மூன்றாவது அணி பற்றி குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. அதற்கு பாஜக மாபெரும் சக்தியாக உருவெடுத்திருப்பது ஒரு முக்கியக் காரணம். காங்கிரஸ் என்பது ஏறக்குறைய காலியாகி வருவது மற்றொரு காரணம். "பாஜக., காங்கிரஸ் அல்லாத 3வது அணி தேவை. அதற்கு நான் தலைமை ஏற்கிறேன். தெலங்கானா போராட்டத்தில் வென்று, தனி மாநிலம் உருவாக்கியது போலவே, இந்த 3வது அணிக்கும் வெற்றி ஈட்டுவேன்" என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சொன்னதை... அதுவும், இன்றைய சூழலில் அவர் இப்படி சொல்லியிருப்பதை எப்படிப் பார்ப்பது?
மூன்றாவது அணி என்பது அத்தனை எளிதான விஷயமா? தமிழகத்தில் உள்ள நாம், இதை எப்படி பார்ப்போம் என்பதும் முக்கியம். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே, "அந்த மோடி வேண்டுமா.... இந்த லேடி வேண்டுமா...?" என்று பேசி, நம்மை அதிர்ச்சியடைய வைத்த ஒரு தலைவரை மிக நெருக்கத்தில் கண்டவர்கள் நாம். மற்ற யாரையும் கூட்டணியில் சேர்க்காமல், தனித்து... துணிந்து நின்று... அதில் மிகப் பெரிய அளவு வெற்றியும் பெற்று, நாடாளுமன்றத்திலேயே 3வது மிகப் பெரிய கட்சியாக, தனது அதிமுகவை முன்னிருத்திய ஜெயலலிதா, இப்போது களத்திலேயே இல்லை என்பது அரசியல் பரபரப்பு விரும்பிகளின் போறாத காலம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், எந்த அடிப்படையில் ஜெயலலிதா இப்படியொரு வியூகம் வடிவமைத்தார் என்பது முக்கியமான கேள்வி. ஒருவேளை, பாஜக., காங்கிரஸ் என எந்தக் கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போகும் பட்சத்தில், தேர்தல் முடிவுக்குப்பின் 3வது அணி என, புதிதாக ஒன்று உருவானால், அதில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக அதிமுக இருக்கும் பட்சத்தில் தான், அந்த உச்சப் பதவியையும் எட்டிவிடலாம் என்று, அன்று அவர் போட்டது அரசியல் கணக்கு, அசாதாரணமானது. ஜெயலலிதா போட்ட கணக்கு Macro அளவில் தோல்வி கண்டிருந்தாலும், Micro அளவில் பெருவெற்றி கண்டது. அவரது வாக்கு வங்கிக் கணக்குகள் பலித்தன.
தேர்தலுக்கு பின்பான சூழல்.... வாய்ப்புகளைக் கணித்து - அன்று ஜெயலலிதா போட்ட கணக்கு வேறு. தேர்தல் மேகங்கள் இன்னும் சரியாக திரளுவதற்கு முன்பே, அவற்றை திசை திருப்பி, வழிநடத்திச் செல்லும் பொறுப்பை ஏற்பது என்பது வேறு. அந்த வகையில் ஓராண்டுக்கு முன்பே, இப்போது சந்திர சேகர ராவ், கணக்குப் போட்டு களமிறக்கியுள்ள அரசியல் வேறு என்றே தோன்றுகிறது. ஜெயலலிதாவுக்கு கிடைத்த அடித்தள வெற்றி போல, 'ராவ் காரு'க்கு கிடைக்குமா... அல்லது, 'உள்ளதும் போச்சு!' என தெலங்கானாவிலேயே அவர் தடுக்கி விழுவாரா என்பதற்கு இப்போதே ஜோசியம் சொல்ல முடியாது. ஆனால், ஜெயலலிதாவுக்கு இல்லாத... கிடைக்காத ஒரு சாதக சமிக்ஞை சந்திரசேகர ராவுக்கு இப்போது கிடைத்துள்ளது.
மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, தொலைப்பேசி மூலம் ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் (சிபு சோரனின் மகன்) தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள முஸ்லிம்களின் கட்சித் தலைவரும், எம்பியுமான ஓவைசி பச்சைக் கொடி காட்டியுள்ளார். மஹாராஷ்ட்ராவில் இருந்து 6 எம்பிக்கள்....., உள்ளூரிலேயே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிரபலமான நடிகர் பவன் கல்யாண் நேசக்குரல் கொடுத்துள்ளார். இதெல்லாமே ஓரிரு நாட்களில் நடந்துள்ளன. அடுத்து வரும் நாட்களில் என்ன நடக்குமோ!
நாடு முழுவதற்குமான தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை, இப்போது சந்திரசேகர ராவுக்கு கிடைத்திருப்பது போதுமான ஆதரவு இல்லைதான். இது மட்டுமே, வெற்றிக்கு நம்பிக்கை தருவதாக இல்லைதான். செங்கோட்டை நாற்காலிக் கனவு வந்துவிட்ட யாரும்... - 'கேசிஆர்' என, சுருக்கமாகக் குறிப்பிடப்படும், சந்திரசேகர் ராவும், இதையெல்லாம் தாண்டி, பல கட்டங்கள் முன்னேறி வர வேண்டும். அதுவும், இப்போது நரேந்திர மோடி - அவருக்கே கட்டியெழுப்பி வைத்துள்ள பிம்பம் - இந்தியா, இதுவரைக் கண்ட பிரதமர்களில் கூட, ஒரு சிலருக்கு மட்டுமே அமைந்த வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அதனால், அந்தப் பிம்பத்துக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி சார்பில் - ராகுல் காந்திதான் என்பதை, சமநிலை போட்டியாக பலரால் பார்க்க முடியவில்லை. இந்தக் கருத்து, நாடு முழுவதும் பரவலாக உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. அதனால், 'இந்த ஒரு அம்சமே, மோடிக்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாதே!', என்ற ஏக்கத்திலும், அதற்கான மாற்று வழி தேடலிலும் உள்ள அனைவருக்கும், இப்போது சந்திரசேகர ராவ் செய்திருக்கும் அறிவிப்பில் முதல்கட்ட ஆறுதல். ஆனால், இது மட்டுமே, "மோடி Vs கேசிஆர்" என, இந்த இருவரையும் நிஜமான கள எதிரிகளாக மாற்றுமா என்பதை இப்போதே உறுதியாகச் சொல்வது கூட, சற்று முந்திய செயல். ஆமாம். ஆங்கிலத்தில் Premature என்பார்களே, அப்படியான நிலைதான்.
அடுத்து வரும் நாட்களில் கேசிஆரின் அறிவிப்புக்கான ஆதரவு எங்கே போய் நிற்கும் என, இப்போதே எதுவும் சொல்ல முடியும் எனத் தோன்றவில்லை. ஆனால், ஒருவேளை சந்திரசேகர ராவ் நிஜமாகவே மற்ற மாநிலங்களில் உள்ள பிறக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, அவர்களது ஆதரவையும் பெற்று, மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர்களில் வலுவான ஒருவராக எழுந்து நிற்பதாக இருந்தால்.....! அப்படியான எதுவும் நடக்காத பட்சத்தில், நடப்பதற்கான வாய்ப்பு குறித்து யாரும் அதிகமாக யோசிக்காத பட்சத்தில்... சந்திர சேகர ராவுக்கு இப்போது கிடைத்திருக்கும் ஆதரவு சமிக்ஞைகள் சற்று அதிகம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால், அந்த அளவுக்கு தேவை இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
ஒரு நேரத்தில் என்று சொல்வதைவிட, நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்றவுடனேயே, அவருக்கு 'சண்டியர் இவர்தான்' என்ற அளவில், தேசிய அளவில் நம்பிக்கை தந்தவர் - பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார்தான். ஆனால், அரசியல் சாணக்கியரான மோடி, உள்ளூரில் அரசியலைக் கையில் எடுத்து, அதில் ரசவாதங்களைச் செய்து, இப்போது நிதிஷ் குமாரை ஒரு பதக்கமாக்கி தனது சட்டைப் பாக்கெட்டின் அருகில் குத்தி தொங்கவிட்டுக் கொண்டார். அன்றிலிருந்து, மோடியை எதிர்த்து தேசிய களத்தில் யார் என்ற கேள்வி தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.
காங்கிரஸ் கட்சி சார்பிலான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வரும் தேர்தல் களத்தில் நிற்பது குறித்தும்... அடுத்த 5 ஆண்டுகள் பற்றிய தனது திட்டம் குறித்தும்... அல்லது, அரசியல் ஓய்வு பெறுவது குறித்தும் இன்னும் வாய் திறக்கவில்லை என்றாலும், 2019 தேர்தல் களமும், அதன் காலமும் மன்மோகன் சிங்குக்கானதல்ல என்றே எனக்கு தோன்றுகிறது. இது எதனால் என்று எனக்கு புரியவில்லை. ஒரு உள்ளுணர்வு, அவ்வளவுதான். அது பொய்த்துப் போகலாம்; வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி நடந்தால் காங்கிரஸ்காரர்கள் மகிழ்வார்கள் என்றும் நினைக்கிறேன். அப்படியே நடக்கட்டுமே! ஆனால், என் உள்ளுணர்வு அதற்கு வாய்ப்பில்லை என்கிறது. அதனால், காங்கிரஸ் கட்சிக்கு பயிற்சி தலைவராக இருந்து...., இப்போது முழு நேரத் தலைவராகக் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ராகுல் காந்தியை, பயிற்சி பிரதமராக வைத்திருந்து, முழு பிரதமர் பொறுப்புக்கு தகுதியாக்கப் போவது மன்மோகன் சிங் அல்ல என்றே எனக்கு தோன்றுகிறது. அதனால், இப்போதைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மோடியை களத்தில் நின்று சரிசமமாக எதிர்க்கப் போவது யார் என்ற கேள்வி இருப்பதாகவே நினைக்கிறேன். இந்த நேரத்தில்தான், சந்திரசேகர ராவின் தற்போதைய ஏவுகணை முக்கியத்துவம் பெறுகிறது.
சரி... சந்திரசேகர ராவ், எந்த அடிப்படையில் தன்னை பிரதமர் பதவிக்கான ஒரு வேட்பாளராக.... நரேந்திர மோடிக்கு எதிரான ஒரு நபராக.... முன்னிறுத்துகிறார்? அவரது பின்னணி... அரசியல் அனுபவம்... நிர்வாகத்திறன்.... ஆளுமை மாட்சி என்ன.. எப்படி? எந்த அடிப்படையில் இவரை மோடிக்கு மாற்றாக பார்க்க முடியும் என்ற கேள்வியை யாராவது எழுப்பினால், நியாயம்தான். அவரே சொல்வதுபோல, தெலங்கானா மாநிலத்தை தனி மாநிலமாக பிரிக்கக் கோரி, நீண்ட நாட்களாக அரசியல் களத்தில் நிற்பவர்தான் கேசிஆர். அதில் சந்தேகமில்லை. அந்தப் பயணத்தில், மாநிலத்தில் மட்டுமின்றி, மத்தியிலும் கூட அமைச்சராகப் பதவி பொறுப்பு வகித்த அனுபவம் பெற்றவர்தான். இது தவிர, தற்போது மாநில முதல்வராகவும், ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் தொடர்கிறார். ஆனால், அரசியல் வியூகம் அமைப்பதில், "மோடிக்கு எதிராக நின்று களம் காணும் அளவு மதியூகியா?" என்றால்? தற்போது அவர் முதல்வராக உள்ள தெலங்கானா மாநில அரசியல் மற்றும் அதனுடன் தொடர்புள்ள விஷயங்களை அவர் எப்படி கையாண்டுள்ளார் என பார்க்கலாம்.
தனி மாநிலம் உருவாக, நீண்ட காலமாக களத்தில் நின்று போராடியது... மற்ற போராளிகளுக்கு களத்தில் நின்று உதவியது போன்றவற்றால் அம்மாநில மக்கள் மனதில் ஒரு சாதக நிலையில் இருந்த அவரது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்), அதன்பின், குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் சில அரசியல் விளையாட்டுகளை அரங்கேற்றித்தான் இருக்கிறது. முழு ஆந்திர பிரதேசமாக இருந்த காலத்தில் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்காக, இந்த நிலப் பகுதியில் பணியாற்றி, அதன் முக்கியத் தலைவர்களாக உள்ளவர்களைக் கொண்டு, அம்மாநிலத்தில் தனது கட்சியின் இருப்பை பெரிதாக தக்க வைக்க இயலாத நிலைதான் இப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு! அந்த விக்கெட்டுகளையும் தன் லாவக பந்து வீச்சில் காலி செய்தவர் கேசிஆர் என்பதை மறுக்க முடியாது. அதனால், ஓரிருவர் தவிர, அந்நாள் தலைவர்கள் அத்தனைப் பேரையும் மெல்ல, தன் கட்சிக்குள் ஈர்த்துக் கொண்ட கேசிஆர், மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி குழப்பங்கள், பதவிப் போட்டிகள் முடிவுக்கு வராத நிலையே தொடரும்படி பார்த்துக் கொள்வதால், அண்மைக்காலம் வரை அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதனால், மாநில அரசியலில் கேசிஆர் எதிர்கொள்ள வேண்டியது பாஜகவை மட்டும்தான். தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும்போது, மாநில அளவில், இது ஒரு பொருட்டா? இந்த வாதத்தில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. இவ்வகையில் மாநிலத்தில் தற்போதைக்கு சற்று வலுவான நிலையை தனது கட்சிக்கு உறுதி செய்துவிட்ட நம்பிக்கையில்தான் கேசிஆர், தேசிய அரசியல் களத்துக்கு அடி போடுகிறார் என்பதை கவனிக்க வேண்டும்.
சரி... அவருக்கான ஆதரவு எங்கிருந்து எல்லாம் வரும் வாய்ப்புள்ளது?
தென்கோடியான தமிழகத்தில் தொடங்கினால், 3வது அணிக்கு வருமாறு, ஏற்கனவே திமுக செயல் தலைவர் ஸ்டாலினை தொலைப்பேசி மூலம் - கேசிஆர் அல்ல; மம்தா பேனர்ஜி அழைத்திருக்கிறார். 2019 தேர்தலின்போது, பாரதிய ஜனதாவுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்பது நிதர்சனம். ஆனால், பழைய சகாவான காங்கிரஸ் கட்சியைத் தவிர்க்க, திமுக முன்வருமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. தில்லி மீது ஸ்டாலினுக்கு இப்போது அதீத ஆர்வம் இல்லை என்பதால், இது குறித்த இறுதி முடிவு தேர்தல் நெருக்கத்தில் எடுக்கப்படுவதாகக் கூட இருக்கலாம்.
பக்கத்தில் கேரளா. அங்குள்ள இடதுசாரிகள், குறிப்பாக மார்க்ஸிஸ்ட்கள், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பதா என்பதில் உள்கட்சி குழப்பம். தேசிய அளவில் தொடரும் இந்தப் பிரச்னைக்கு, இப்படி ஒரு தீர்வு வரும் என்றால், ஒருவேளை பிரகாஷ் கரத்தின் கை வலுப் பெறலாம். சீத்தாராம் யெச்சூரியின் யோசனை, மீண்டும் தோற்க நேரலாம். ஆனால், பாஜக கால் ஊன்றுவதைத் தடுக்க எது சரியான அணுகுமுறை என முடிவு செய்தால், யெச்சூரியின் கை ஓங்கும் என எதிர்பார்ப்போம். இது விரைவில் தெரிந்துவிடும்.
கர்நாடகாவில், தேவகவுடா மற்றும் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம், 3வது அணிக்கு உடனடியாக முன்வரலாம். ஆனால், அது 3ம் அணிக்கு எந்த அளவு வலுசேர்க்கும் என்ற கேள்வி தொடர்கிறது. மற்றபடி, அம்மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக இடையேதான் கடும் போட்டி இருக்கும்.
பக்கத்தில் புதிய மாநிலமான ஆந்திராவுக்கு வந்தால்...? பாஜகவுடனான கூட்டணியால் மாநிலத்துக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் அந்தக் கூட்டணியில் சந்திர பாபு நாயுடு இன்னும் தொடர்கிறார். ஆனால், அவரது எதிர்பார்ப்பு எதையும் அத்தனை எளிதில் கொடுக்க பாஜக தயாராக இல்லை. காரணம், எந்த மாநிலமாக இருந்தாலும், அதில் ஒரு மாநிலக்கட்சி வலுப் பெறுவது, பாஜகவின் எதிர்காலத்திற்கு இசைவானதல்ல என்பதை, அவர்கள் மறைப்பதில்லை. அது நாயுடுவுக்கும் புரிந்திருக்கிறது. அதனால், இப்போதைய கூட்டணி எத்தனை நாட்களுக்கு என்ற கேள்வி இருந்தாலும், ஆந்திர பிரதேசத்தை பிரிக்க வேண்டும் என்ற கேசிஆரின் கோரிக்கைக்கு எதிர்நிலைப்பாட்டிலிருந்தவர், அடுத்த தேர்தலுக்குள் இறங்கி வருவது தெலுங்கு தேசத்துக்கு எளிதான யுக்தி அல்ல. மறுபுறம், சந்திர பாபு நாயுடுக்கு தில்லி நாற்காலி மீது ஆசை இருப்பதாகத் தெரியவில்லை என்பதால், தேர்தலுக்கு முந்தையக் கூட்டணியில் இல்லாவிட்டாலும் பிந்தையக் கூட்டணியில் சந்திர பாபு நாயுடு இடம்பெற வாய்ப்புண்டு. அண்மை காலமாக கள நிலவரத்தில் தெலுங்கு தேசமும், டிஆர்எஸ்-ம் காட்டி வரும் இணக்கத்தை அப்படியே முன்னெடுத்து, பாஜக கூட்டணியில் இருந்து நாயுடு வெளியேற வழிவகை செய்தாலே, அது கேசிஆருக்கு சாதகம்தான்.
மற்றபடி, ஒடிசாவில், நவீன் பட்நாயக் 3ம் அணியின் இயல்பான பங்காளியாக இடம்பெறுவதுதான் லாஜிக். இது, அம்மாநிலத்தில் வலுவாக கால்பதிக்க முயலும் பாஜகவை இன்னும் உக்ரமாக எதிர்கொள்ள வைக்கும் யுக்தியாகவும் முடியும். அடுத்து மகாராஷ்ட்ராவில் சிவசேனா, இப்படியான ஒரு வாய்ப்பைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. உத்தர பிரதேசம் இந்தக் கூட்டணிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். மாயாவதி, முலயாம் சிங் யாதவ் என அந்த மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இருவருக்குமே தில்லி நாற்காலி குறித்த கனவு உண்டு என்கிற நிலையில், அவர்கள் கேசிஆருக்கு பல்லக்கு தூக்க, எந்த அளவுக்கு முன்வருவார்கள் என்பது கேள்விக்குறி.
பிகாரைப் பொறுத்தவரை, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கொண்டுள்ள இணக்கத்தை முறித்துக் கொண்டு, 3வது அணியில் சேர வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், தேவை ஏற்பட்டால், தேர்தலுக்கு பின் ஏற்படும் கூட்டணியில் கைகோர்க்கலாம். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவைக் கொண்ட கூட்டணியை எதிர்கொள்ள, லாலுவுக்கு காங்கிரஸ் துணை தேவைப்படும். அதனால், 3வது அணிக்கு அங்கே இடம் குறைவு. இது தவிர, தில்லியில்... பஞ்சாபில்... ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சியும், ஜம்மு காஷ்மீரில் மெஹ்பூபாவின் பிடிபியும் 3ம் அணியில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்லலாம். ஆனால், இதையெல்லாம் ஒருங்கே திரட்டப் போவது யார்?
மற்றபடி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு சவாலாக இருக்கப் போவது காங்கிரஸ் கட்சிதானேயன்றி, 3ம்அணியல்ல. அதனால், பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளும் எங்களுக்கு ஏற்றதல்ல என்ற முடிவு எடுக்க வாய்ப்புள்ள இடங்களில் மட்டும்தான் கேசிஆர் களம் அமைப்பதோ, தளம் அமைப்பதோ சாத்தியப்படும். வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, ஒரு காலம் வரை, அவை அனைத்தும் பெருவாரியாக காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் என இருந்த நிலை மாறி, இப்போது அவை பாஜகவின் கோட்டைகளாக மாறியுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.
அதனால், எந்தப் பெரிய அரசியல் திருப்பங்களும் ஏற்படாத பட்சத்தில், 2019ல் எதிர்பார்க்கப்படும் தேர்தல் முன்னதாக வந்தாலும், குறித்த நேரத்தில் வந்தாலும், 3ம் அணி என்ற ஒன்றின் உதயம் பாஜக எதிர்ப்பு ஒட்டுகளைப் பிரிக்கத்தான் உதவும். இந்த ஒரு காரணத்தாலேயே, ஒருவேளை காங்கிரஸ் வலுவிழக்க நேர்ந்தால், அது மறைமுகமாக பாஜகவுக்குத்தான் சாதகம். எனவே இன்று பேசப்படத் தொடங்கியுள்ள 3ம் அணி என்பது குறித்து வெளிப்படையாகச் சொல்வதானால்......
"மோடியின் வெற்றி என்பது அவரது குழுவின், கட்சியின் - பல கட்ட திட்டங்களுக்கும், முயற்சிகளுக்கும், செயல்பாட்டுக்கும் கிடைக்கும் வெற்றி என்று மட்டுமே சொல்லிவிட முடியாது போல; கொச்சையான வார்த்தைகளில் சொல்வதானால், "மோடிக்கு உடம்பு முழுக்க மச்சம்" என்பதே சரியாக இருக்கும்.