கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவிவருவதால், படுக்கை புண் நோயால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சைக்கு, தொடர்ந்து பல மருத்துமனைகளில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் தாங்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக, முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர்.
முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், சக்கர நாற்காலியுடன் உதவியுடன் மட்டுமே உட்கார முடியும். மற்றபடி, படுக்கையில் இருப்பார்கள். இப்படி இருப்பதால், இவர்களுக்கு முதுகில் அடிக்கடி புண் ஏற்படும். இது, படுக்கை புண் எனப்படும். படுக்கை புண் நோயால் அவதிப்படும் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அதற்கென மருத்துவமனையில் அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்வர்.
அரசு மருத்துவமனைகளில் கூட, இப்படியான நிராகரிப்புகள் நிகழ்ந்திருப்பதாக மாற்றுத்திறனாளிகள் குறிப்பிடுகின்றனர். இந்த அனுமதி மறுப்பால், கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 16 பேர் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் உயிர் இழந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் 49 பேர் இறக்கும் தருவாயில் உள்ளதாக இவர்களுக்கான அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஏறத்தாழ 2,300 முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் இருக்கும் நிலையில், கொரோனாவை காரணம் காட்டி அறுவை சிகிச்சை செய்யாமல் இருப்பது, வரும் நாள்களில் உயிரிழப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று அஞ்சுகின்றனர் அவர்கள்.
அதிகபட்சமாக 50%-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கவும் செய்கிறார்கள் அவர்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கின்றனர்.
இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை செய்யவில்லை என்றால், அவர்கள் மரணிப்பது உறுதி என்கின்றனர். அசம்பாவிதத்தை தடுக்க, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக, மாவட்ட நிர்வாகம் அல்லது மாநில சுகாதாரத்துறை தலையிட்டு தமிழகத்தில் உள்ள ஐந்து மண்டலங்கள் அல்லது நான்கு மண்டலங்களில் சிறப்பு மருத்துவ வசதி ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள படுக்கை புண் நோய் உள்ள மாற்றுத் திறனாளிகளை அழைத்துவந்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்க இயலாதென்றால், தமிழகத்தில் உள்ள மண்டல மருத்துவமனைகளில், தங்களுக்கென தனி இடம் ஒதுக்கி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதுவும் இயலாதபட்சத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் குறைந்தது 5 படுக்கைகளாவது அமைத்து தங்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்றும் தங்களின் குறைந்தபட்ச கோரிக்கையை சுகாதாரத்துறையிடம் முறையிட்டுள்ளனர்.
- ஜோதி நரசிம்மன்