம் அல்லது எதிர்தாக்குதல் நடத்தலாம். இன்னும் சில விநாடிகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. எதிராளியின் கழுத்தில் வைக்கப்பட்டிருந்த கைப்பிடியின் இறுக்கம் தளர்கிறது.

முகத்தின் நரம்புகளின் நடுக்கத்தை இருள் மறைந்துவிடுகிறது. இருளடர்ந்த அந்த அரங்கில் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்பதை அங்கிருந்த சிலர் அறிந்திருக்க கூடும். wwe அரங்கின் அனைத்து வாயில்களும் மூடப்படுகின்றன. கும்மிருட்டை வெட்டி பிரசவிக்கிறது ஒளி. சாவுமணியின் சத்தத்திற்கு, 'டங்' என்ற அர்த்தத்தை அன்றுதான் சிலர் புரிந்திருக்க கூடும். மின்னல் வெட்டி மறைகிறது. தீப்பிழம்புகள் உமிழும் ஒளி வரப்போகிறவரின் ரசிகர்களை உற்சாகமூட்டுகிறது.

'டங்' என்ற சாவுமணி சத்தம் ரிங்கிலிருப்பவர்களின் குலைகளை நடுங்க வைக்கிறது. அணைந்து அணைந்து ஒளிரும் விளக்குகளின் வழியே தெரிகிறது 'டெத் மேன்' முகம். அவ்வளவு தான்! ரிங்கிலிருந்தவர்கள் இறங்கி அடித்து பிடித்து ஓடுகிறார்கள். காரணம் ஒன்று தான். மரணத்தின் மகன் அங்கே வந்துகொண்டிருக்கிறான். அந்த தொப்பியும், கருப்பு கோர்ட்டும் தோள்பட்டையை தொடும் முடி அண்டர் டாக்கர் எனும் அவதாரன் நடந்துவருவதை உணர்த்துகிறது. அண்டர் டாக்கர் ஆயுட்காலத்தின் அளவுமாணி.

90'ஸ் கிட்ஸ்களின் 7 உயிர் பெற்ற ஒரே நாயகன் அண்டர் டேக்கர். மரணமடைந்து மண்ணறையில் பூட்டிய பின்பும் கை நீட்டி காலதேவனை ஏமாற்றியவர் என்ற புகழுக்கு சொந்தக்காரன் அண்டர்டேக்கர். அவரது பிறந்த நாளான இன்று, அவரைப்பற்றி எழுதாமல் போனால் 90ஸ் கிட்ஸ்களின் மொத்த சாபத்தை வாரி இறைந்துக்கொள்ள நேரிடும் என்பதால் இந்த பதிவு.

1990 முதல் wwe உலகில் கொடி கட்டிப் பறந்து வந்த அண்டர் டேக்கர், அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் ஃப்ராங்க் காம்ப்டன் கேலவே தம்பதிக்கு 1965-ம் ஆண்டு ஐந்தாவது ஆண் குழந்தையாக பிறந்தார். இவர் இயற்பெயர் மார்க் வில்லியம் காலவே.  ஆரம்பத்தில் கால்பந்து, கூடைப்பந்து அணிகளிலும் நட்சத்திர ஆட்டக்காரனாக வலம்வந்தார்.டெக்சாஸ் வெஸ்லியான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, மார்க் கேலேவுக்கும் மல்யுத்துக்குமான காதல் மலர்ந்தது. மல்யுத்த வாழ்க்கையை மணந்துகொண்டவர்,

1990-ம் ஆண்டு, `சர்வைவர் சீரிஸ்' போட்டியில் அறிமுகமான அண்டர்டேக்கர், அதற்கு அடுத்த ஆண்டு நடந்த 'சர்வைவர் சீரிஸ்' போட்டியிலேயே உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டம் ஜெயித்தார். உலக ஹெவி வெயிட் சாம்பியன்ஷிப், ஹார்ட்கோர் சாம்பியன்ஷிப், WWE சாம்பியன்ஷிப் என எல்லா சாம்பியன்ஷிப்களையும் தனது தோள்களில் தாங்கியிருக்கிறார் அண்டர்டேக்கர். தங்க பெல்ட்டுகள் ஒளி மங்கும் போதெல்லாம், டேக்கரின் தோள் அடைந்தே தங்களை மெருகேற்றிக்கொண்டன.

ரெஸல்மேனியா போட்டிகளை எடுத்துக்கொள்வோம். அதில் 27 போட்டிகளில் சண்டையிட்ட அண்டர்டேக்கர் 21 போட்டிகளில் வென்றியிருக்கிறார். ரெஸ்லிங் வரலாற்றின் மைல் கல்லாக இது பார்க்கப்படுகிறது. ஒரு சில போட்டிகளில் எதிரியை வீழ்த்த அண்டர் டேக்கருக்கு 18 நொடிகள் மட்டுமே போதுமானதாக இருந்தது. இளம் திறமையாளர்களை வளர்த்துவிடவும் அண்டர் டேக்கர் தவறியதில்லை. அந்த லிஸ்ட்டில் ப்ராக் லெஸ்னர், ரேன்டி ஆர்டன், பட்டிஸ்டா ஆகியோருக்கு இடமுள்ளது.

அண்டர்டேக்கருக்கான உடல்மொழி என்பது தனித்துவமானது. அவருக்கு மட்டுமே வாய்க்கப்பெற்றது. கண்களை உருட்டி, நாக்கை நீட்டி, கழுத்தில் கட்ட விரலை வலம் வரச் செய்து 'கொன்றுவிடுவேன்' என சைகையால் தாறுமாறு செய்வது இதெல்லாம் தான் அண்டர்டேக்கரை அண்டரேட்டராக்க விடாமல் உயிர்ப்பித்திருக்கிறது.

வி மிஸ்யூ அண்டர்டேக்கர்!