சிறப்புக் களம்

மனைவி அமைவது மட்டுமல்ல, நட்பும்தான்.. நட்பில் நீங்கள் பாக்கியசாலியா? #WorldFriendshipDay

Rasus

வேருக்கும் தெரியாமல், மொட்டுக்கும் வலிக்காமல் ஒரு பூ எப்படி மலர்ந்து மணம் வீசுகிறதோ அப்படித்தான் இருக்கும் ஒரு உண்மையான நட்பும். அது எங்கு மலர்ந்தது? எப்படி மலர்ந்தது? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஆழமாக வேர் விட்டு அழகாக மணக்கும். அந்த நட்பை பார்க்கும் மற்றவர்களின் கண்களையும் அடடா போட வைக்கும். அப்படிப்பட்ட நட்பை கொண்டாட ஒருநாள் வேண்டாமா...? ஆம் அதற்காக ஒருநாள்.. நண்பர்கள் நாள்.

மணக்காத பூ உண்டா?
மயங்காத கண்கள் உண்டா?
விடியாத இரவு உண்டா?
முடியாத காரியம் உண்டா?
நட்பு இல்லாத வாழ்க்கை உண்டா?
நிச்சயம் யாருக்குமே நட்பு இல்லாத வாழ்க்கை என்ற ஒன்று இருக்கவே இருக்காது.

தவண்டு, தவண்டு மெல்ல மெல்ல நடக்க பழகும் நாளு குழந்தைகளை ஒரு அறையில் விட்டால்கூட அவர்கள் ஒன்றுக்கொன்று நட்பாகிவிடுவார்கள். அதேபோல இன்றோ, நாளையோ என இறுதி உயிர் மூச்சை பிடித்துக்கொண்டு மரணத்தின் பிடியில் இருக்கும் ஒரு முதியவரின் காதருகே சென்று, உன் நண்பன் வந்திருக்கிறான் என பெயரை சொல்லி பாருங்கள்.. அவரின் முகத்தில் ஒரு முறை வந்து செல்லும் புன்னகையே அந்த நட்பின் ஆழத்தை உணர்த்தும். அந்தளவிற்கு சாதி, மத, இன, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கடந்து பூக்கும் நட்பூ என்றும் உதிராதது.

ஒருதட்டில் ஒன்றாக உணவருந்தி, ஒரே சட்டையை மாற்றி போட்டுக்கொண்டு, முஸ்தபா முஸ்தபா பாடலை முணுமுணுக்கும் நட்புக்கள் கிடைக்கப்பெற்றவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்தான். ஆனால் அதையும் தாண்டி ஒரு நட்பு இருக்கிறது. ஆம் அந்த நட்பு கிடைத்தவர்கள்தான் பாக்கியசாலிகள். யார் ஒருவரிடத்தில், உங்களை கண்ணாடிபோல் நீங்கள் அப்படியே காட்டிக்கொள்ள முடிகிறதோ அத்தகைய ஒருவர் கிடைத்தால் நீங்களும் பாக்கியசாலிகள்தான்.

சின்ன சின்ன ஆசைகள், தோல்விகள், துக்க துயரங்கள், காயங்கள், குட்டி குட்டி குற்றங்கள், கோபதாபங்கள் என அத்தனை உணர்வுகளையும், தடுப்புகள் இல்லாமல் கடலில் கலக்கும் ஆற்று நீரைப்போல ஒருவரிடத்தில் உங்களால் கொட்டிவிட முடிகிறதென்றால், அப்படி ஒரு நட்பு உண்மையாகவே உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்றால் நீங்கள் பாக்கியசாலிதான்.

பொதுவாக இந்த மாதிரியான நட்புகள் எல்லோருக்கும், எல்லோரிடத்திலும், எல்லா நேரமும் கிடைப்பதில்லை. உங்களது ஆத்ம உணர்வுகளை, திரைக்காட்சிபோல் எல்லோரிடத்திலும் வழிந்துசென்று சொல்ல பொதுவாகவே யாருக்கும் பிடிக்காது. சிலரிடத்தில்தான் நம் அத்தனை உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள முடியும். அதற்கு முன் அந்த நபர் உங்களது நம்பிக்கையை பெற்றவராக இருக்க வேண்டும். நீங்கள் எப்படி மனம்விட்டு பேசுபவறாக இருக்கின்றீர்களோ, அதேபோல அவரும் இருக்க வேண்டும். உங்களது வார்த்தைகளை காதுகொடுத்து கேட்க வேண்டும். உங்களது மகிழ்ச்சியை அவரது மகிழ்ச்சியாக கருத வேண்டும். அதேபோல உங்களது தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். ஒரு கண்ணாடி முன் நீங்கள் நிற்கும்போது, உங்களது உருவத்தை எப்படி அச்சு அசலாக அப்படியே அது காட்டுகிறதோ அதேபோல உங்களது உங்களது நிறை, குறைகளை சரியாக காண்பிப்பவராக உங்கள் நட்பு இருக்க வேண்டும். அதற்கும் மேல் அவர்கள் உங்களது நம்பிக்கைக்குரியவராக, உங்களது நலனில் அக்கறையுள்ளவராக, ரகசியம் காப்பவராக இருக்க வேண்டும்.

அதனால்தான் கண்ணதாசனே

நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே,

நல்லநண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்கிறார்

உங்களுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைக்கும்போது உங்களது வாழ்க்கையின் வளர்ச்சியானது அடுக்கி வைக்கும் கற்களைபோல உயர்ந்துகொண்டே போகும். அதேசமயம் மோசமான நண்பர்கள் கிடைத்தாலோ, வாங்கி வைத்த ஐஸ்க்ரீம் மீது தண்ணீர் ஊற்றினால் எப்படி வீணாகப்போகுமா அப்படியே வீணாகிவிடும் உங்களது வாழ்க்கையும். அதனால் வலையை வீசினால் கிடைக்கும் மீன்களைபோல அல்லாமல், ஆழக்கடலில் தேடி எடுக்கும் முத்துகளைபோல தேடி எடுங்கள் உங்களது நட்புகளை.. அப்படி ஒரு முத்துபோல நட்பு கிடைத்தால் உங்களது வாழ்க்கை வசந்தமாகும். வாழ்நாள் அதிகமாகும். அனைவருக்கும் இனிய நண்பர்கள்தின நல்வாழ்த்துகள்