hermit crab
hermit crab PT
சிறப்புக் களம்

இயற்கையின் விநோதங்கள்! ஆச்சர்யப்பட வைக்கும் துறவி நண்டின் வாழ்வியல் முறையும்.. வீடு தேடும் படலமும்!

Jayashree A

துறவிநண்டு (hermit crab)

'துறவிநண்டு' வகை உயிரினம் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. நீங்கள் கடற்கரையோ அல்லது ஆற்று படுகைக்கோ சென்றால் உங்களின் காலருகில் ஒரு குட்டி நத்தையின் ஓடோ அல்லது சிப்பியோ கிளிஞ்சள்களின் கூடோ ஏதோ ஒன்று நீந்தி சென்றுக்கொண்டிருக்கும். அது உண்மையில் நத்தையோ கிளிஞ்சளோ கிடையாது, இறந்த இவைகளின் கூட்டை தனது வீடாக பாவித்துக்கொண்டு உயிர் வாழும் ஓர் உயிரினம் தான் இந்த ஹெர்மிட் கிராப். இதை பற்றிதான் நாம் தெரிந்துக்கொள்ளப்போகிறோம்.

இந்த துறவி நண்டானது படைப்பின் முழுமை பெறுவதற்குள்ளாகவே பிறந்து விட்டது என்றே கூறலாம். ஏனெனில் இதன் கைகால்கள் முழுமைப்பெற்று, பல கண்களைக் கொண்டிருந்தாலும் இதன் வயிற்று பகுதியிலிருந்து பின்பகுதி வரையிலும் மிகமிக மெல்லிய, மிருதுவான உடலமைப்பை கொண்டிருப்பதால், சிறு மண் துகள்களோ, குட்பைகளோ அதன் மிருதுவான பகுதியை கிழித்துவிடும்.

ஆகவே, அதை பாதுகாத்துக்கொள்வதற்காக, தற்காப்புக்ககவும் ஒரு மறைவிடத்தை தேடி தேர்ந்தெடுத்துக்கொண்டு அதனுள் வாழ்ந்து வருகிறது. இறந்த சிப்பி, நத்தை போன்றவற்றின் ஓடுகளை தனது வளார்ச்சிக்காகவும் பாதுகாப்புக்காக பயன்படுத்திக் கொள்கிறது. துறவி நண்டானது நாளாக நாளாக வளரும்பொழுது, தனக்கான வளர்ச்சிக்கு ஏற்ப தனது கூட்டையும் அப்போதைக்கு அப்போது மாற்றிக்கொள்ளும்.

அதனாலேயே இவைகளின் பெரும்பாலான தேடல்கள் தனக்கான ஒரு இருப்பிடத்தை மாற்றிக்கொள்வதற்காகவே இறந்த பூச்சிகளின் கூடுகளை தேடியபடியே இருக்கும். அதாவது சிறியது முதல் பெரியது வரை அளவில் சிறிதும் பெரிதுமாக இருக்கும் இந்த துறவி நண்டுகள் பெரும்பாலும் கூட்டம் கூட்டமாகவே வாழும். இதற்கு ஒரு காரணமும் உண்டு. ஒரு துறவி நண்டானது தான் வளர்ந்ததும், தனக்கான வீட்டை மாற்றிக்கொள்ளும் சமயம் அதன் பழைய வீட்டை வேறு ஒரு துறவி நண்டானது உபயோகித்துக்கொள்ளும். அந்த வேறு ஒரு நண்டின் வீட்டை ஒரு சிறிய நண்டானது தனது வீட்டாக மாற்றிக்கொள்ளும்.

புரியும் படி சொல்லவேண்டும் என்றால், நாம் ஒரு வீட்டை காலி செய்து வேறோரு வீட்டிற்கு செல்லும் போது நமது பழைய வீட்டிற்கு வேறு ஒரு குடும்பமானது குடிவருவது போலதான், ஒரு துறவி நண்டின் ஓடானது மற்றொரு துறவி நண்டிற்கு வீடாகிறது. இவ்வாறு தங்களுக்குள் வீட்டை மாற்றிக்கொள்ளும் சமயம் சில நண்டுகள் ஒற்றுமையில்லாமல் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்ளும், அந்த சண்டையில் சிலவகை நண்டுகள் தங்கள் உயிரையும் விட்டுவிடுகிறது.

முதல் துறவி நண்டானது தனது வீட்டை மாற்றிக்கொள்ளும் சமயம் அதை தனது கால்களாலும் உடலில் இருக்கும் சில திரவங்களாலும் அவ்வீட்டை சுத்தம் செய்து கொள்வதில் கவனம் செலுத்தும். அதன் பிறகே அது தனது புது வீட்டில் குடியேற துவங்கும். ஏனெனில் ஓட்டின் உள் இருக்கும் தூசுகள் குப்பைகள் அதன் உடலை கிழித்து அவை இறந்துவிடக்கூடிய அபாயம் இருப்பதால் புது வீடுகிடைத்ததும் துறவி நண்டின் முதல் வேலையே அதன் வீட்டை சுத்தம் செய்வது தான்.

இதில் சிலவகை துறவி நண்டின் வீடானது அளவில் பெரிதாக இருந்தால் அதை சுமந்து கொண்டு நடப்பதற்கு மிகவும் சிரமப்படும். ஆனாலும், அதற்கு தனக்கான சரியான வீடு அமையும் வரையில் அவ்வீட்டை விட்டு அகலாது.

இதை வளர்ப்பு உயிரினமாக வீட்டில் சிலர் வளர்த்து வருகிறார்கள். வளர்ப்பு பிராணிகளுக்கு எப்படி ஆடைகள் வாங்குவது நாகரீகமாக உள்ளதோ அதே போல் இதற்கென்று ஒரு கண்ணாடி வீடோ அல்லது வேறொன்றொ உருவாக்கி அதன் வளார்சியை காண அதை அதற்கு பரிசாக அளிக்கிறார்கள். துறவி நண்டிற்கு சரியான வீடும் உணவும் கிடைத்து விட்டால் இதன் ஆயுட் காலம் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள்.

எது எப்படியோ நம்மில் பலர், தங்களின் வசதிக்கேற்ப சரியான வீடு கிடைக்கும் வரை துறவி நண்டைப்போல் வீட்டைத் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.