சிறப்புக் களம்

PT Web Explainer: பிரைவசிக்கு பாதுகாப்பில்லையா?- வாட்ஸ் அப் புதிய கொள்கையால் அச்சுறுத்தல்

webteam

வாட்ஸ் அப் புதிய கொள்கைகளை தங்களது பயனர்களுக்கு நோட்டிபிகேஷனாக அனுப்பி வருகிறது. இந்தப் புதிய கொள்கைகள் பிரைவசி பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்குமென பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீங்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் நபர் என்றால், உங்களுக்கு ஒரு நோட்டிபிகேஷன் வந்திருக்கும். அல்லது வரும். புதிய கொள்கைகளை வகுத்துள்ளோம் என சொல்கிறது அந்த நோட்டிபிகேஷன். அதற்கு Agree கொடுத்து தொடரலாம். ஆனால், அந்த Agreeக்கு பின்னால் பல சிக்கல்கள் உண்டாகலாம் என்பதே தற்போது விவாதமாக எழுந்துள்ளது. அதாவது, நீங்கள் Agree கொடுத்தால் உங்களது தகவல்கள் பாதுகாப்பில்லாதவையாக மாறிவிடும் என்று புலம்புகின்றனர் பயனர்கள்.

புதிய கொள்கைகளுக்கு சரி என்றால் பிப்ரவரி 8-க்கு பிறகும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. அதாவது, புதிய கொள்கைகளுக்கு தலையசைக்கவில்லை என்றால், நீங்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

ஆனால், வாட்ஸ் அப்பின் இந்தப் புதிய கொள்கைகள் பயனர்களின் சுய பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையும் என கொதிக்கின்றனர் பயனர்கள். வாட்ஸ் அப் கொடுத்துள்ள இரண்டாவது கொள்கையே ''வணிகப்பயன்பாட்டுக்காக உங்களது சேட்களை நிர்வகிப்போம். எங்களது தாய் நிறுவனங்களாக பேஸ்புக், இன்ஸ்டாவும் உங்கள் வணிக ரீதியாக உங்கள் தகவல்களை பயன்படுத்தும்’’ என்பதே வாட்ஸ் அப் புதிய கொள்கையின் சாராம்சம்.

இது தொடர்பான சில விளக்கங்களையும் வாட்ஸ் அப் கொடுத்துள்ளது. அதாவது ’’எங்கள் சேவைகளை நீங்கள் அணுகும்போது அல்லது பயன்படுத்தும்போது எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க, ஆதரவு மற்றும் சந்தைப்படுத்த வாட்ஸ்அப் சில தகவல்களைப் பெறுவோம் அல்லது சேகரிப்போம்’’ என தெரிவித்துள்ளது வாட்ஸ் அப்.

வாட்ஸ் அப் கொடுத்துள்ள விளக்கத்தின்படி ''நாங்கள் பெறும் மற்றும் சேகரிக்கும் தகவலின் வகைகள் எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. எங்கள் சேவைகளை வழங்க எங்களுக்கு சில தகவல்கள் தேவை. அவை இல்லாமல் எங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்க முடியாது. எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளைப் பயன்படுத்த ஒரு கணக்கை உருவாக்க உங்கள் மொபைல் தொலைபேசி எண்ணை வழங்க வேண்டும். உங்கள் இருப்பிடம் தொடர்பான தகவல்களை கொடுக்க வேண்டுமென்றால் உங்களது லொகேஷனை கொடுக்க வேண்டும். நாங்கள் உங்கள் செய்திகளை எடுத்துக்கொள்ள மாட்டோம். உங்கள் செய்திகள் உங்கள் போனில் மட்டுமே சேகரிக்கப்படுமே தவிர எங்களது சர்வரில் சேகரிக்கப்படாது. உங்களது செய்தி ஒருவருக்கு சென்றுவிட்டால் எங்களின் சர்வரில் இருந்து டெலிட் செய்யப்படும்.

ஒருவேளை உங்களது செய்தி குறிப்பிட்ட நபருக்கு உடனடியாக சென்று சேரவில்லை என்றால் (அவர் ஆஃப் லைனில் இருந்தால்) அந்த செய்தி பாதுகாப்பு அம்சமாகவே எங்களது சர்வரில் 30 நாட்களுக்கு இருக்கும். 30 நாட்களுக்கு பிறகும் அது சென்று சேர வழியில்லை என்றால் சர்வரில் இருந்து டெலிட் செய்வோம். அதேபோல் பார்வேர்ட் மீடியாக்களை அனுப்பும்போது தற்காலிகமாக சேமிக்கிறோம் என தெரிவித்துள்ளது. இதுபோக மேலும் பல வழக்கமான கொள்கைகளையும் வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக end-to-end encryptionஐ நாங்கள் வழங்குகிறோம். end-to-end encryption என்பது ஒரு செய்தியை நாம் அனுப்பினால் நமக்கும், அந்த குறிப்பிட்ட நபருக்கும் இடையே யாருக்கும் அந்த தகவல் தெரியாது என்பதை உறுதி செய்யும் முறை. தங்களால் கூட அந்த தகவலை பார்க்கமுடியாது என வாட்ஸ் அப் தெரிவிக்கிறது.

புதிய கொள்கைகள் உங்களுக்காக தகவல்களை கொடுக்கவும், விளம்பர நோக்கத்திற்கானது மட்டுமே என வாட்ஸ் அப் அழுத்திக் கூறினாலும், புதிய கொள்கைகளால் பயனர்களுக்கு நிச்சயம் பாதுகாப்பு இல்லை என்கின்றனர் பயனாளர்கள். இது தொடர்பாக இணையங்களில் கடுமையான விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

பிரைவசி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் பல சீன ஆப்களை மத்திய அரசு தடை செய்தது. அதேபோல் வாட்ஸ் அப் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்பின் புதிய கொள்கைகளுக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் பதிவாகி வரும் நிலையில் அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும்? எதிர்ப்புகளுக்கு பணிந்து வாட்ஸ் நிறுவனம் கொள்கைகளில் பின்வாங்குமா? கொள்கைகளை தொடர்ந்தால் பயனர்கள் வாட்ஸ் அப்பை புறக்கணிப்பார்களா? என்ற பல கேள்விகள் நம் முன்னே எழுந்துள்ளன. அதற்காக பதில்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- CMDoss