சிறப்புக் களம்

எங்கே போய்...எப்போது குறையும் பெட்ரோல்... டீசல் விலைகள்?

எங்கே போய்...எப்போது குறையும் பெட்ரோல்... டீசல் விலைகள்?

webteam

கடந்த சில வாரங்களுக்குமுன், நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான சேகர் குப்தா ஒரு அரசியல் விமர்சனக் கட்டுரை எழுதியிருந்தார். அதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு குறித்து கருத்து வெளியாகியிருந்தது. 'நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு - பல நேரங்களில், மக்களின் கவனம் ஒரு குறிப்பிட்ட பிரச்னையில் குவியும் நிலை இருந்தால், அதை வேறு ஒரு விஷயம் மூலம் திசை திருப்பிக் கொண்டு செல்கிறது' என்பதுதான், அந்த கட்டுரையின் அடிநாத சொற்கள். தற்செயலாக நடக்கும் விஷயங்களை, மோடி அரசு தனக்கு சாதகமாக... ஆனால், சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொள்கிறதா... அல்லது, இதை இவர்களேதான் திட்டமிட்டுச் செய்கிறார்களா என்பது விவாதத்துக்குரிய, தனி விஷயம். இப்போது அதற்குள் செல்ல வேண்டாம். 

ஆனால், நாட்டின் முதல் குடிமகன் தொடங்கி, கடைகோடி குடிமகன் வரை, எல்லாரையும் பாதிக்கும் விஷயம் பெட்ரோல்... டீசல் போன்ற அத்தியாவசியமான எரிபொருட்களின் விலை! சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் டீசல் தேவை என்பதால்...., பொருட்களின் சில்லறை விற்பனை விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்.... இன்று - சரித்திரித்தில் இல்லாத உச்சத்தைத் தொட்டிருக்கும் டீசல் விலை பற்றி - மக்களிடையே ஒருவித எழுச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் இதையே ஒரு பிரச்னையாக வைத்து, போராட்டங்கள்... பந்த்கள் நடத்தியிருக்க வேண்டும். மீடியாக்கள் இதைப் பற்றியே பேசி மாய்ந்திருக்க வேண்டும். ஆனால், இவை எல்லாம் நாட்டில் இயல்பான நிலை இருந்திருந்தால்! மன்மோகன் சிங் பிரதமராக இருந்த, யூபிஏ II காலத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையொட்டி, உள்ளூரிலும் எரிபொருட்களின் விலை உயர்ந்தபோது இப்படித்தான் நடந்தது. ஆனால், இன்று அதையும் தாண்டி... வரலாறு காணாத உச்சத்தை டீசல் விலை தொட்டாலும்... கட்டுக்கு அடங்காமல் பெட்ரோல் விலை உயர்ந்தாலும்.... அதைவிட, வேறு முக்கிய பிரச்னைகள் - மக்களுக்கு! அதனால், மிகவும் இலகுவாகவே மோடியின் அரசு, இந்த பிரச்னையைக் கடந்து செல்கிறது. 

தமிழகத்தில் - ஒருபுறம் காவிரி... மறுபுறம் ஸ்டெர்லைட்... இன்னொரு பக்கம் நியூட்ரினோ.... போதாக்குறைக்கு, புதிதாக சேலம் விமான நிலைய விரிவாக்க பிரச்னை.... இவற்றைத் தாண்டி, இன்னும் அணையாமல் நெடுவாசல்.... கெயில் குழாய் பதிப்பு பிரச்னை... என நீண்டதொரு பட்டியலே போடலாம். 

"அம்மா"வை நம்பி வாக்களித்த மக்களை... 'அந்தோ பரிதாபமாக', அவர் விட்டுச்செல்ல நேர்ந்ததும்.... அம்மாவின் பெயரை இன்னும் சொல்லிக் கொண்டு நடக்கும் அத்தனையையும் வேடிக்கை பார்க்க வேண்டிய கட்டாய நிலை - தமிழக மக்களுக்கு!

மற்ற மாநிலங்களின் நிலைமை ஒன்னும் அத்தனை சிறப்பாக இருப்பதாகச் சொல்லிவிட முடியாது. ஆந்திரா, தனி மாநிலமான பின், சிறப்பு அந்தஸ்து தருவதாகச் சொல்லி -  இப்போது மறுக்கப்படுவது, அவர்களுக்கு கவுரவப் பிரச்னையாகிறது. எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கான சட்டத்தின் பல்லைப் பிடுங்கப் பார்க்கிறார்கள் என்ற பிரச்னை - மற்ற பல வட மாநிலங்களில்! (இயல்பு நிலை இருந்திருந்தால், இதில் தமிழகம் முன்னிலை வகித்திருக்கும்) ஆக, ஒரு பிரச்னையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, இன்னொரு பிரச்னை என்பதே - இந்த அரசுக்கு தீர்வாக அமைந்துவிடுகிறது.    

சரி... விஷயத்துக்கு வருவோம். தற்போது சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை (2018 ஏப்ரல் 3, 4 தேதிகளில்) 68 ரூபாய் 38 காசுகள். நாட்டின் தலைநகர் டெல்லியில் 64 ரூபாய் 82 காசுகள். இதுவரை இந்திய சரித்திரித்தில் கண்டிராத உச்ச விலை இது. பெட்ரோல் விலைக்கு வந்தால் - சென்னையில் 76 ரூபாய் 72 காசுகள். டெல்லியில் 73 ரூபாய் 95 காசுகள். 

இந்த அளவு உச்ச விலையை எட்ட வேண்டிய அவசியம் இப்போது இருக்கிறதா என்ற சாமானியனின் கேள்வியும், பார்வையும் நியாயமானது. இன்று நாட்டின் மொத்த பெட்ரோல் மற்றும் டீசல் தேவைக்கான மூலப்பொருள் - கச்சா எண்ணெய், போதுமான அளவு உள்நாட்டில் இல்லை. நமது தேவையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை, இன்னும் இறக்குமதி மூலம்தான் பெறப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படுவதால், அதற்கான செலவை அமெரிக்க டாலர் மதிப்பில் கணக்கு போடுகிறார்கள். (கவனிக்கவும். "கணக்கு போடுகிறார்கள்" என்றுதான் சொல்லியிருக்கிறேன். அதனால், இந்த தொகையை டாலர்களாகவே தருவதில்லை என அறியவும். இண்டியன் பேஸ்கட் ஆஃப் கரன்ஸி என, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சூத்திரம்... வைத்து ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன்படி, டாலர் எண்ணிக்கை மாறுபடலாம்; குறையலாம்.) மறுபுறம், சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை என இரண்டுமே 24x7 அதாவது, எல்லா நேரமும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும், இந்த இரண்டின் விலையும் அண்மையில் உச்சத்தை எட்டவில்லை. அப்படி இருக்க, இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது எப்படி என்ற கேள்வி நியாயமானதுதானே!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை - குறைவாக இருந்த நேரத்தில் செய்யப்பட்ட வரிவிதிப்பு மாற்றங்கள், இப்போது அதன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளன என்பதுதான் உண்மை. அதனால், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து, தினமும் ஏற்ற இறக்கத்தைக் கண்டு வந்த பெட்ரோல்... டீசல் விலையைப் பற்றி... இதுவரைக் கண்டு கொள்ளாமல் இருந்த பெட்ரோலிய அமைச்சகம் இப்போது நிதியமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கிறது. அதாவது - பெட்ரோல் மற்றும் டீசல் மீதான எக்ஸைஸ் வரிவிதிப்பை... அதாவது உற்பத்தி வரிவிதிப்பை... அதன் அளவை குறைக்க வேண்டுமாம். இந்த வரிவிதிப்பால்தான் எரிபொருட்களின் விலை, இந்த அளவு உயர்ந்திருக்கிறது என, நம்மோடு சேர்ந்து கொண்டு பெட்ரோலிய அமைச்சகமும் இப்போது சொல்கிறது. ஆனால், நாமெல்லாம் சொல்லி... சொல்லி... மாய்ந்து போய்... ஓய்ந்துவிட்டபோது.... இப்போது பெட்ரோலியத் துறை சார்பில் சொல்லியும் நிதியமைச்சகம், அதற்கு உடன்படவில்லை. அதாவது, உற்பத்தி வரிவிதிப்பு அளவைக் குறைக்க இயலாது என, திட்டவட்டமாக வாய் திறந்து சொல்லாமல் நழுவுகிறது. சரி.... ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்குள் பெட்ரோல் மற்றும் டீசலைக் கொண்டு வந்துவிட்டால்.... பொது மக்களைப் போலவே, பெட்ரோலிய அமைச்சமும் கோரிக்கை வைத்து பார்த்தது. ஆனால், ஜெட்லி யாருக்கும் அசைந்து கொடுக்கவில்லை. அண்மைய பட்ஜெட்டிலாவது, இதுகுறித்து அறிவிப்பு வருமா என, நம்மோடு சேர்ந்து பெட்ரோலிய அமைச்சகமும் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.  

இங்கே, இன்னொரு விஷயத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஜிஎஸ்டி எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது சில பொருட்களை அந்த வலைக்கு வெளியிலேயே விட்டுவிட்டார்கள். கச்சா எண்ணெய்.... பெட்ரோல்... டீசல்... இயற்கை எரிவாயு.... விமான எரிபொருள், மது... சிகரெட்.... மின்சாரம்.... தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களை உதாரணமாகச் சொல்லலாம். இதற்கு காரணம் இருக்கிறது. மேற்கண்ட பொருட்கள் மீது, தற்போது வரிவிதிப்பது மத்திய அரசு மட்டுமல்ல; தொடர்புள்ள மாநில அரசுகளும்தான். பல மாநிலங்களில், இப்படி கிடைக்கும் வருவாய்தான், மாநில மொத்த வருவாயின் பெரும்பகுதி! அதனால், மேலே கண்ட பொருட்களை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு உட்படுத்தி விட்டால், அவற்றின் மீதான மாநில அரசுகளின் வரிவிதிப்பு அதிகாரம் போய்விடும் என்பது ஒருபுறம். மறுபுறம், விதிக்கப்படும் வரி எவ்வளவு என்பதையும் அவர்கள் முடிவு செய்ய முடியாது. அனைவருக்கும் பொதுவான ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு செய்யும். அப்படி முடிவு செய்யப்பட்ட வரி அளவை யாரும்.... எந்த மாநிலமும் மீற முடியாது. அதனால், தற்போது - தங்களது மாநில நிதி நிலவரத்துக்கு ஏற்ப ஒரு பட்ஜெட்டில் உயர்த்துவதும், அடுத்த பட்ஜெட்டில் குறைப்பதும் என... தங்களது விருப்பப்படி நடந்த வரிவிதிப்புகள் சாத்தியமில்லாமல் போகும். எனவே, மாநிலத்தின் நிதிநிலை - "சுயசார்பை இழந்துவிடும்" என்ற வாதத்தின் அடிப்படையில்தான் -  மேலே சொன்ன பொருட்கள். ஜிஎஸ்டி வலையில் இருந்து தப்பின. அல்லது, இப்படி ஒரு காரணம் அரசுகளால் முன்வைக்கப்பட்டது. 

ஆனால், 'உண்மை' வேறு என்றே இப்போது தோன்றுகிறது. இந்த பெட்ரோல் மற்றும் டீசலை வெளியே வைத்திருப்பதுதான் மத்திய அரசின் விருப்பமும் போல! மோடி பிரதமராக பொறுப்பேற்றபின் இந்த பெட்ரோல்... டீசல் மீதான வரிவிதிப்பினால் மட்டும் மத்திய அரசு எவ்வளவு வருவாய் பெற்றுள்ளது என்பதைப் பார்த்தால் அப்படி ஒரு சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

2014ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து, 2017 செப்டம்பர் வரையான காலத்தில், 12 முறை பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோலிய துறை வட்டாரத் தகவல்படி,  - பெட்ரோல் மீது 54% உற்பத்தி வரி.... 46% மாநில அரசுகளின் வாட் வரி...  73% டீலர் கமிஷன் உயர்ந்துள்ளது. டீசலைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், 154% உற்பத்தி வரி உயர்வும், 48% வாட் வரி உயர்வும், 73% டீலர் கமிஷன் உயர்வும் ஏற்பட்டுள்ளது. 2017 செப்டம்பருக்குப்பின், அக்டோபர் மாதம் ஒருமுறை மட்டும் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 

2014-15ம் நிதியாண்டில் பெட்ரோல்... டீசல் மீதான உற்பத்தி வரி மூலம் மத்திய அரசு 99,000 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றது. அது மோடி பொறுப்பேற்ற பின்..., 2016-17 நிதியாண்டு நிறைவில்... அதாவது, நரேந்திர மோடி பிரதமரான 15 மாதங்களில், சுமார் இரண்டரை மடங்காக, அதாவது 2,42,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. உற்பத்தி வரி மூலமான வருவாய் மட்டுமே இப்படி என்றால், இந்த திரவ எரிபொருட்களால் மற்ற வகையிலும் சேர்த்து அரசுக்கு கிடைக்கும் மொத்த வருவாய் என பார்த்தால், 2014-15ல் 3.32 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, 2016-17ம் நிதியாண்டில் 5.24 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்கின்றன புள்ளிவிவரங்கள். ஓராண்டில் 1.92 லட்சம் கோடி கூடுதல் வருவாய். சராசரியாக பார்த்தால், கடந்த 4 ஆண்டுகளில் 7.68 லட்சம் கோடி ரூபாய்.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான யூபிஏ II ஆட்சி காலத்தில் - 2014ம் ஆண்டு மே மாதத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 113 அமெரிக்க டாலர் என இருந்தது. ஆனால், மோடி பிரதமரான நவம்பர் 2014 வாக்கிலேயே சரியத் தொடங்கியிருந்த அது, 2015 ஜனவரில் 50 டாலர் என்ற அளவுக்கு... பாதிக்கும் மேலாக, குறைந்துவிட்டது. அடுத்த ஓராண்டில், அதாவது 2016 ஜனவரியில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 29 டாலருக்கும் கூட குறைந்தது. ஆனால், இப்படி குறைந்த விலையின் முழு பலனை மத்திய அரசு அனுபவித்ததேயன்றி, மக்களுக்கு மாற்றிக் தரவில்லை. மத்திய அரசு மட்டும்தான் இப்படி என சொல்வதற்கில்லை. மாநில அரசுகளும் இதில் பின்தங்கிவிடவில்லை. 2017 அக்டோபரில் பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைத்த மத்திய அரசு, மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால், பாஜக ஆட்சி செய்த பல மாநிலங்களே கூட, அதைப் பொருட்படுத்தவில்லை. அதேகதிதான், தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் பெட்ரோல் மற்றும் டீசலைச் சேர்க்கலாம் என்ற கருத்துக்கும். பரவலாக,  இப்படி ஒரு கருத்து உள்ள நிலையில், பல மாநில அரசுகள் இதை எதிர்த்து வருகின்றன. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பெட்ரோலும், டீசலும் சேர்ந்தால்... மத்திய அரசின் உற்பத்தி வரி மட்டுமின்றி, இதர பல வரிகளும் இருக்காது. அதனால், தற்போது விற்கப்படும் விலையில் இருந்து கணிசமான விலை குறைப்பை எதிர்பார்க்கலாம். பெட்ரோல் விலை 50 ரூபாய் என்ற அளவுக்கு கூட குறையும் என சொல்லப்படுகிறது. 

பெட்ரோலியத்துறை வட்டாரங்களின்படி, இன்றைய நிலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தயாராகி, டீலருக்கு விற்கப்பட தயாராக உள்ள ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 ரூபாய் 15 காசுகள். ஆனால் சென்னையில் இன்றைய விற்பனை விலை 76 ரூபாய் 72 காசுகள். அதாவது 41 ரூபாய் 57 காசுகள் வரியாக வசூலிக்கப்படுகிறது. உற்பத்தி விலையின் ஒரு மடங்கை விட, கூடுதலாக 5 ரூபாய் வரி! இது இந்தியாவில் மட்டும்தான் சாத்தியம் போல! 

தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவை ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்குள் கொண்டு வந்தால், தற்போது நடைமுறையில் உள்ள 5, 12, 18 அல்லது 28 என எதாவது ஒரு வரிவிகிதத்தில்தான் அது இடம்பெறும். இதில் அதிகபட்சமாக வரியான 28 சதவீத வரி என்று எடுத்துக் கொண்டால் கூட, பெட்ரோலின் விலை 45 ரூபாய்தான். டீலர்களுக்கு தரப்படும் அதே கமிஷன் தொகையைச் சேர்த்து கணக்கிட்டால் கூட 50 ரூபாயைத் தாண்டாது. அதாவது இன்று விற்பனையாகும் விலையில் இருந்து கிட்டத்தட்ட 25 ரூபாய் விலை குறையும். அல்லது மூன்றில் ஒரு பங்கு விலை குறையும். 

தற்போது ஒரு லிட்டர் டீசலின் சுத்திகரிப்பு நிலைய விலை 37 ரூபாய் 42 காசுகள். இதன் மீது 28 சதவீத வரி என்றாலும், 10 ரூபாய் 48 காசுகள். மொத்த விலை 47 ரூபாய் 90 காசுகள். டீலர் கமிஷன் எல்லாம் சேர்த்தாலும், லிட்டருக்கு கிட்டத்தட்ட 15 ரூபாய் வரை விலை குறைய வாய்ப்புகள் உள்ளன. 

ஒரு லிட்டர் டீசலுக்கு 15 ரூபாய்... பெட்ரோலுக்கு 25 ரூபாய் என தற்போது சாமானியன் கூடுதலாக கொடுத்து வரும் தொகை, அவனது நிலையில் இருந்து பார்த்தால், குறிப்பிடத்தக்கது என்பதில் சந்கேமில்லை. ஆனால், அதை சேமிக்க வேண்டும் என்ற எந்த வகையான யோசனையோ... முயற்சியோ இல்லாமல் அரசுகள் மவுனம் சாதிக்க காரணம் - அவர்களது வெட்டிச் செலவுகளுக்கும்.... வீண் ஆடம்பரங்களுக்கும்..., வீழலுக்கு இறைக்கும் இலவசத் திட்டங்களுக்கும்... கொட்டிக் கொடுப்பது இதுபோன்ற வருவாய்தான் என்பதால்தானோ! 

நாம் விரித்துக் கொள்ளாத வரை - அரசுகள் தூங்குவதையோ... தூங்குவதைப் போல நடிப்பதையோ தவிர்க்க முடியாது.