பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள குர்மீத் ராம் ரஹீமின் அமைப்பை நடத்துவதற்கான அடுத்த வாரிசு யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.
தேரா சச்சா சவுதா எனும் மிகப்பெரிய அமைப்பை நடத்தி வந்த சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங். அந்த அமைப்பில் ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள், தொழிற்சாலைகள், ஒரு சினிமா தியேட்டர் மற்றும் ஒரு சில தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறது தேரா சச்சா சவுதா அமைப்பு.
சுமார் 12 மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் தேரா சச்சா சவுதாவுக்கு சொந்தமாக உள்ளது. இத்தகைய மிகப்பெரிய அமைப்பின் தலைவராக இருந்த குர்மீத் தற்போது சிறைக்கு சென்றுவிட்டார். 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுவிட்ட நிலையில், தேரா சச்சா சவுதா அமைப்பின் அடுத்த தலைவர் யார்? அந்த அமைப்பை நிர்வகிப்பவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
குர்மீத்துக்கு சாரன்ப்ரீத், அமன்ப்ரீத் என்று இரண்டு மகள்களும் ஜஸ்மீட் என்ற மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. எனவே ராம் ரஹீமின் ஆன்மீக வாரிசாக ஜஸ்மீட் அறிவிக்கப்பட்டு, தேரா சச்சா சவுதா அமைப்பை அவர் நிர்வகிப்பார் எனக் கூறப்படுகிறது. ராம் ரஹீம் சிறைக்கு போன அன்றே, அவரது தாய் நசீப் கவுர், தனது பேரன் ஜஸ்மீட்தான் தேரா அமைப்பின் அடுத்த தலைவர் எனக் கூறினார்.
எனினும் தேரா அமைப்பின் தலைவர் பதவிக்கு வேறு சிலரும் போட்டியில் உள்ளனர். குர்மீத் ராமுக்கு வளர்ப்பு மகள் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ஹனிப்ரீத். இவர் ராம் ரஹீம் நடித்த திரைப்படங்களில் நடித்தவர். 2009 ஆம் ஆண்டு இந்தப் பெண்ணை ராம் ரஹீம் தனது மகளாகத் தத்து எடுத்துக் கொண்டார்.
1999 ஆம் ஆண்டு குர்மீத்தின் பக்தரான விஸ்வாஸ் குப்தாவை திருமணம் செய்து கொண்டவர் ஹனிப்ரீத். குப்தா தான் குர்மீத்துக்கு ஹினியை அறிமுகப்படுத்தினார். பிற்பாடு ஹனிக்கும் குர்மீத்துக்கும் முறைகேடான தொடர்பு இருப்பதாக பஞ்சாப் ஹரியானா நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் குப்தா. ராம் ரஹீமின் கட்டுப்பாட்டில் ஹனி இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.
அதன்பிறகு ஒரு வழியாக குப்தாவும், குர்மீத்தும் நீதிமன்றத்திற்கு வெளியே சமாதானம் பேசி, ஹனியும் குப்தாவும் பிரிந்துவிட்டனர். அதன்பிறகு தேரா ஆசிரமத்திற்கு சென்று குர்மீத்துடன் வசிக்க ஆரம்பித்தார் ஹனிப்ரீத்.
தேரா சச்சா அமைப்பின் தலைவர் பதவிக்கு இவரும் போட்டியில் உள்ளார். நடிகை, இயக்குனர் என்று பல முகங்களைக் கொண்ட இவர் தேரா அமைப்பினர் மத்தியில் மிகப்பிரபலம். ட்விட்டரில் இவரை 10 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர் என்றும் 5 லட்சம் பேருக்கு மேல் பேஸ்புக்கில் இவரைப் பின்தொடர்வதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களைத் தவிர தேரா அமைப்பின் தலைவர் பதவிக்கு விபாசனா எனப்படும் 35 வயது பெண்மணியின் பெயரும் அடிபடுகிறது. விபாசனா தேரா அமைப்பின் சாத்வியாகவும் அந்த அமைப்பில் நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கிறார். எனவே இவரும் தலைவராகலாம் என்கின்றனர்.