சிறப்புக் களம்

என்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் ?

என்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் ?

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை சந்நிதானத்தின் நடை திறக்கப்படுகிறது. எப்போதும், இல்லாத வகையில் இம்முறை சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் மிகப் பெரிய பரபரப்புக்கு காரணம். இப்போது சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளபோதும், ஐயப்ப பக்தர்களும் இந்து மத அமைப்புகளும் கோவிலுக்கு வரும் பெண்களை நிலக்கல் என்ற இடத்திலேயே தடுத்து நிறுத்தி விடுகின்றனர். இதன் காரணமாக சாதாரணமாக வாகன நிறுத்துமிடமாக இருந்த நிலக்கல் இப்போது பேசுபொருளாக மாறி வருகிறது.

பொதுவாக சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்புக்கு 5 முதல் 7 நாட்கள் வரை திறக்கப்படும். பின்பு கோவிலின் நடை அடைக்கப்படும். ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை தொடர்ந்து ஒரு மண்டலத்துக்கு கார்த்திகை மாதம் முதல் தேதியில் திறக்கப்படும். அதாவது இந்தாண்டு மண்டலப் பூஜைக்கு கோவிலின் நடை நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பின்பு, மண்டலப் பூஜை நிறைவடைந்து டிசம்பர் 27 ஆம் தேதி இரவு கோவிலின் நடை அடைக்கப்படும். இந்தக் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்வார்கள். பின்பு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பின்பு பிரசித்திப் பெற்ற மகர விளக்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி நடைபெறும். பின்பு கோவிலின் நடை ஜனவரி 20 ஆம் தேதி அடைக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் முக்கியமான இரண்டு வழிகளில் செல்வார்கள். ஒன்று சிறு வழிப்பாதை மற்றொன்று பெரு வழிப்பாதை. இதில் பெரு வழிப்பாதை என்பது எருமேலி வழியாக ஏறக்குறைய 48 கிலோ மீட்டர் காட்டு வழிப்பயணமாக சென்று பம்பா வந்தடைந்து பின்பு, சபரிமலை ஐயப்பன் சந்நிதானத்துக்கு செல்வது. ஆனால் இந்த பெரு வழிப்பாதை டிசம்பர் மாத இறுதியில் மட்டுமே பெரும்பாலான பக்தர்கள் செல்வார்கள். சிறுவழிப்பாதை என்பது பம்பாவுக்கு நேரடியாக பேருந்திலோ, காரிலோ, வேன்களிலோ செல்லலாம். அங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் 4 கி.மீ. தூரம் மலை வழிப்பாதையாக சென்று சபரிமலைக்கு செல்லலாம்.

அது என்ன நிலக்கல் ?

நிலக்கல் என்ற இடம் மணடல மற்றும் மகர விளக்கு காலங்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக கேரள அரசு அமைத்துக்கொடுத்த இடம். நிலக்கல்லில் ஒரு சிறிய சிவன் கோவில் மட்டுமே இருக்கிறது. 25 ஆண்டுகள் முன்பு வரை நிலக்கல் சிவனை வழிப்படும் இடம். அப்போதெல்லாம் கேரள அரசு வாகன நிறுத்துமிடத்தை அமைக்கவில்லை. அனைத்து வாகனமும் பம்பாவில்தான் நிறுத்தப்படும். இப்போது  சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வேன், பேருந்துகளில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை பம்பையில் இருந்து 18 கி.மீ, தொலைவில் இருக்கும் நிலக்கல்லில் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சொந்த கார்களில் வருபவர்கள் மட்டுமே பம்பை, அதைச் சுற்றியுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படுவர். தனியார் வேன், பேருந்துகளில் வரும் பக்தர்களை ஓட்டுநர்கள் பம்பையில் இறக்கிவிட்ட பிறகு நிலக்கல் சென்று வாகனங்களை நிறுத்த வேண்டும். சாமி தரிசனம் முடித்துவிட்டு வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து அரசுப் பேருந்து மூலம் நிலக்கல் செல்ல வேண்டும். நிலக்கல்லில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகா என மாநிலங்கள் வாரியாக பிரித்து வாகனம் நிறுத்தம் இடம் அமைக்கப்பட்டிருக்கும்.

அந்நதந்த மாநில வாகனங்கள் குறிப்பிட்ட இடத்தில்தான் நிறுத்தப்படும். நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் ஏதும் வாங்கப்படுவதில்லை. இந்தப் பகுதியில்தான் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை வருவதற்கான "ஹெலிபேட்" அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கல் என்பது பம்பா மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கான நுழைவு வாயில். அதனால்தான் பெண்கள் நிலக்கல்லில் குறிவைக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள். இத்தனைகாலமாக வெறும் வாகன நிறுத்த இடமாக பார்க்கப்பட்ட நிலக்கல் இப்போது பரபரப்பான இடமாக மாறியுள்ளது.