சிறப்புக் களம்

அனைத்து பாடத்துக்கும் ஒரே ஆசிரியர் - சாதனை அல்ல வேதனை

அனைத்து பாடத்துக்கும் ஒரே ஆசிரியர் - சாதனை அல்ல வேதனை

webteam

 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செங்கரையில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. மலை வாழ் மக்களின் குழந்தைகள் தடையின்றி கல்வி பெற தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செயல்படுகிறது. இப்பள்ளியில் செங்கரை, பவர்காடு, ஒத்தகடை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்களின் 325 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேல்நிலை வகுப்பில் இரண்டு பிரிவுகள் செயல்படுகிறது. இதில் கணித ஆசிரியர் மட்டுமே உள்ள நிலையில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லாமல் கடந்த 9 மாதங்களாக நிலவி வருவதாகவும் இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நாமக்கல்லில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் 428 மதிப்பெண் பெற்ற நிலையில் தங்கள் ஊரில் உள்ள பள்ளியில் சேர்ந்த பயின்று 12-ம் வகுப்பு தேர்வில் 803 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்ததாகவும், மேல்நிலை வகுப்பில் போதிய ஆசிரியர்கள் ஆய்வு கூட வசதி இல்லாததால் அதிகளவு மதிப்பெண் பெற முடியவில்லை எனவும், இதனால் விவசாய துறையில் படிக்க வேண்டும் என்ற தனது கனவு தகர்ந்து விட்டதாக கூறுகிறார் முன்னாள் மாணவி கெப்சியால் ராஜாமணி

10-ம் வகுப்பில் 457-ம் மதிப்பெண் எடுத்த நிலையில் தங்கள் ஊர் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் எடுத்து தங்களது பள்ளிக்கும், ஊருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் 11-ம் வகுப்பில் செங்கரை ஜி.டி.ஆர் பள்ளியில் சேர்ந்ததாகவும், ஆனால் இந்த பள்ளியில் கணித பாடத்திற்கு மட்டுமே ஆசிரியர் உள்ளதாகவும் இதனால் தனது 12-ம் வகுப்பு பாடங்களை எப்படி படிப்பதே என தெரியவில்லை என்றும் உடனடியாக அனைத்து பாடங்களுக்கும் நிரந்தர ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்கிறார் மாணவர் ஜான் கிரிஸ்டோபர் ராஜ் .

மலை வாழ் மக்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க அரசின் சார்பில் உண்டு உறைவிட பள்ளிகள் தொடங்கப்பட்டாலும் அது தங்களது படிப்பிற்கு உதவி புரியவில்லை என்றும், இங்கு போதிய ஆசிரியர்கள், ஆய்வு கூட வசதி இல்லாமல் தங்களது கல்வியை முழுமையாக கற்க முடியாத நிலை உள்ளதால் பலர் தங்களது கல்வியை கைவிடும் நிலையே உள்ளதாகவும் இதனை மாற்றி உடனடியாக ஆசிரியர்களையும் போதிய வசதிகளையும் செய்து தர வேண்டும் என்கிறார் மாணவி செர்லி 

தமிழக அரசு மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்கும், கல்விக்கும் அதிகளவு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் கொல்லிமலையில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாமல் செயல்படும் அவல நிலையே உள்ளதாகவும், உடனடியாக அரசு அனைத்து காலி பணியிடங்களை நிரப்பி கொல்லிமலை மாணவர்கள் அந்தந்த பகுதியிலே பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறா தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் குப்புசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்புனர் சந்திரசேகரன் அவர்களிடம் கேட்ட போது இது குறித்து மாநில பழங்குடியின நலத்துறை இயக்குனரிடம் தெரிவித்துள்ளதாகவும், அவருடன் சேர்ந்து ஆய்வு செய்து போதிய ஆசிரியர்களையும், வசதிகளையும் அரசு பள்ளிக்கு செய்து தர நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார்.