இன்று நாம் செயற்கை நுண்ணறிவுடன் சேர்ந்த டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். சகமனிதனோடு நட்பாக, பாசமாக இருந்து, விலங்குகளுடன் கருணையுடன் நடந்து காலம் மாறி, இப்போது ஏஐ நுட்பத்துடன் தன்னுடைய சுக, துக்கங்களை பகிர்ந்துகொண்டு அறிவுரைகள், ஆலோசனைகள் கேட்கும் காலம் வந்துவிட்டது.
கட்டுரையாளர் : போத்தி ராஜ்
2014ஆம் ஆண்டுக்குப்பின் இந்தியா டிஜிட்டல் மயமாக்கத்தில் ஒவ்வொரு படிநிலையாகக் கடந்து வேகமாக முன்னேறி வருகிறது. டிஜிட்டல் நுட்பத்தோடு செயற்கை நுண்ணறிவு நுட்பத்தையும் சேர்த்தபின், மக்கள் ஏஐயுடன் கூடிய டிஜிட்டல் சேவைகள் இன்றி, இயங்குவது கடினம் என்ற சூழல் வந்திருக்கிறது. அதிலும் கூகுள், சாட்ஜிபிடி, க்ளவுட் போன்ற தேடுதல் தளங்கள் அதிநவீன செயற்கை நுண்ணறிவுடன் வந்துள்ளதால், மக்களுக்கான அறிவுத் தேவைகளும், பசியும் விரைவாக நிறைவு செய்யப்படுகிறது.
சொடுக்கும் நேரத்தில் தங்களுக்குத் தேவையான தகவல்களை ஏஐ நுட்பத்தின் மூலம் மக்கள் தெரிந்து கொள்வது அறிவியலோடு சேர்ந்த வாழ்க்கைத் தர முன்னேற்றத்தின் உச்சபட்சம் என வர்ணிக்கப்பட்டாலும், அதற்காக நாம் கொடுக்கும் விலை கண்களுக்கு புலப்படாமல் இருக்கிறது.
இன்றைய டிஜிட்டல் பொருளாதாரத்தில் கிளவுட் ஸ்டோரேஜ், ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றிற்கான அகோரப்பசிக்கு, டேட்டா சென்டர்கள் உருவாக்கம் மிகப்பெரிய வளர்ச்சியைத் தூண்டியுள்ளது. அதேநேரம், உலகளவில் இந்த வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தாலும், இதுகுறித்த அச்சங்களும், பொது விவாதங்களும், எதிர்கால சந்ததிகள் குறித்த கவலைகளும் எழுப்பப்படுகின்றன.
இந்த டேட்டா சென்டர்களுக்குத் தேவைப்படும் அதிக மின்சாரம், நிலத்தேவை, நீர் தேவை, சூழல் மாசு பெரிய தாக்கத்தை எதிர்கால சந்ததிகள் மத்தியில் ஏற்படுத்தும் என்று சூழியல் வல்லுநர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். குறிப்பாக, தரவு மையங்களின் சிப், சர்வர்கள் உள்ளிட்ட பாகங்கள் இயங்கும்போது அதிகபட்சமான வெப்பத்தை உமிழ்கின்றன. இவற்றை வெப்பமடையாமல் தடுக்க தொடர்ச்சியான குளிர்விக்க நீர் தேவைப்படுகிறது. அதிலும் சாதாரண கடல்நீரோ, நிலத்தடி நீரோ அல்ல, மாறாக குடிநீர் (ப்ரெஷ் வாட்டர்) தேவைப்படுகிறது.
உலக நாடுகளிலும், இந்தியாவிலும் டேட்டா சென்டர்கள் கோடிக்கணக்கான டாலர் முதலீடத்தில் தொடங்கப்படுவது பெருமையாகவும், வளர்ச்சியோ நோக்கி பீடுநடை போடுவதாக இருந்தாலும், நீர் வளங்களை ஆபத்தை நோக்கித் தள்ளுகிறோம் என்ற அச்சம் சூழியல் வல்லுநர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
டேட்டா சென்டர் அல்லது தரவு மையம் என்பது கணினி சர்வர்கள், தரவு சேமிப்புப் பகுதிகள், நெட்வொர்க் கருவிகள், செயலிகள், சேவைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பாகவும், தடையின்றியும் இயங்கச் செய்யும் ஒரு பிரம்மாண்டமான கட்டடம். தொடக்கத்தில் இந்த தரவு மையத்தை ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்திய பரிணாமத்தால், கிளவுட் சேவை வழங்குவோர்களுக்குத் தேவையான வசதிகளை, சேமிப்புகளை வழங்கும் தளங்களாகவும், ஏஐ நுட்பங்களை இயக்கவும், பராமரிக்கவும் அதிகளவில் மாறிவிட்டன.
டேட்டா சென்டர்கள் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் கணினிகள் எப்போதும் சூடாகாமல் இருக்க குளிரூட்டும் அமைப்பும், மின் தடை ஏற்படாதவாறு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. கூகுள் ஏஐ-யிடம் ஏதேனும் தகவல் கேட்டவுடனே வரிசையாகத் தகவல்களை வழங்குவதற்கு இந்த டேட்டா சென்டர் இயங்குவதுதான் மூலமாகும்.
டேட்டா சென்டர் குளிர்ச்சியாக இயங்குவதற்கு தண்ணீர் மிக அவசியம். கூகுள் ஏஐ, மெட்டா ஏஐ, சாட்ஜிபிடி, க்ளவுட் போன்ற ஏஐ தளத்தில் ஏதேனும் கேள்வி கேட்ட உடனே பதில் அளிக்கும் நுட்பம் இயங்குவதற்கு சர்வர்கள் எவ்வளவு அவசியமோ, அந்த சர்வர்களை குளிர்விக்க, சூடாகாமல் இருக்க தண்ணீர் அவசியமாகும்.
சர்வர்களையும், டேட்டா சென்டர்களையும் குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிக்க அதைக் குளிர்விக்க வேண்டும். இதற்குத் தண்ணீர் தேவைப்படுகிறது. இது நேரடியான தேவையாக ஒருபுறம் இருந்தாலும், இந்த டேட்டா சென்டர்களை இயக்க மின்சாரம் தேவை, அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிகளவு நீர் தேவை என்பதால் தண்ணீருக்கும், டேட்டா சென்டருக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்கிறது.
சில டேட்டா சென்டர்கள் தண்ணீர் இல்லாமலும் மின்சாரம் மூலம் ஏசி வசதியுடன குளிர்விக்கின்றன. ஆனால், அதற்கு அதிகமான மின்தேவை ஏற்படும். நவீன காலங்களில் மிகப்பெரிய டேட்டா சென்டர்களில் லட்சக்கணக்கான சர்வர்கள் தொடர்ச்சியாக இயங்குகின்றன, இந்த சர்வர்கள் வரிசையாக அடுக்கடுக்காக வைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. இவை இயங்கும்போது அதிகபட்சமான வெப்பம் வெளியேற்றப்படும்.
இது வெப்பமடையாமல் தடுக்கவும், கருவிகள் பழுதடையாமல் தடுக்கவும் குளிர்விக்க வேண்டும். ஏசி மூலம் குளிர்வித்தால் அதிகமான மின்தேவை ஏற்படும். இதைத் தவிர்க்கவே, தண்ணீர் மூலம் குளிர்விக்கப்படுகிறது. மற்ற பல தொழில்களைப் போலன்றி, தரவு மையங்கள் நீரை ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்துவதில்லை என்றாலும் சாதாரண நீரைப் பயன்படுத்தாமல், ப்ரெஷ் வாட்டர் அதாவது மக்கள் குடிநீராகப் பயன்படுத்தும் நீரைப் பயன்படுத்துவதுதான் சிக்கலாக மாறிவருகிறது.
ஒவ்வொரு டேட்டா சென்டரின் அளவைப் பொருத்தும் நீரின் தேவை மாறுபடும். ஒரு சாதாரண 100 மெகாவாட் திறன் கொண்ட 'ஹைப்பர்ஸ்கேல்' டேட்டா சென்டருக்கு தினசரி ஏறக்குறைய 20 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறது. இதில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால், நீர் நுகர்வு இன்னும் அதிகரிக்கும் இதில் சராசரியாக ஒரு கிலோவாட்டை குளிர்விக்க 1.8 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
சிறிய அளவிலான அல்லது நடுத்தர அளவிலான டேட்டா சென்டர் இயங்குவதற்கு ஏறக்குறைய 3 லட்சம் கேலன் லிட்டர் குடிநீர் முதல், அதிகபட்சமாக 50 லட்சம் கேலன் தண்ணீர் தினசரி தேவைப்படும்.
அதாவது ஒரு நகரில் உள்ள 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்களுக்கு தேவையான குடிநீரை இந்த தரவு மையம் செயல்பட தாரை வார்க்க வேண்டியதிருக்கும். அதிலும் ஏஐ வசதியுடன் கூடிய தரவு மையமாக இருந்தால், ஆண்டுக்கு 180 கோடி கேலன் குடிநீர் தேவைப்படும் என அமெரிக்காவின் சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி கல்வி மையம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்திற்கான நிறுவனம் வெளியிட்ட எச்சரிக்கையில் “செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகரித்துவருவதால் விரிவடைந்து வரும் டேட்டா சென்டர் , 2030-ம் ஆண்டிற்குள் தற்போது பயன்படுத்துவதை விட இருமடங்கு மின்சாரத்தையும் நீரையும் பயன்படுத்தக்கூடும். ஏஐ தொழில்நுட்பத்தால் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை அரசுகள் கவனத்தில் கொள்ளாவிட்டால், அதன் விரைவான பயன்பாடு நில வளங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி, மலைபோலக் மின்னணுக் கழிவுகளை குவித்துவிடும்” என எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு, உலகளவில் டேட்டா சென்டர்கள் 448 டெராவாட்-மணிநேர மின்சாரத்தை நுகர்ந்துள்ளன. இது சவுதி அரேபியா முழுவதுக்கும் தேவைப்படும் மின்தேவையை விட அதிகமாகும். இதில் ஏஐ தொழில்நுட்பத்தின் பங்கு ஐந்தில் ஒரு பங்காக இருந்தது.
அதுமட்டுமல்லாமல் உலகளவில் 4.5 லட்சம் கோடி லிட்டர் தண்ணீரை டேட்டா சென்டர்கள் பயன்படுத்தியுள்ளன. இந்த தண்ணீர் அளவு என்பது, சஹாரா பாலைவனத்துக்கு கீழ்பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்க கண்டத்தின் 60 கோடிக்கும் அதிகமான மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான தண்ணீராகும். 18.90 கோடி டன் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
2030ம் ஆண்டுக்குள், டேட்டா சென்டர்கள் ஆண்டுக்கு நுகரும் மின்சாரம் 945 டெராவாட்டாக அதிகரிக்கும். இந்த அளவு மின்சாரம் என்பது, ஜப்பான் நாடுமுழுமைக்கும் வழங்க முடியும், இதில் ஏஐ பங்கு 40% எடுத்துக்கொள்ளும்.
டேட்டா சென்டர் தொடர்ந்து பயன்படுத்தும் போது, 2030ம் ஆண்டுக்குள் அதன் நீர் தேவை 9.3 லட்சம் கோடி லிட்டராகவும், கார்பன்-டை-ஆக்சைடு (CO2) வெளியேற்றம் 39.9கோடி டன்னாகவும் அதிகரிக்கும்
டேடா சென்டர் அமைக்க தேவைப்படும் நிலப்பரப்பு, கடந்த ஆண்டில் 6,900 சதுர கிலோமீட்டராக (2,664 சதுர மைல்கள்) இருந்த நிலையில், 2030-ஆம் ஆண்டிற்குள் அது 14,500 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாக அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை கணித்துள்ளது.
டேட்டா சென்டர்கள் குறித்த விவாதங்களில் தண்ணீர் ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. டேட்டா சென்டர்கள் அதிகளவு தண்ணீரை பயன்படுத்துவதால், அவை இருக்கும் இடங்களில் கடும் நீர் பற்றாக்குறை எதிர்காலத்தில் எழும் என்ற அச்சம் நிலவுகிறது.
அமெரிக்காவில், அரிசோனா முதல் நெதர்லாந்து வரை பரவலாக, டேட்டா சென்டர்கள் தண்ணீர் உறிஞ்சும் முறை குறித்து சமூகப் போராட்டங்கள் வெடித்தன. ஒரு பெரிய டேட்டா சென்டர், ஒரு சிறிய நகரம் பயன்படுத்தும் அளவுக்கு நீரைப் பயன்படுத்தக்கூடும் நாளடைவில் மனிதர்கள் பயன்பாட்டுக்கு தேவையான தண்ணீரைவிட கணினி பயன்பாட்டுக்குத் தேவை அதிகரித்துவிடும் என்று மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
ஆனால், தொழில்நுட்ப நிறுவனங்கள் தரப்பில் என்ன கூறப்படுகிறதென்றால், “பெரும்பாலான தொழில்துறைகளில் பயன்படுத்துவதைப் போல் தண்ணீரை நாங்கள் மூலப்பொருளாக பயன்படுத்தவில்லை. டேட்டா சென்டர்கள் சர்வர்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவே பயன்படுத்துகின்றன. ரேக்குகளில் நெருக்கமாக அடுக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான சர்வர்கள் பெரும் வெப்பத்தை உருவாக்குகின்றன, மேலும் அதிக வெப்பமடைவதையோ அல்லது உபகரணங்கள் செயலிழப்பதையோ தடுக்க குளிர்விக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளன.
பெரும்பாலான டேட்டா சென்டர்கள் ஏதேனும் ஒரு வடிவத்தில் தண்ணீரைப் பயன்படுத்துகின்றன. உலகில் உள்ள டேட்டா சென்டர்களில் சுமார் 75% முதல் 90% வரை, நீர் அடிப்படையிலான குளிரூட்டலைத் தங்களின் முதன்மை முறையாகச் வைத்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 10முதல் 25% மட்டுமே முற்றிலும் நீர் இல்லாமல் சர்வர்களை குளிர்விக்கும் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. நீர் மூலம் குளிர்விக்கப்படும் வசதிகளில், பெரிய டேட்டா சென்டர்கள் ஆவியாதல் குளிரூட்டலைப் பயன்படுத்துகின்றன, இதன் மூலம் குளிரூட்டும் செயல்முறையின் ஒரு பகுதியாகத் தண்ணீரை ஆவியாக்குகினாலும், தண்ணீரைப் பயன்படுத்துகிறது கவனிக்கத்தக்கது.
சர்வர்களை குளிரூட்ட பயன்படும் நீர் பெரும்பாலும் ப்ரெஷ் வாட்டராகத்தான் இருக்க வேண்டும். குடிநீர், நிலத்தடி நீர் போன்ற குடிநீர் தரத்திலான நீர்தான் பயன்படுத்த முடியும். ஆய்வுகள்படி, டேட்டா சென்டர்கள் நீர் பயன்பாட்டில் சுமார் 57% குடிநீர் விநியோகத்திலிருந்தே பெறப்படுவதாக மதிப்பிட்டுள்ளது.
டேட்டா சென்டர்களால் பயன்படுத்தப்படும் நீரில் 80 % முதல் 90% அளவிலானவை ஏரிகள், ஆறுகள் அல்லது நிலத்தடி நீர்நிலைகள் மூலம் எடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மக்களுக்கான குடிநீர் வழங்கும் மூலங்களாகும்.
டேட்டா சென்டரில் பல குளிர்விப்பு முறைகள் நடைமுறைக்கு வந்து நீரை சிக்கனமாக பயன்படுத்த முயற்சி எடுத்து வருகின்றன.
அதில் “ ஏர் கூலிங் முறை(தண்ணீர் இன்றி குளிர்வித்தல்), ஓபன் லூப் எனப்படும் நீரை அடிப்படையாக வைத்த ஆவியாதல் குளிர்விப்பு முறை, மூடப்பட்ட குளிர்விப்பு முறை,(இதில் பைப் மூலம் குளிர்ந்த தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு குளிர்விக்கப்படும்).
நேரடி திரவக் குளிரூட்டல் முறை சமீபகாலமாக வளர்ந்து வரும் நவீன முறை. இதில் சர்வர் அல்லது சிப்புக்கு நீர் அல்லது வேறு திரவத்தை குழாய் மூலம் செலுத்தி குளிர்வித்தல். முழு சர்வர்களும் மின்கடத்தா திரவம் நிரம்பிய தொட்டியில் மூழ்கடிக்கப்பட்டு குளிர்விக்கின்றன. இந்த முறைகள் வெப்பத்தை மிகவும் திறமையாகக் கடத்துவதோடு, நீர் பயன்பாட்டையும் கணிசமாகக் குறைக்கின்றன.
அதில் ப்ரீ கூலிங் என்ற முறை என்பது குளிர் காலத்தில் தண்ணீரைப் பயன்படுத்தால் குளிர்ந்த காற்றை சர்வருக்குள் செலுத்தி குளிர்விப்பதாகும். இது மிகவும் சிக்கனமானது, தண்ணீரை பெருமளவு சேமிக்கக்கூடியது. இந்த முறைகள் மூலமும் தண்ணீர் பயன்பாடு குறைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது 150 முதல் 300 டேட்டா சென்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. அதிகரித்துவரும் கிளவுட் சேவை, ஏஐ தேவையால் 100க்கும் மேற்பட்ட ஹைபர்ஸ்கேல் மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.
மும்பை மற்றும் நவி மும்பையில்தான் நாட்டின் 50 சதவீத டேட்டா சென்டர்கள் இயங்குகின்றன. அடுத்ததாக சென்னை, டெல்லி என்சிஆர், பெங்களூருவில் இயங்குகி்றன. டேட்டா சென்டர்கள் ஹைதராபாத்திலும், விசாகப்பட்டிணத்திலும் குஜராத்தின் ஜாம்நகரிலும் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. ரிலையன்ஸ் குழுமம், அதானி நிறுவனம் ஆகியவை மெட்டா, கூகுள் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து ஏஐ டேட்டா சென்டரை அமைத்து வருகின்றன.
உலகத்தின் அதிநவீன தொழில்நுட்ப வேகத்துக்கு ஏற்ப இந்தியாவும் ஈடு கொடுத்து ஓடுவது சிறப்பானதாக பார்க்கப்பட்டாலும், எதிர்காலச் சந்ததியினரை மனதில் வைத்து டேட்டா சென்டர்கள் அமைக்கப்பட வேண்டும். சொடுக்கிய நேரத்தில் தகவல்களை கொட்டித் தரக்கூடியது ஏஐ தொழில்நுட்பம் என்றாலும் அதைப் பராமரிக்கும் டேட்டா சென்டர்களுக்காக நாம் கொடுக்கும் விலை, எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையாகும்.
1. டேட்டா சென்டர்களில் உள்ள லட்சக்கணக்கான கணினிகள் மற்றும் சர்வர்களை பாதுகாக்க, குளிர்விக்கு் முறைக்கு தினசரி கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் பயன்படுத்த வேண்டும். இது நாளடைவில், தண்ணீர் பற்றாக்குறையிலும், நிலத்தடி நீரையே நாசம் செய்யும் நிலைக்குத் தள்ளி குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு கடும் தட்டுப்பாட்டை உருவாக்கும்.
2. டேட்டா சென்டர்களையும், ஏஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த அதிகமான மின்சாரம் தேவைப்படும். இந்த மின்சாரத்தை தயாரிக்க தண்ணீரும்,நிலக்கரியும் அதிகமாக செலவிட வேண்டும். நிலக்கரி மூலம் மின்சாரம் எடுக்கும்போது கார்பன் உமிழ்வு அதிகமாகி, காலநிலை மாற்றத்துக்கும், புவிவெப்பமயமாதலுக்கு காரணமாகிறது.
3. டேட்டா சென்டர்கள் அதிகமாக வரும் பட்சத்தில் மின் தேவை அதிகரிக்கும். இதனால் மக்களுக்கு கிடைக்கூடிய அத்தியாவசிய மின்தேவை குறைக்கப்பட்டு, டேட்டா சென்டர்களுக்கு திருப்பிவிடலாம். ஏனென்றால், மின்சாரம் இன்றி டேட்டா சென்டர்கள் சிலநிமிடங்கள்கூட இருக்க முடியாது என்பதால் மனிதர்களைவிட எதிர்காலத்தில் டேட்டா சென்டர்களுக்கு அதிக மின் முக்கியத்துவம் அளிக்கப்படலாம்.
4. டேட்டா சென்டர்களில் சர்வர்களை குளிர்விக்க பயன்படும் கருவிகள், பேட்டரிகள் குறிப்பிட்ட காலத்துக்கு பின் காலாவதியாகிவிடும். இவற்றை அழிக்க முடியாமல் ஒரு கட்டத்துக்குப்பின மின்னணுக் கழிவுகள் அதிகமாக சேரலாம்.
5. டேட்டா சென்டர்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உருவாக்கவும், பேட்டர்கள் செய்யவும், கோபால்ட், லித்தியம் போன்ற கனிமங்கள் அதிகமாகத் தேவைப்படும். அப்போது, இயற்கையிலிருந்து எடுக்கப்படும்போது, வளங்கள் குறைந்து இயற்கை சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
6. இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க மரபுசாரா மின் உற்பத்தி முறையான சோலார், காற்றாலை மின்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும். நீர் பயன்பாட்டைக் குறைக்க, கழிவு நீரை சுத்தப்படுத்தி, அதை வைத்து சர்வர்களை குளிர்விக்க முயற்சி எடுக்க வேண்டும், கடல்நீரை சுத்தப்படுத்தி, குளிர்விக்க பயன்படுத்தலாம். இந்த முறை சில நாடுகளில் பயன்பாட்டில் இருந்தாலும் அதிக செலவுபிடிக்கக்கூடியது.