சிறப்புக் களம்

பத்ம விருது விழாவில் வெறும் காலுடன் கவனம் ஈர்த்த 'காட்டின் களஞ்சியம்' - துளசி கவுடா யார்?!

PT WEB

72 வயதான நிலையில் 'காடுகளே வாழ்க்கை', 'மரம் நடுவதே பணி' என்று வாழ்ந்து, இளம் தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுத்து வருபவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மூத்த சூழலியல் போராளி துளசி கவுடாவின் பயணம் குறித்து பார்ப்போம்.

கலை, இலக்கியம், சமூகப் பணி என பல துறைகளில் சிறப்பாக செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி 2020-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பத்மஸ்ரீ விருது பெற வெறும் காலுடன் வந்து கவனம் ஈர்த்தவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 72 வயதான மூதாட்டி துளசி கவுடா. நேற்றைய நிகழ்வின்போது பாரம்பரிய உடையில், செருப்பு போடாமல் வெறும் காலுடன், பிரதமர் மோடியை சந்தித்து வணக்கம் கூறியதுடன், விருதும் பெற்றார் மூதாட்டி. இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

கர்நாடக மாநிலம் அங்கோலா நகரத்துக்கு அருகில் உள்ள ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி கவுடா. சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்படும் மூதாட்டி துளசி கவுடாவின் கதை நம்மில் பலருக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது. கர்நாடகாவில் உள்ள ஹலக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த துளசி கவுடா பொருளாதரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவரும்கூட. துளசி கவுடா சிறுவயதில் இருந்தே பள்ளிக்கூடங்களுக்குச் சென்றதில்லை. பெரிதாக கல்வியறிவு பெறாமல் வளர்ந்தாலும், காடுகளும் மலைகளும் துளசி கவுடாவுக்கு அத்துப்படி. அதைவிட காடுகளின்மீது அவ்வளவு பிரியம் என்று சொல்லலாம்.

மலைவாழ் தாவரங்கள், விலங்குகள் குறித்து நிறைய தெரிந்துவைத்திருந்தார். அதுவே காடுகள் மீது அவருக்கு பிரியத்தை ஏற்படுத்தியதோ என்னவோ, மிகச்சிறிய வயதில் இருந்தே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தீவிரமாகப் பங்காற்றி வருகிறார். தனது வாழ்க்கையின் ஆரம்ப காலட்டத்தில், அதாவது 12-வது வயதில் இருந்து வனத்துறையில் தன்னை ஒரு தன்னார்வலராக இணைத்துக்கொண்ட மூதாட்டி துளசி கவுடா, அப்போதிருந்தே மரங்கள் நட்டு வளர்த்து வந்துள்ளார். குறைந்த காலத்திலேயே ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு பராமரித்து வந்த அவரின் அர்ப்பணிப்பை பார்த்த அரசு, அவரை நிரந்தரப் பணியாளராக நியமித்தது.

நிரந்தரப் பணிக்கு பிறகு அவரின் பங்களிப்பு இன்னும் பெரிதாக இருந்தது. இதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தினார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் வனத்துறையில் நிரந்தர பணியாளராக பணியாற்றி கடந்த தசாப்தத்தில் ஓய்வுபெற்றார்.

ஓய்வுக்குப் பிறகும் காடுகளின் மீதான அவரின் பிரியம் சிறிதும் குறையவில்லை. ஓய்வுக்கு பிறகான ஒவ்வொரு நாளும் தனது இருப்பிடத்தின் சுற்றுப்புறத்தில் மரங்கள் நட்டு வந்தார். தனது வாழ்நாள் முழுவதும் இயற்கையைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணித்த துளசி கவுடா, அவரின் வாழ்நாளில் 30,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதற்காக தனது ஊதியத்தையும் ஓய்வதியத்தையும் வெகுவாக செலவிட்டுள்ளார்.

காடுகளில் இருக்கும் அரியவகையான தாவரங்களும் மூலிகைகளும் அவைகள் கொடுக்கும் பலன்களும் மூதாட்டி துளசி கவுடாவுக்கு அத்துப்படி. அவரின் காடு தொடர்பான அறிவை கண்டு பலமுறை ஆர்வலர்கள் வியந்துள்ளனர். இந்த அறிவின் காரணமாக வன ஆர்வலர்கள் மத்தியில் மூதாட்டி துளசி கவுடா, 'காடுகளின் களஞ்சியம்' (Encyclopedia of Forest) என்றே அழைக்கப்படுகிறார். தனது 12 வயதில் தனது தாயுடன் ஒரு நர்சரியில் பணிபுரியும்போது காடுகளில் மரம் நடும் பணியை தொடங்கிய அவர் 72 வயதிலும் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் மிகுந்த அர்ப்பணிப்பு உடன் தன்னை ஈடுபடுத்தி வரும் அவரை பத்மஸ்ரீ விருது கொடுத்து மத்திய அரசு கௌரவித்துள்ளது.

இந்த விழாவில்தான் வெறும் காலுடன் வந்து கவனம் ஈர்த்துள்ளார் மூதாட்டி துளசி கவுடா. இந்த விழா முடிந்தவுடன் பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்ததுடன் அவரிடம் ஆசியும் பெற்றுள்ளார்.

- மலையரசு