சமீபத்தில் உலகத்தமிழர் மாநாடு கம்போடியாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து சென்ற பல பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், மொழி ஆர்வலர்கள் என பலரும் வியந்து பேசிய விஷயம் ஒன்றே ஒன்றுதான். பனை மரம். கம்போடியாவின் அடையாளங்களுள் ஒன்றாகி போயிருக்கிறது பனை மரம். அதனை எப்படி எல்லாம் பயன்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் அந்நாட்டு மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
வீட்டையும் இடங்களையும் அழகாக்க நாமெல்லாம் குரோட்டன் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். தொட்டிகளில் ஆலமரம் வளர்க்கிறோம். ஆனால் கம்போடியாவில் பனைமரம் இல்லாத பூங்காக்கள் இல்லை. மிக அழகாக பரமாரித்து, அழகு மரமாக மாற்றியிருக்கிறார்கள் அந்நாட்டு மக்கள். ஒரு மரத்தின் அனைத்து பகுதியும் அதில் உற்பத்தியாகும் அனைத்தும் பயன்படும் மரம் எதுவென கேட்டால் அது பனைமரம். அத்தகைய மேன்மை தெரிந்தே இதனை இன்றளவும் வணிகமாகவும் அடையாளமாகவும் பேணி பாதுகாக்கிறோம் என்கின்றனர் அந்நாட்டு மக்கள்.
பனை மரத்தில் இருந்து கள் இறக்குவது மட்டுமே நம் அனைவருக்கும் பட்டென நினைவுக்கு வரும் விஷயம். ஆனால் பதநீர் செய்வதையும், நுங்கு சாப்பிடுவதையும், கருப்பட்டி செய்வதையும் மறந்திருக்க மாட்டோம். இதனையே வியாபாரமாக்கி இருக்கின்றனர் அம்மக்கள். கம்போடியாவில் எங்கு சென்றாலும் பனங்கருப்பட்டி, பனை வெல்லம் கிடைக்கும். அதனை அழகாக பனை ஓலையில் பார்சல் செய்து வைத்திருப்பார்கள். விதவிதமான வடிவங்களிலும் கிடைக்கிறது இந்தக் கருப்பட்டி. வீட்டுக்கு வருபவர்களுக்கு கொடுக்கப்படும் இனிப்பில் பனங்கருப்பட்டியை சேர்த்தே கொடுக்கிறார்கள். முக்கியமான விஷயம் மக்கள் சீனியையும் கரும்பு வெல்லத்தையும் விட அதிகமாக பனங்கருப்பட்டியை வாங்குவதால் வியாபார ரீதியில் வரவேற்பு பெற்றுள்ளது.
மற்றொரு முக்கியமான ஒன்று பதநீரும் பனை ஓலை வீடுகளும். கம்போடிய கிராமங்கள் இன்னும் பனை ஓலை வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. வீட்டின் வரவேற்பறையில் எப்போது பதநீர் இடம் பெற்றிருக்கிறது. இதுபோக மற்றொரு பொருள் நம்மை வியக்க வைக்கிறது. அது பனை மரத்தை பயன்படுத்தி செய்யப்படும் பொருட்கள். கம்போடியாவின் முக்கியமான கைவினை பொருட்களில் ஒன்றுதான் இது. வீட்டில் அடுப்பில் வைக்காத பொருட்கள் அனைத்தையும் பனை மரத்தின் பாகங்களை பயன்படுத்தி செய்து விடுகிறார்கள். முக்கிய வருமானம் ஈட்டித்தரும் தொழிலாக இது மாறியிருக்கிறது. பனங்குருத்து, பனம் பழம், பனங்கிழங்கு போன்றவையும் பிரபலமாக மாறிப் போயிருக்கிறது.
பனை ஓலை தொப்பி - கம்போடிய மக்கள் அனைவரும் கண்டிப்பாக தொப்பி அணிந்திருப்பார்கள். அதனை ஒரு ஸ்டைலாகவும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அணிந்துள்ள தொப்பி எதனால் ஆனது என தொட்டுப் பார்த்தால் பனை ஓலையால், வண்ணம் பூசப்பட்டு செய்யப்பட்டிருகிறது. நாம் பயன்படுத்தி வந்த பனை ஓலை பெட்டிகளும் அங்கு பிரபலம். நாகரிகம் என்ற பெயரில் நாம் காக்க மறந்த, பயன்படுத்த மறந்த பனை மரங்களை கம்போடிய மக்கள் சிறப்பாக பாதுகாத்தும் பயன்படுத்தியும் வருகிறார்கள். நாம் ?