சிறப்புக் களம்

ஊரடங்கு காலத்தில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ : வரமா ? சாபமா ?

ஊரடங்கு காலத்தில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ : வரமா ? சாபமா ?

webteam

வேகமாக சென்றுகொண்டிருந்த உலகை பிடித்து நிறுத்தியுள்ளது கொரோனா வைரஸ். எந்நேரமும் வாகன நெரிசல், தொழிற்சாலைகள் சத்தம், புகை, கூட்ட நெரிசல் என பரபரப்பாக இருந்த நகரங்களை ஆளில்லாத சாலைகளாக வெறிச்சோடச் செய்துள்ளது. உலகையே ஊரடங்கு எனும் கூண்டிற்கு தள்ளி மிரட்டிக்கொண்டிருக்கிறது கொரோனா. அசராமல் வேலை செய்த அலுவலகப் பணியாளர்களை வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற முறைமூலம் வீட்டிற்குள்ளே முடக்கியுள்ளது. இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது வரமா ? சாபமா ? என்ற பட்டிமன்றமே நடத்தும் அளவிற்கு சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் பறந்துகொண்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க வேண்டும், அதேசமயம் பணிகள் நின்றுவிடக் கூடாது என்பதற்காக அலுவலங்கள் எடுத்த துரித நடவடிக்கையே வொர்க் ஃப்ரம் ஹோம் எனும் முறை. இந்த முறையால் பணியாளர்கள் பத்திரப்படுத்தப்பட்டாலும், வீடு இருக்கும் சூழ்நிலையில் அலுவலகப் பணியை சமாளிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல என்கின்றனர் தந்தைகளும், தாய்மார்களும். வீட்டுப் பணிகளை முடித்துவிட்டு அலுவலகத்திற்கு செல்லும் குடும்பப் பெண்கள் தற்போது வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர்.

அலுவலகத்தில் அவர்கள் ஊழியராக மட்டுமே இருப்பார்கள் ஆனால் வீட்டிலோ அம்மா என்ற பெரும் பொறுப்பை சுமக்கின்றனர். ஒரு பெண் ஊழியரின் அலுவலகப் பணிகளை கணவர் புரிந்துகொண்டாலும், கைக்குழந்தையோ அல்லது பள்ளிக்கு செல்லாத சிறு குழந்தையோ அல்லது பள்ளிக்கு செல்லும் மழலையர்களோ புரிந்துகொள்வது ஆகாத காரியம்.

அவர்களை பொறுத்தவரையில் அன்னை இருந்தால் கொண்டாட்டம். உண்ண உணவு கேட்டுக்கொண்டிருப்பார்கள் அல்லது எதையாவது கொட்டிக்கவிழ்த்துக்கொண்டிருப்பார்கள் அவர்களை பார்த்துக்கொள்வதே எந்த ஒரு தாய்க்கும் பெரும் போராட்டம், இதற்கிடையே அலுவலகப் பணிகள் என்றால் என்ன செய்ய முடியும். இதுதவிர வீட்டு வேலைகள் எனும் பெரும் பொறுப்பு உண்டு. இதேபோன்று கணவர்களுக்கு கடைக்கு செல்வது, தண்ணீர் பிடிப்பது எனும் பொறுப்புகளும் வந்து சேரும். கோடைக்காலம் என்பதால் தண்ணீர் வண்டி வரும்போது அதை பிடிக்காவிட்டால் பின்னர் சிரமம் தான். இதற்கு அலுவலகத்திற்கே சென்றிருக்கலாம் எனப் பல பேர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் காலையில் அவசர அவசரமாக வேலைகளை முடித்துவிட்டு குழந்தைகளை விட்டுவிட்டு அலுவகத்திற்கு ஓடும் தாய்மார்களோ அல்லது தந்தையர்களோ தற்போது முழு நேரமும் தங்கள் குழந்தைகளுடன் இருக்கின்றனர். கணவன் - மனைவி இருவரும் அலுவகத்திற்கு செல்லும் குடும்பத்தில் தற்போது இருவரும் ஒன்றாக உள்ளனர். பணி நேரம் முடிந்ததுமே குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நேரத்தை செலவிடுகின்றனர்.

வயது முதிர்ந்த பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க முடியாத பிள்ளைகள் தற்போது தங்கள் பெற்றோருடன் நேரத்தை செலவிட்டு, அருகில் இருந்து பார்த்துக்கொள்கின்றனர். ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிக் கிடந்த கூட்டம் மீண்டும் பாரம்பரிய விளையாட்டுகளின் பக்கம் திரும்பியுள்ளது. இதற்கெல்லாம் மேலாக கொரோனாவை ஒழிக்க அனைவரும் வீட்டில் பாதுகாப்புடன் இருக்கின்றனர்.