முதல்வர் வேட்பாளர் என்பவர் அந்தக் கட்சியின் முகமாகவே பார்க்கப்படுகிறார். அந்த வகையில், சுதந்தரத்துக்குப் பிறகு தமிழகம் சந்தித்த முதல் சட்டப்பேரவைத் தேர்தல் 1952ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
1957இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக காமராஜர் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இந்தத் தேர்தலில்தான் திமுக முதல்முறையாக களம் கண்டது. இதில் காமராஜர் வெற்றி பெற்றார். 1962இல் காங்கிரஸ் சார்பில் மீண்டும் காமராஜரே முதல்வர் வேட்பாளாராக முன்னிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக ராஜாஜி தலைமையில் சுதந்திரா கட்சி உருவானது. அதில் அவர் முதல்வர் வேட்பாளராக நின்றார். திமுக சார்பாக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அப்போதும் காமராஜரே வெற்றி பெற்றார்.
1967 தமிழக அரசியல் திசை திரும்பிய தேர்தல். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் திமுக அணியும் மோதின. பக்தவச்சலம் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. ஆனால் திமுகவில் அண்ணா முதல்வர் வேட்பாளாராக முன்னிறுத்தப்படவில்லை. அண்ணா நாடாளுமன்றத்துக்காக தென் சென்னை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். 1971 சட்டமன்றத் தேர்தலை பொறுத்துவரை திமுகவின் முதல்வர் வேட்பாளராக கருணாநிதி முன்னிறுத்தப்பட்டார். காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் திமுகவை எதிர்த்துப் போட்டியிட்டது. அந்த அணிக்கு காமராஜர் முதல்வர் வேட்பாளராக இருந்தார். ஆனால் கருணாநிதியே வெற்றி பெற்றார்.
அதிமுக 1977ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்டது. எம்.ஜி.ஆர். முதல்வர் வேட்பாளர். திமுக சார்பில் கருணாநிதி முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டார். எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். 1980, 1984 ஆகிய தேர்தல்களிலும் அதே சூழல் தான் தொடர்ந்து. 1989ல் தமிழகம் நான்கு முதல்வர் வேட்பாளர்களை சந்தித்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்ததால் ஜெயலலிதா மற்றும் ஜானகி முதல்வர் வேட்பாளர்களாக நின்றார்கள். காங்கிரஸ் மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது. திமுக முதல்வர் வேட்பாளர் கருணாநிதி. அதில் கருணாநிதியே வெற்றி பெற்றார்.
1991, 1996, 2001 ஆகிய மூன்று தேர்தல்களிலும் திமுக முதல்வர் வேட்பாளர் கருணாநிதி, அதிமுக முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா. 1991ஆம் ஆண்டு ஜெயலலிதாவும், 1996ஆம் ஆண்டு கருணாநிதியும், 2001ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் வெற்றி பெற்றனர். 2006ஆம் ஆண்டு அதிமுகவில் ஜெயலலிதாவும் திமுகவில் கருணாநிதியும், தேமுதிகவில் முதல் முறையாக விஜயகாந்தும் முதல்வர் வேட்பாளர்களாக களம் இறங்கினர். இதில் கருணாநிதி வெற்றி பெற்றார். 2011இல் மீண்டும் அதிமுக-திமுக போட்டி. ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
2016ஆம் ஆண்டு சட்ட மன்றத்தேர்தலில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் போட்டியிட மக்கள் நலக் கூட்டணி சார்பாக விஜயகாந்த் முதல்வர் வேட்பாளாராக முன்னிறுத்தப்பட்டார். இப்படி பெரும்பாலும் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தியே தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்தித்துள்ளது. இதைத்தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தல் களம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள நிலையில், அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு ஒபிஎஸ்சிடம் இருந்த முதல்வர் பதவியை இபிஎஸ் கைக்கு மாற்றிச் சென்றார். அதன்பின்னர் கட்சியை கட்டமைக்க ஒபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டு நிலைமை சரிக்கட்டப்பட்டது அனைவருக்கு தெரிந்த விஷயமே. கடந்த 4 ஆண்டுகளாக முதலமைச்சர் பதவியில் தொடர்ந்து வரும் இபிஎஸ் தரப்புக்கும் துணைமுதல்வர் ஒபிஎஸ் தரப்புக்கும் தற்போது மீண்டும் முட்டிக்கொள்ள ஆரம்பித்துள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்களிலும் ஒருதரப்பினர் எடப்பாடியையும் மறுதரப்பினர் பன்னீர்செல்வத்தையும் ஆதரித்து வருகின்றனர். இதை கட்டுப்படுத்தும் வகையில் அதிமுக நிர்வாகிகள் இன்று ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உரிய நேரத்தில் கட்சி முடிவெடுக்கும் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
ஒரு கட்சி வெற்றி பெற முதல்வர் வேட்பாளர் எவ்வளவு முக்கியம் என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் எழாமல் இல்லை. இதுகுறித்து பத்திரிகையாளர் ப்ரியன் புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், “மாநில கட்சிகளை பொருத்தவரை இயல்பாகவே இந்த கட்சி வெற்றி, இவர்தான் முதலமைச்சர் என்று மக்களுக்கு தெரியும். தமிழகத்தில் கூட எம்.ஜி.ஆர்- கருணாநிதி இருந்தபோதும், கருணாநிதி - ஜெயலலிதா இருந்த போதும் இதுதான் வாடிக்கை. அதிமுக வந்தால் யார் முதல்வர் திமுக வந்தால் யார் முதல்வர் என்பது தெரிந்த விஷயமாக இருக்கும். ஆனால் தேசிய கட்சிகளில் அப்படி இல்லை. மாநிலங்களில் யார் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லமாட்டார்கள். தேர்தலை சந்தித்துவிட்டுதான் முடிவு எடுப்பார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக பாஜக சமீபத்தில் டெல்லியில் கிரண்பேடியை முன்னிறுத்தி வாக்கு கேட்டது. ஆனால் தோல்வியை சந்தித்தது அனைவருக்கும் தெரியும். முதல்வர் வேட்பாளர் என்பது மிகவும் முக்கியம். தமிழகத்தை பொருத்தவரை கூட அதைப்பார்த்துதான் மக்கள் வாக்களிப்பார்கள்.
எதனால் முதல்வர் வேட்பாளர் முக்கியம் என்றால் தேர்தெடுக்கப்படும் தலைவருக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த பிரச்னைகளுக்கும் இருக்கக்கூடாது என்று பார்ப்பார்கள். இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் அவரைப்பார்த்து ஆராய்ந்து மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்றே சொல்லவில்லையென்றால் மக்கள் குழம்பிவிடுவார்கள். நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்றே அவர்களுக்கு தெரியாத நிலை உருவாகும். உதாரணத்திற்கு தற்போதைக்கு அதிமுகவை எடுத்துக்கொள்வோம். அதில் ஈபிஎஸ், ஒபிஎஸ் என இரண்டு வேட்பாளர்கள் உள்ளனர். இதில் யார் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லாமல் தேர்தல் முடிந்தவுடன் முதல்வரை அறிவித்தால் மக்கள் எந்த நம்பிக்கையில் வாக்களிப்பார்கள்.
தங்களுக்கு தலைமை தாங்குகிற முதல்வர் யார் என்று தெரிந்து கொள்ள மக்கள் விரும்புவார்கள். மக்கள் கண்டிப்பாக எடைபோட்டு பார்ப்பார்கள். ஈபிஎஸ் - ஸ்டாலின் என்றாலும் சரி ஓபிஎஸ் - ஸ்டாலின் என்றாலும் சரி. இவர்களின் செயல்பாடுகள் எப்படியிருக்கும், இதற்கு முன்பு இவர்கள் செய்தது என்ன என்பதையெல்லாம் ஆராய்வார்கள். தேர்தலுக்கு பின்பு சில பிரச்னைகள் வரும். அதனால் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். எடைப்போட்டு பார்க்க வசதியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.