ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் தேதி உலக புகையிலை ஒழிப்பு நாளாக உலக சுகாதார நிறுவனத்தால் கடைப்பிடிக்கப்படுகிறது.
சிகரெட், குட்கா, பீடி உள்ளிட்ட அனைத்து புகையிலைப் பொருட்களின் உறைகள் மீதும், அவற்றின் கொடுமையான கேடுகளை விளக்கும் எச்சரிக்கைப் படங்கள் ஒருபுறத்தில் இருந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் 35 மில்லியன் கிலோ புகையிலை உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு லட்சக் கணக்கானோர் இறக்கக் காரணம் புகையிலை. புகையிலை பயன்படுத்துவதால் 10 நொடிக்கு ஒருவர் இறக்கிறார் என்கின்றனர் மருத்துவர்கள். புகையிலையைப் பயன்படுத்துவதால் வாய், கழுத்து மற்றும் தொண்டை புற்று நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதும் இந்தியர்களே. மேலும் புகையிலைப் பயன்பாட்டால் பெண்களும் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
இந்தியாவில் இருந்து புகையிலையை ஒழிப்பது ஒரே நாளில் நடந்துவிடும் காரியமல்ல என்றாலும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக பள்ளிகளிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள்ளேயே பல இடங்களில் கிடைப்பதுதான் கொடுமையான விஷயம். புகையிலைப் பொருட்களை அறவே புழக்கத்தில் இல்லாமல் செய்வது அரசின் கையில்தான் இருக்கிறது என்கிறார்கள் புகையிலைக்கு எதிராகப் போராடுபவர்கள். நாட்டுக்கும், நாட்டு மக்களின் நலனுக்கும் கேடு விளைவித்து ஒட்டுமொத்த வளர்ச்சிக்கே தடையாக இருப்பது புகையிலை என்பதை உணர்த்தும் நாள் இன்று.