சிறப்புக் களம்

சர்ச்சைகளின் நாயகனான உலக நாயகன்!

சர்ச்சைகளின் நாயகனான உலக நாயகன்!

webteam

சர்ச்சைக்குரியவற்றை கையில் எடுக்கிறாரா அல்லது அவரது படங்கள் வேண்டுமென்றே சர்ச்சையாக்கப்படுகிறதா என்று பிரித்துக் கூறமுடியாத அளவிற்கு தொடர்ந்து சர்ச்சைகளுக்குள் சதிராடுகிறார் கமல்.

தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சியில் அவர் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. அந்த சர்ச்சைகளுக்கு முக்கியக் காரணம் நிகழ்ச்சியை கமல் நடத்துவது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி பயன்படுத்திய சேரி பிஹேவியர் என்ற வார்த்தை கடும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு பதிலளித்த கமல் ‘அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கலந்துரையாடலில் தவறில்லை தெருவில் இதைவிட மோசமாக பேசுகிறார்கள். ஜாதி இன்னும் நாட்டில் உள்ளது. ஜாதி பற்றி யார்தான் பேசவில்லை..? எனக்கூறி எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி இருக்கிறார். 

முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இழிவுபடுத்தியதாகவும், இந்த நிகழ்ச்சி சமூகத்தை சீரழித்து வருவதால் நிகழ்ச்சியை நடத்தும் கமலை கைது செய்ய வேண்டும் எனவும் இந்து மக்கள் கட்சியினர் சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர். அதற்கு பதிலளித்த கமல் ‘தமிழ்த் தாய் வாழ்த்தை கிண்டல் செய்யவில்லை. அதைக் கற்றுக் கொடுப்பது எப்படி அதை இழிவு படுத்துவதாகும்? கிரிக்கெட் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி முக்கியம். என்னை நம்பும் மக்களுக்கு விருந்து அளிக்க கடமைப்பட்டுள்ளேன். முத்தக்காட்சியில் சீரழியாத சமூகம் பிக்பாஸில் சீரழிந்து விடுமா? அடுத்த வீட்டில் நடப்பதைப் பார்த்துத்தான் கற்றுக் கொள்ள முடியும் என பதிலளித்திருந்தார். அந்த நிகழ்ச்சி மூலம் இன்னும் என்னென்ன சர்ச்சைகளில் கமல் சிக்கப்போகிறாரோ? சரி இருந்துவிட்டுபோகட்டும்.. சர்ச்சைகளில் சிக்குவது கமலுக்கு புதிதல்ல. 

கமலஹாசன் இயக்கத்தில் 1999ல் வெளிவந்த 'ஹேராம்' என்ற பெயருக்கே கடும் எதிர்ப்பு கிளம்பியது. படம் வெளியாகும் முன்பே காந்தியை இழிவு செய்யும் படமாக இருக்கலாம் ஆகையால் படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது. அடுத்து ’சண்டியர்’ என தனது படத்திற்கு பெயர்  வைத்தார் கமல். தங்களுக்கெதிரான அடக்குமுறை ஜாதினரின் புகழ்பாட அந்தப் பெயை வைத்துள்ளார் என பொங்கி எழுந்து விட்டனர் மற்றொரு பிரிவினர். பின்னர் விருமாண்டி என பெயரை மாற்றினார் கமல். 

விஸ்வரூபம் குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்துவதாக எழுந்த சர்ச்சையில் நாட்டைவிட்டே ’போய்விடுவேன் ’ என அவர் நொந்து கொள்ளும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது பிரச்னை. அடுத்து வந்த ’உத்தம வில்லன்’  இந்துக்களை இழிவு படுத்துகிறது என சர்ச்சை எழ கோதாவில் குதித்தது ஒரு கூட்டம்.  ’சபாஷ் நாயுடு’ படத்தை அவர் தொடங்கும்போதே இதுவும் ஒரு குறிப்பிட்ட சாதியினரை இழிவுபடுத்துகிறது என்கிற முணுமுணுப்பு ஓங்கி ஒலித்தது. படம் வெளியாகும்போது ’சபாஸ் நாயுடு’வுக்கு எதிர்ப்புகுரல்கள் வலுக்கும் என்கிறார்கள் திரைத்துறையினர். அவரது படங்கள் வெளியாகும்போது மட்டுமே இருந்து வந்த சர்ச்சைகள் இப்போது அவர் சொல்லும் கருத்துக்களுக்கும் உருவாகி வருகிறது. 

’பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மகாபாரதத்திலேயே நடந்தது. அந்தப் புராணம் பெருமையுடன் படிக்கப்படுகிறது என அவர் கூறிய கருத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரையுலகில் அவ்வப்போது சர்ச்சைகளைச் சமாளித்து வந்த கமல், சின்னத்திரையில் ஒரே நிகழ்ச்சி மூலம் தினந்தோறும் சர்ச்சைகளுக்குள் சிக்கி சதிராடுகிறார்.