சிறப்புக் களம்

மகன்களின் 'மோதல்', அரசியல் நகர்வு...- லாலுவின் பீகார் ரிட்டர்ன் கவனிக்கப்படுவதன் பின்புலம்

மகன்களின் 'மோதல்', அரசியல் நகர்வு...- லாலுவின் பீகார் ரிட்டர்ன் கவனிக்கப்படுவதன் பின்புலம்

PT WEB

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் மாநிலத்தில் நுழைந்துள்ளார் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். அவரின் வருகை மாநிலத்தின் அரசியலில், அவரின் குடும்பத்தில் பலவித எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக விரிவாகப் பார்ப்போம்.

பீகாரின் முன்னாள் முதல்வர், மூத்த அரசியல் தலைவர் லாலு பிரசாத் யாதவ். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்தவர் மாட்டுத்தீவன ஊழலில் சிக்கி சிறை சென்றவர் கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் மாநிலத்தில் தனது காலடியை பதித்துள்ளார். உற்சாக வரவேற்புக்கு மத்தியில் பாட்னாவில் உள்ள தனது வீட்டுக்கு லாலு திரும்பியிருப்பது பீகார் அரசியலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, வரும் 30-ம் தேதி நடக்கவிருக்கும் குஷ்வர் அஸ்தான், தாராபூர் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் லாலுவின் தாக்கம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாராபூர் மற்றும் குஷேஷ்வர் அஸ்தான் தொகுதிகளின் எம்எல்ஏக்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உயிரிழந்ததால் இப்போது இடைத்தேர்தல் நடக்கிறது. இதன் இடைத்தேர்தல் முடிவுகள் முதல்வர் நிதிஷ் குமாரின் தலைமையிலான மாநில அரசாங்கத்தை பாதிக்காது என்றாலும், இதில் பெரும் வெற்றி தங்களின் மன உறுதியை அதிகரிக்கும் என்று நம்புகின்றனர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர்.

ஆனால், இந்த வெற்றி எளிதாக கிடைத்து விடாது என்பதும் அவர்களுக்கு தெரியும். ஏனென்றால், கடந்த தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியை வழிநடத்திய லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி, மகா கூட்டணி ஒன்றை ஏற்படுத்தி காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிட்டார். இப்போது இடைத்தேர்தல் நடக்கும் குசேஷ்வர் அஸ்தான் தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ்தான் போட்டியிட்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 7,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தார்.

இடைத்தேர்தலிலும் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பியது. ஆனால், காங்கிரஸிடம் ஆலோசிக்கலாமலே இரண்டு தொகுதிகளுக்கும் தேஜஸ்வி வேட்பாளரை அறிவித்தார். கடுப்பான காங்கிரஸ் போட்டிக்கு தானும் வேட்பாளரை களமிறங்கியது. இது போதாதென்று நேற்று காங்கிரஸ் குறித்து பேசிய, லாலு, ``பீகாரில் இனி நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது" என்று அதிரடியாக கூறினார். இதனால் மகா கூட்டணி உடைந்துள்ளது.

இப்போது தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவி வருகிறது. இந்தப் போட்டிகளுக்கு இடையில் ஆர்ஜேடி வெற்றிபெற வேண்டும் என்றால், அதற்கு ஒரு தனி சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தி லாலுவாக இருப்பார் என்று தேஜஸ்வி நம்புகிறார். அதற்கேற்ப டெல்லியில் இருந்த லாலுவை பாட்னா அழைத்து வந்துள்ளவர், அவரை பிரசாரத்தில் இறக்க இருக்கிறார். இன்று முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார் லாலு.

இந்த காரணங்களை தாண்டி மற்றொரு காரணத்துக்கும் லாலுவின் வருகை அவரின் கட்சியினராலும், பீகார் மக்களாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அது அவரின் இரு மகன்களுக்கு இடையே நடக்கும் பிரச்னை. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைமையை கைப்பற்றப்போவது யார் என்கிற போட்டி லாலுவின் மகன்களான தேஜ் பிரதாப், அவரின் இளைய சகோதரர் தேஜஸ்வி இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வருகிறது. லாலுவின் மூத்த மகனும், ஹசன்பூர் எம்எல்ஏவுமான தேஜ் பிரதாப் யாதவ் தனது சகோதரர் தேஜஸ்வி தலைமையை ஏற்க மறுத்து வருகிறார்.

சிறைக்கு செல்வதற்கு முன்பே, லாலு தனது இளைய மகனான தேஜஸ்விக்கு படிப்படியாக அதிகாரத்தை மாற்றினார். 2020 சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி முதல்வர் முகமாக முன்னிறுத்தப்பட்டார். அதற்கு தேஜ் பிரதாப் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. மாறாக அவரே முன்னின்று தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தார். அதன் விளைவாக தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெற்றிபெறாவிட்டாலும், கடந்த சில ஆண்டுகளில் பெற்ற மோசமான தோல்விகளை மறக்கடிக்கும் வகையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

ஆனால், இதற்கு அடுத்து என்ன நடந்ததோ தெரியவில்லை, `கட்சிக்கு தலைமையாக நான் இருக்க விரும்புகிறேன்' என்று வெளிப்படையாகவே அறிவித்து தேஜஸ்விக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கியுள்ளார் தேஜ் பிரதாப். இதன்தொடர்ச்சியாக, தனது பலத்தை நிரூபிக்க மாநிலத்தில் சில நாட்கள் முன் ஒரு பேரணியை ஒருங்கிணைத்தார். பின்னர், இந்தப் பேரணிக்கு மூல காரணமாக இருந்த தேஜ் பிரதாப் ஆதரவாளரான மாணவர் பிரிவுத் தலைவர் ஆகாஷ் யாதவ் என்பவரை கட்சியில் இருந்தே நீக்கி அதிரடி காட்டினார் தேஜஸ்வி. இப்படி நாளுக்கு நாள் இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் லாலு பீகாருக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். இப்போது லாலு என்ன முடிவெடுக்க போகிறார், இரண்டு மகன்களில் யாரை தனது அரசியல் வாரிசாக முன்னிறுத்த போகிறார் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் அவரை சுற்றி எழுந்துள்ளன.

- மலையரசு