Einstein, Sabrina Gonzalez Pasterski x page
சிறப்புக் களம்

சிறப்புக்கட்டுரை | அடுத்த ஐன்ஸ்டீன்.. 12 வயதில் குட்டி விமானம்.. யார் இந்த சப்ரினா பாஸ்ட்டர்ஸ்கி?

குட்டி விமானம் கட்டிய 12 வயது சிறுமியிலிருந்து, பிரபஞ்சத்தின் ‘கோடு’ தேடும் நவீன இயற்பியல் மேதை வரை – சப்ரினா பாஸ்டர்ஸ்கியின் அதிசயப் பயணத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்

PT WEB

கட்டுரையாளர் : போத்தி ராஜ்

பதின்ம வயதில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் வீட்டுப்பாடம் செய்வதிலேயும் விளையாடுவதிலேயுமே ஆர்வமாக இருக்கும்போது, இவர் மட்டும் வித்தியாசமாக இருந்தார். 12 வயதிலேயே தனக்காக குட்டி விமானத்தையே உருவாக்கி, அதில் நிறைய மாற்றங்கள், வடிவமைப்புகள் என எல்லாவற்றையும் செய்து, 14 வயதில் அதே விமானத்தில் பறந்தும் காண்பித்து அனைவரையும் அசரவைத்தார். மறைந்த இயற்பியல் மேதையான ஸ்டீபன் ஹாக்கிங்கூட, இவரைப் பற்றி பெருமையாகப் பேசியிருக்கிறார். ‘அடுத்த ஐன்ஸ்டீன் இவர்தான்’ என ஹார்வார்டு பல்கலைக்கழகமும் இவரைப்பற்றிப் புகழ் பாடுகிறது. இந்தப் புகழுக்கும் சாதனைக்கும் காரணமாக இருப்பவர் வேறு யாருமில்லை... அமெரிக்காவைச் சேர்ந்த சப்ரினா கோன்சலேஸ் பாஸ்டர்ஸ்கிதான் (Sabrina Gonzalez Pasterski). அறிவியல் உலகமும், இயற்பியல் வல்லுநர்களும், இவரின் அசாத்திய திறமையைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கின்றனர்.

’அடுத்த ஐன்ஸ்டீன்’ என அழைத்த அறிவியல் உலகம்

நவீன இயற்பியலில் விடைதெரியாத பல கேள்விகளுக்கு பதில் தேடி, தனது ஆராய்ச்சியில் சப்ரினா ஈடுபட்டிருக்கிறார். Theoretical physics, Gravityforce, quantam mechanics இடையிலான தொடர்பு குறித்த இவருடைய ஆராய்ச்சிதான், ’அடுத்த ஐன்ஸ்டீன்’ என அறிவியல் உலகம் இவரை அழைக்கிறது. அமெரிக்காவின் சிக்காகோவில் உள்ள இல்லிநாய்ஸ் நகரத்தில்தான் 1993, ஜூன் 3ஆம் தேதி சப்ரினா கோன்சலேஸ் பாஸ்டர்ஸ்கி பிறந்தார். இவருடைய அப்பா, மார்க் பாஸ்டர்ஸ்கி போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அம்மா மரியா கோன்சலேஸ் கியூபாவை சேர்ந்தவர். இருவருமே வழக்கறிஞர்கள் என்பதால் அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டனர்.

தன்னுடைய நண்பர்கள் விமானத்தில் பறக்க ஆசைப்பட்டபோது, சப்ரினாவோ வித்தியாசமாக யோசிக்க ஆரம்பித்தார். விமானத்தையே உருவாக்க அவர் முயற்சி செய்தார். இதற்காக சப்ரினா, தன்னுடைய பெற்றோரிடமும் அனுமதி பெற்றார். இந்தச் சூழலில், சப்ரினாவுடைய பிறந்த நாளுக்கு அவருடைய தாத்தா 1972ஆம் வருடம் ஒரு குட்டி விமானத்தை பரிசாகக் கொடுத்தார்.

14 வயதில் வானில் பறந்த சப்ரினா!

இந்தச் சிறிய விமானத்தை வைத்துத்தான் சப்ரினா, தனக்கு ஏற்ற மாதிரி அதை வடிவமைத்தார். அவர் தனது அப்பாவின் உதவியுடன் அந்த விமானத்தை மாற்றினார். மேலும், இந்த விமானம் இயக்கப்படுவதற்கான சான்றிதழையும் வாங்கினார். தொடர்ந்து, சிறந்த விமானியின் உதவியோடு தன்னுடைய 14 வயதிலேயே சப்ரினா வானில் பறந்ததுடன், அதைத் திறம்பட இயக்கியும் காட்டினார்.

சப்ரினாவுக்கு இயற்பியல் படிக்க ஆர்வம் இல்லையாம். இதுகுறித்து, ‘தி டைம்ஸ்’ நாளிதழுக்கு கடந்த மே மாதம் சப்ரினா அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கு இயற்பியல் வல்லுநராக வருவதில் விருப்பம் கிடையாது. நான் ஒரு பாப் பாடகியாக வருவதற்குத்தான் ஆசைப்பட்டேன். ஆனால், ’ஹாரி பாட்டர்’ படத்தில் சிறிய மந்திரக் கோல் மூலம் ஹாரி பறப்பதைப் பார்த்து நானும் பறக்க ஆசைப்பட்டேன், அப்போதுதான் இயற்பியல் மீது ஆசை வந்தது” என அதில் தெரிவித்துள்ளார்.

Sabrina

சப்ரினா, தனது 14 வயதில், குட்டி விமானத்தைத் தயார் செய்ததை வீடியாவாக எடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஜோஸுக்கு அனுப்பிவைத்தார். சப்ரினாவின் திறமையைப் பார்த்த ஜெஃப் பிஜோஸ், தனிப்பட்ட முறையில் பாராட்டி, அவருக்குக் கடிதமும் எழுதியிருந்தார்.

சப்ரினாவுக்கு உறுதியளித்த அமேசான் நிறுவனர்

அதுமட்டுமின்றி, அவரின் Astronautics company-யான Blue Origin நிறுவனத்துக்கும் வரச் சொல்லியிருந்தார். பின்னர், சப்ரினா படித்து முடித்ததும், இந்த நிறுனத்திலேயே நல்ல சம்பளத்தில் வேலை தருவேன் என்றும் பிஜோஸ் உறுதியளித்திருந்தார். இதையடுத்து, சப்ரினாவும், தனது குடும்பத்துடன் blue origin நிறுவனத்திற்குச் சென்று வந்தார்.

படிக்கும்போதே சப்ரினா, நாசாவிலேயும், ப்ளூ ஆரிஜின்லையும் பயிற்சிப் பணி (internship training) எடுத்தார். தவிர, அமெரிக்காவில் இருக்கும் international physics olympiyad போட்டியிலும் சிறு வயதிலேயே சப்ரினா பங்கேற்றார்.

பள்ளிக் கல்வியை முடித்த சப்ரினா, 2010ஆம் ஆண்டு கல்லூரியில் சேருவதற்காக பிரபலமான ’மசாசூசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி’யில் (எம்ஐடி) விண்ணப்பம் அனுப்பினார். ஆனால், MIT-நிறுவனம், சப்ரினாவின் மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு, “இங்கே படிப்பதற்கு ஏதேனும் தனித்திறமை இருக்க வேண்டும்; விருது வாங்கியிருக்க வேண்டும்; வெறும் ஆர்வம் மட்டும் போதாது’ எனச் சொல்லி சப்ரினாவின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர்.

வியந்துபோன MIT அதிகாரிகள்

இதையடுத்து, சப்ரினா தான் உருவாக்கிய குட்டி விமானம் பற்றிய வீடியோ, ஜெஃப் பிஜோஸ் பாராட்டிய கடிதம், பயிற்சிப் பணி சான்றிதழ் உள்ளிட்டவற்றை MITக்கு அனுப்பினார். இதைப் பார்த்து வியந்துபோன, MIT அதிகாரிகள், சப்ரினாவுக்கு போன் செய்து, ’உங்களால் அடுத்த செமஸ்டரில் சேர முடியுமா?’ எனக் கேட்டுள்ளனர்.

அதன்பிறகு, MIT-யில் சேர்ந்து 3 வருடம் இயற்பியலைப் படித்து முடித்த சப்ரினா, 5.0 grade மதிப்பெண்ணில் கடந்த 20 ஆண்டுகளில் எந்த மாணவியும் எடுத்திடாத மதிப்பெண்ணை எடுத்து டிகிரி முடித்தார். இதனால், மதிப்புமிக்க ஓர்ல் ஆஃப் ஸ்காலர்ஷிப்பும் (Orloff Scholarship) அவருக்குக் கிடைத்தது.

சப்ரினாவின் திறமை குறித்து அவரது பேராசிரியர்கள், “கடந்த 10 வருடத்தில், நாங்கள் பார்த்த மிகச் சிறந்த மாணவி சப்ரினா” எனப் புகழ்ந்தனர்.

இயற்பியலைத் தேர்வு செய்த காரணம்

இயற்பியல் படித்தது குறித்து சப்ரினா டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ”டிகிரி முடித்ததும் Astro Engeineering படிக்கத்தான் ஆர்வமாக இருந்தேன். ஆனால், Astro Science Technology-இல் கோடிக்கணக்கில் டாலர்களை முதலீடு செய்து கோடீஸ்வரர்கள், வணிகர்கள் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்களை, நான் மேலும் பணக்காரர்களாக மாற்ற விரும்பவில்லை. இதனால், எனக்கு அந்தத் துறையில் விருப்பம் வரவில்லை. இயற்பியலில் Phd செய்யலாம் என முடிவு செய்தேன். இயற்கையில் விடை தெரியாத பல கேள்விகளுக்கு பதில் காண இயற்பியலை எடுத்தேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

ஹார்வர்டு பல்கலையில் முனைவர் பட்டத்துக்காகப் படித்த சப்ரினா, இயற்பியல் வல்லுநர் ஆன்ட்ரூ ஸ்டார்மிங்கருடனும், அலெக்சாண்டர் ஜிபோதேவுடனும் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அப்போது, 'Spin Memory Effect' என்பது குறித்த ஆய்வு அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இந்த ஆய்வு gravityforce, waves, விண்வெளி நேரத்தின் கட்டமைப்பு குறித்த ஆய்வுக்கு முன்னெடுப்பாக சப்ரினாவுக்கு அமைந்தது. 2019ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலையில், டாக்டர் பட்டத்தையும் சப்ரினா பெற்றார்.

கோடிக்கணக்கில் சம்பளம்; அழைத்த நிறுவனங்கள்!

ஐன்ஸ்டீனின் மிகப்பெரிய தத்துவமான ’Blackholes’ குறித்த ஆய்வுகளிலும் சப்ரினா தொடர்ந்து ஈடுபட்டார். நவீன அறிவியலில் தீர்க்கமுடியாத பல்வேறு சவால்களுக்கு பதிலளிப்பதாக இருந்தது சப்ரினாவின் ஆய்வு.

சப்ரினாவின் இந்த இயற்பியல் ஆய்வுதான், அவரை ஐன்ஸ்டீனுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கும், பல விஞ்ஞானிகள் புகழ்வதற்கும் காரணமாக இருந்தது.

சப்ரினா டாக்டர் பட்டம் வாங்கியதற்குப் பின், அவருக்கு ஏராளமான நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வந்தன. நாசா, ப்ளூ ஆரிஜின், Brown University, மேட்டா, கூகுள் என எல்லா நிறுவனங்களும் கோடிக்கணக்கான டாலர் அளவில் சம்பளம் தருகிறேன் என்று சொல்லியும் சப்ரினா அதை ஏற்கவில்லை.

டாக்டர் படிப்பு முடித்ததும், Princeton Center for Theoretical Scienceஇல் சேர்ந்து Fellowship வாங்கினார். 2021-இல் கனடாவுக்குச் சென்ற சப்ரினா, அங்கிருக்கும், புகழ்பெற்ற Perimeter Institute for Theoretical Physics கல்வி நிறுவனத்தில் இளம் ஆய்வாளராக சேர்ந்தார்.

ஐன்ஸ்டீன் விட்டுச் சென்ற பணியைத் தொடரும் சப்ரினா

அங்கு சப்ரினா, Quantum Mechanics, Gravity force மற்றும் Space-time ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்துகொள்ளும் international project-இல் சேர்ந்து ஆய்வில் ஈடுபடத் தொடங்கினார்.

சப்ரினாவின் முயற்சியைப் பார்த்த Simons Foundation, 2023ஆம் ஆண்டில் 80 லட்சம் டாலர் மானியம் கொடுத்தது. சப்ரினாவோடு சேர்ந்து, ஹார்வர்டு, ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள், இன்ஸ்டியூட் ஆஃப் அட்வான்ஸ் ஸ்டடி மற்றும் முன்னணி நிறுவனங்களில் இருந்து ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைத்தது.

Sabrina Pasterski

சப்ரினா தன்னுடைய ஆய்வு குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், “பிரபஞ்சத்தின் code என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆய்வில் இருக்கிறேன். ஐன்ஸ்டீன் விட்டுச் சென்ற பணியை அவரின் இடத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். ஐன்ஸ்டீன் Gravity Force-பற்றிதான் பேசினார், ஆனால், நான் Gravity Force எப்படி உருவாகுது, எப்படி ஈர்க்குது என்ற கேள்விகளுக்கு விடை தேடுகிறேன்.

என்னுடைய ஆய்வில் இன்னும் 2 வருடங்களில் எந்தவிதமான பிரச்னைகளை நான் தீர்ப்பேன், தீர்க்க முடியாமல் போவேன் என்று எனக்குத் தெரியாது. இயற்பியலில் என்ன விசித்திரம் என்றால், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை உங்களால் உறுதியாகக் கூற முடியாது. எல்லாமே மாறிக்கொண்டே இருக்கும்” என்கிறார்.

சப்ரினாவுக்குச் சிறுவயது முதலே, அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஜோஸ் மீது மிகப்பெரிய மரியாதையும், ஈர்ப்பும் இருந்தது. அவருடன் சேர்ந்து ஒரே மேடையில் நியூயார்க்கில் சமீபத்தில் நடந்த ஒரு ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Sabrina Pasterski

ஐன்ஸ்டீன் விட்டுச் சென்ற விடை கண்டுபிடிக்க முடியாத, இயற்பியலின் மிக ஆழமான சில கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் சப்ரினா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். ஏறக்குறைய 10 வருடங்களாக ’அடுத்த ஐன்ஸ்டீன்’ என்று சப்ரினாவை எல்லோரும் அழைத்தாலும், limelight, headlines news, கோடிக்கணக்கில் சம்பளம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் அறிவைத் தேடுதல் ஆகியவற்றின் மீதே சப்ரினாவின் கவனம் உறுதியாக நிலைத்திருக்கிறது.