சிறப்புக் களம்

பூமிக்குள் அமிழும் உத்தராகண்ட் நகரம்? ஜோஷிமத்தில் என்னதான் நடக்கிறது?.. அதிர்ச்சி தகவல்கள்

Sinekadhara

உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக சாலைகளில் விரிசல், வீடுகள், கோவில்கள் மற்றும் சுவர்கள் விழுதல் போன்றவை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோஷிமத் நகரமே அமிழ்ந்துகொண்டிருப்பதாகவும், நிலச்சரிவால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவுகள் அதிகம் நடக்கக்கூடிய, மோசமான வானிலை மற்றும் புவியியல் காரணிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய போன்ற பல காரணிகள் ஜோஷிமத் நிலச்சரிவுக்கு பின்னால் உள்ளன என்கின்றன அறிக்கைகள்.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களை ஜனவரி 7ஆம் தேதி பார்வையிட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்கான உதவிகள் செய்யப்படுமென உத்தரவு அளித்தார். மேலும், இது எதிர்பாராத நிகழ்வு என்பதால் அங்குள்ள மக்களை குடிபெயர்த்த இதுவரை முடிவு செய்யவில்லை என்றும், இருப்பினும் இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் தாமி தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவு என்றால் என்ன?

நிலப்பகுதியானது நகர்வதை அல்லது அமிழ்வதை நிலச்சரிவு என்கின்றனர். அதிகப்படியான தண்ணீர் மற்றும் மினரல்களை நிலத்தடியிலிருந்து எடுப்பது நிலம் நகர்வதற்கு காரணமாகிறது. இதுதவிர, மண் சுருக்கம் மற்றும் புவிமேலடுக்கு அசைவு போன்ற இயற்கை காரணங்களும் நிலச்சரிவுக்கு காரணமாகிறது. நிலச்சரிவால் கட்டடங்கள் மற்றும் சாலைகள் சேதமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். மேலும் வெள்ளப்பெருக்குக்கு வழிவகுக்கும்.

ஜோஷிமத் அமிழ்ந்து வருவது ஏன்?

ஆகஸ்ட் 2022 முதல் உத்தராகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (USDMA) ஆய்வின்படி, ஜோஷிமத் நிலச்சரிவிற்கு புவியியல் காரணிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்த நகரமானது டெக்டோனிக் ஃபால்ல் வரிசையான வைகிரிதா தர்ஸ்ட் (VT) -இல் அமைந்துள்ளது. மேலும் இரண்டு முக்கிய தவறான புவியியல் கோடுகளான Main Central Thrust (MCT) மற்றும் Pandukeshwar Thrust (PT) ஆகியவற்றுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இதுபோன்ற டெக்டோனிக் செயல்பாடு காரணமாக நகரம் மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்கிறது அந்த ஆய்வு.

அதீத காலநிலை மாற்றங்களான அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவையும் ஜோஷிமத் நிலச்சரிவுக்கு காரணிகளாக அமைந்துள்ளன. ஜூன் 2013 மற்றும் பிப்ரவரி 2021 வெள்ளப்பெருக்குகள் மண் அரிப்பு மற்றும் மண்ணின் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுத்தது. இதுவும் நிலச்சரிவுக்கு காரணமாகியுள்ளது.

திட்டமிடப்படாத கட்டடங்களும் ஜோஷிமத் நிலச்சரிவிற்கு மற்றொரு காரணம். ஜோஷிமத் மற்றும் டாபோவன் பகுதிகளில் விஷ்ணுகாட் HE திட்டம் உள்ளிட்ட நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுமான பணிகளானது பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் (BRO) மூலம் கனரக இயந்திரங்கள் கொண்டு கட்டப்பட்டது. இது நிலச்சரிவுக்கு சாத்தியக்கூறுகளாக அமைந்துள்ளது. இதனை கருத்தில்கொண்டு தற்போது அனைத்துவிதமான கட்டுமான பணிகளும் ஜோஷிமத் பகுதியில் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலச்சரிவை அடுத்து, நகரின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கட்டுமான பணிகளை திட்டமிடுவதற்கு முன்பு, வானிலை நிகழ்வுகள் மற்றும் மாற்றங்களையும் கருத்தில் கொள்வது அவசியமாகிறது.

அவசர கூட்டம் - பிரதமர் அலுவலகம் அழைப்பு!

ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்டுள்ள அசாத்தியமான சூழல் தொர்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடத்த பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கேபினேட் செயலாளர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல், உத்தராகாண்ட் மாநிலத்தின் சார்பில் அம்மாநிலத்தின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்கின்றனர். 

இதனிடையே உத்தராகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் பேசிய பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார். அத்துடன், ஜோஷிமத் நகரத்தில் தற்போதைய நிலை குறித்து விளக்கமாக கேட்டறிந்தார். மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பில்லாத நிலச்சரிவு புதைவுமண்டலம் என இப்பகுதி மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.