மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகள் உயிர் பிழைக்க அவர்களுக்குக் கிடைக்கும் கடைசி வாய்ப்பு ஜனாதிபதிக்கு கருணை மனுப் போடுவதுதான். அரசியல் சாசனம் 72-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் மரண தண்டனை பெற்றவர்களை மன்னிக்கவும் அவர்களது தண்டனையை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ளது. எனினும் கருணை மனுக்களைப் பரிசீலிக்கும் போது குடியரசுத் தலைவர் மத்திய அமைச்சரவைக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப முடிவெடுப்பார்.
தற்போதைய விதிகளின் படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வையே அமைச்சரவையின் பார்வையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதத்தில் இரண்டு பேரின் கருணை மனுக்களை நிராகரித்தார். இருவருமே பாலியல் வன்முறை குற்றவாளிகள். ஒருவர் 2012ல் இந்தூரில் ஒரு நான்கு வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்றவர். மற்றொருவர் பூனாவில் ஐடி பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்றவர். இவர்கள் இருவரின் மனுவோடு சேர்த்து இதுவரையில் பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்த கருணை மனுக்களின் எண்ணிக்கை 30.
1991-ல் இருந்து 2010 வரையில் இருந்த குடியரசுத் தலைவர்களால் 69 கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குப் படி கிட்டத்தட்ட 20 ஆண்டு காலத்தில் 69 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்த போது அவரது பதவிக் காலமான 1987-ல் இருந்து 92 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் மட்டுமே 44 கருணை மனுக்களை நிராகரித்திருக்கிறார். இதுவரையில் வந்த குடியரசுத் தலைவர்களிலேயே அதிகமான கருணை மனுக்களை நிராகரித்தவர் இவர்தான்.