சிறப்புக் களம்

"கூகுள் குரோம் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்" - பிரைவசி ஆர்வலர்கள் எச்சரிப்பது ஏன்?

JustinDurai

'கூகுள் குரோம்' முன்னணி பிரவுசராக இருக்கலாம், வேகமான செயல்பாடு கொண்டதாக இருக்கலாம், ஆனால், இந்த பிரவுசர் பிரச்னைக்குறியது என்பது உங்களுக்குத் தெரியுமா? - பிரைவசி பாதுகாவலர்கள் இப்படித்தான் சொல்கின்றனர். அது மட்டும் அல்ல, குரோம் பிரவுசரை தொடர்ந்து பயன்படுத்துவது பயனாளிகளின் பிரைவசிக்கு ஆபத்தானது என்றும் எச்சரிக்கின்றனர்.

"இணைய நடவடிக்கைகளை பின் தொடர்வதில் (Web tracking) தனது கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்வதற்காக கூகுள் நேரம் எடுத்துக்கொள்கிறது" என்று பிரைவசியை முதன்மையாக கொண்ட 'பிரேவ்' பிரவுசர் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த எச்சரிக்கைக்கும், விமர்சனங்களுக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது கூகுள் குரோமிற்கு அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள அப்டேட். இதை அப்டேட் என்பதைவிட கூகுளின் பின்வாங்கல் என்றும் சொல்லலாம்.

குரோம் பிரவுசர்களில் இருந்து மூன்றாம் தரப்பு குக்கீ மென்பொருள்களுக்கான ஆதரவை படிப்படியாக விலக்கிக்கொள்ள இருப்பதாக கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிவிப்பில் இருந்துதான் கூகுள் பின்வாங்கியிருக்கிறது. இதற்கு மாறாக, 2023-ம் ஆண்டின் பிற்பகுதியில் இதை செய்ய இருப்பதாக கூகுள் தெரிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பு கூகுளின் சறுக்கலாக அமைவதோடு, அதன் உள்நோக்கத்தையும் உணர்த்துவதாக பிரைவசி ஆர்வலர்கள் கருதுகின்றனர். 'கூகுளாவது, குக்கீகளை விலக்குவதாவது' என அவர்கள் கேலியாக கேட்கின்றனர். கூகுளின் வர்த்தக நோக்கமும், அதற்காக பயனாளிகளை பின்தொடரும் பழக்கமும் இதன்மூலம் உறுதியாக இருப்பதாக விமர்சிக்கின்றனர்.

இப்போது 'குக்கீ' என்றால் என்ன? அதை ஏன் கூகுள் விலக்கிக்கொள்ள வேண்டும்? அதிலிருந்து கூகுள் பின் வாங்குவதால் என்ன பிரச்னை? போன்ற கேள்விகள் எழுந்தால், இவற்றுக்கான பதில்களை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

'குக்கீ' என்பது இணையத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருளாகும். அடிப்படையில் வரி வடிவ கோப்பாக அமையும் குக்கீ, குறிப்பிட்ட பயனாளியை பிரவுசர் வாயிலாக இணையதளங்கள் அடையாளம் கண்டுகொள்ள வழிசெய்கின்றன. இந்த அடையாளம் காணுதல் மூலம்தான், இணையதளங்கள் பயனாளிகளுக்கு ஏற்ற சேவைகளை வழங்குகின்றன.

குக்கீகளில் பல ரகங்கள் இருக்கின்றன. முதல் ரகம், தற்காலிகமான குக்கீகள். இணையவாசிகள் ஓர் இணையதளத்தை பயன்படுத்தும்போது மட்டும் இந்த குக்கீகள் செயல்பாட்டில் இருக்கும், அதன் பிறகு பயனாளிகளை மறந்துவிடும். இரண்டாவது ரக குக்கீகள் நிரந்தமாக இருக்கும். இணையதளங்களில் சேவைகளை பயன்படுத்தும்போது, பயனாளிகளை அடையாளம் கண்டு அனுமதிக்க இவை தேவைப்படுகிறது.

இந்த இரண்டும் குக்கீகளும் முதல் தரப்பு வகையைச் சேர்ந்தவை. சம்பந்தபட்ட இணையதளங்களால் இவை நிறுவப்படுகின்றன. குக்கீகள் தொடர்பான சட்டம் காரணமாக, இவற்றை நிறுவ பயனாளிகள் அனுமதி தேவை. இதற்கு மாறாக, தொடர்பில்லாத மூன்றாம் தரப்பு நிறுவனங்களால் பயனாளிகள் பிரவுசர் மூலம் நிறுவப்படும் குக்கீகள் இருக்கின்றன. இந்த மூன்றாம் தரப்பு குக்கீகளே வில்லங்கமாக கருதப்படுகின்றன. ஏனெனில், இவை பெரும்பாலும் விளம்பர நிறுவனங்களால் நிறுவப்படுவதால், பயனாளிகளை குறிவைத்து விளம்பரங்களை அளிக்க, பயனாளிகளின் இணைய செயல்பாடுகள் அனைத்தையும் பின் தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கின்றன.

பயனாளிகள் எந்த வகையான தளங்களுக்கு செல்கின்றனர், என்ன பொருள்களை வாங்குகின்றனர், எந்தவிதமான கருத்துகளை பகிர்கின்றனர் என்பது போன்ற விவரங்களை எல்லாம் குக்கீகள் மூலம் சேகரித்து பயனாளிகள் பற்றிய முழுமையான சித்திரத்தை உருவாக்கி கொள்கின்றன. இதன் அடிப்படையில் விளம்பர வலை விரித்து வருவாய் ஈட்டுகின்றன.

இந்த வகை தகவல் சேகரிப்பு பயனாளிகளின் பிரைவசியை பாதிப்பதாக கருதப்படுகிறது. இணையத்தில் ஒருவர் என்ன செய்தாலும், அது பெரும்பாலும் குக்கீகள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் புகார் இருக்கிறது.

மூன்றாம் தரப்பு குக்கீகள் தொடர்பாக பிரைவசி வல்லுனர்களும், ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், 'ஃபயர்பாக்ஸ்' போன்ற பிரவுசர்களில் குக்கீ நீக்க வசதி எல்லாம் வந்துவிட்டது. இந்த விஷயத்தில் கூகுளும், குரோமும் குற்றவாளி கூண்டில் நிற்கின்றன.

கூகுள் தவிர ஃபேஸ்புக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தகவல் சேகரிப்பிற்காக மூன்றாம் தரப்பு குக்கீகளை பயன்படுத்தி வருகின்றன என்றாலும், முன்னணி பிரவுசரான குரோமின் தாய் நிறுவனம் என்ற முறையில் கூகுள் கூடுதலாக விமர்சனத்திற்கு உள்ளாகிறது.

உளவு மென்பொருள் என்றும் விமர்சிக்கப்படும் குக்கீகளை பிரவுசர் மூலமே பயனாளிகள் கம்ப்யூட்டரில் நிறுவ முடியும் என்பதால், பெரும்பாலானோர் பயன்படுத்தும் குரோம் பிரவுசர் இதற்காக விமர்சிக்கப்படுவதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

இணைய விளம்பரம் மூலம் தனது வர்த்தக ராஜ்ஜியத்தை வளர்த்துக்கொண்டுள்ள கூகுள் பயனாளிகளின் தகவல்களை அறுவடை செய்து வருவது பரவலாக அறியப்பட்டதே. எனினும், பிரைவசி தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், குரோம் குக்கீகளுக்கான கடும் விமர்சனத்திற்கு இலக்கான கூகுள், கடந்த மார்ச் மாதம், மூன்றாம் தரப்பு குக்கீகளுக்கான ஆதரவை அடுத்த ஆண்டு முதல் விலக்கி கொள்வதாக அறிவித்தது.

இதற்கான அறிவிப்பில், குக்கீ மூலமான தகவல் சேகரிப்பால், 72 சதவீத இணையவாசிகளுக்கு இணையம் மீது நம்பிக்கை போய்விட்டது என கூகுள் தெரிவித்திருந்தது. 81 சதவீதம் பேர் தரவுகள் சேகரிப்பால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்திருக்கின்றனர் என்றும் கூகுள் ஆய்வு முடிவு ஒன்றை மேற்கோள் காட்டி குறிப்பிட்டிருந்தது.

இதற்கான தீர்வாக குரோமில் மூன்றாம் தரப்பு குக்கீகளை ஒழித்துக்கட்ட இருப்பதாக அறிவித்தது. அப்போதே கூகுளின் இந்த அறிவிப்பில் பலருக்கு சந்தேகம் இருந்த நிலையில், தற்போது கூகுளே இதிலிருந்து பின் வாங்கியிருக்கிறது. 2023-ம் ஆண்டில்தான் இதை செய்ய இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.

ஆக, 2023 வரை கூகுள் குரோம் பயனாளிகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது. இதன் பொருள் குரோம் பிரவுசரை பயன்படுத்துவது பிரைவசி நோக்கில் பாதுகாப்பனது அல்ல என்கின்றனர் பிரைவசி ஆர்வலர்கள்.

போட்டி பிரவுசரான பிரேவ் மற்றும் போட்டி தேடியந்திரமான டக்டக்கோ, கூகுளின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளன. (பிரேவ் அண்மையில் தேடல் வசதியையும் அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது).

கூகுளின் இந்த திடீர் பல்டிக்கு வர்த்தக மற்றும் விளம்பர காரணங்கள் முதன்மையாக சொல்லப்படுகின்றன. அதோடு, குக்கீ விஷயம் தொடர்பாக யூகேவில் நடைபெற்று வரும் வழக்கும் முக்கிய காரணமாக அமைகிறது. இவற்றை எல்லாம் விட, குக்கீக்கு மாற்றாக கூகுள் முன்வைக்கும் FLoC எனும் முறை இன்னும் பிரச்னைக்குறியதாக இருப்பதுதான் என்கின்றனர்.

இந்த புதிய தகவல் சேகரிப்பு முறை பிரைவசி பாதுகாப்புடன் அனாமேதயமாக தகவல்கள் திரட்ட வழி செய்யும் என்றும் கூகுள் தெரிவித்தாலும் பிரைவசி வல்லுனர்கள் இதில் உள்ள ஓட்டைகளை குத்திகாட்டி பெரிதாக்கி கூகுள் வாதத்தை தகர்த்துள்ளனர்.

மாற்று முறை விமர்சனத்திற்குள்ளானதாலும், விளம்பரதாரர்கள் நெருக்கடி காரணமாகவும் கூகுள் வேறு வழியில்லாமல் குக்கீகளை தொடர்கிறது.

கூகுளுக்கு வேறு வழியில்லாவிட்டாலும் பயனாளிகளுக்கு வேறு வழி இருக்கிறதே, எனவே குரோம் பிரைவசி ஆபத்தை உணருங்கள் என்கின்றனர். ஆக, குரோமில் இருந்து மாறுங்கள். அல்லது குறைந்தபட்சம், குரோம் பிரவுசரில் அனுமதிக்கப்படும் குக்கீ தொடர்பான பிரைவசி வசதியையேனும் முழுமையாக பயன்படுத்துங்கள்.

- சைபர்சிம்மன்