model image chatgpt
சிறப்புக் களம்

ஜீரோ எப்.ஐ.ஆர். என்றால் என்ன? யார் பதிவு செய்யலாம்? வழக்கமான எப்ஐஆர்-லிருந்து எவ்வாறு வேறுபடும்?

ஜீரோ முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) என்பது குற்றம் நடந்த எல்லை வரம்புக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்காமல், எந்தவொரு போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து பாதிக்கப்பட்டவர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதாகும்.

போத்திராஜ்

நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தியபோது, பெண் ஒருவர், பிரதமர் மோடி குறித்து மரியாதைக் குறைவாக விமர்சித்திருந்தார். அவர்மீது டெல்லி போலீஸார் ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. பிரதமர் மோடியை அவதூறாகவும், மோசமான வார்த்தைகளாலும் பேசி, அவரின் பதவிக்கும், கண்ணியத்துக்கும் இழுக்கு நேரும்வகையில் பேசியதாக எப்.ஐ.ஆர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி போலீஸார் முதலில் அந்தப் பெண் மீது, ‘ஜீரோ எப்ஐஆர்’ பதிவுசெய்து, பின்னர் சம்பவம் நடந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்துக்கு மாற்ற உள்ளனர். இதில் ஜீரோ எப்ஐஆர் என்றால் என்ன, யார் பதிவு செய்யலாம், வழக்கமான எப்ஐஆர்க்கும், இதற்கும் என்ன வேறுபாடு என்பது குறித்து இந்த கட்டுரை அலசுகிறது.

‘ஜீரோ எப்ஐஆர்’ என்றால் என்ன?

ஜீரோ முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) என்பது குற்றம் நடந்த எல்லை வரம்புக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்காமல், எந்தவொரு போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து பாதிக்கப்பட்டவர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதாகும். இந்தப் புதிய நடைமுறையின்படி, பாதிக்கப்பட்டவர் போலீஸ் நிலையத்துக்கு நேரடியாகச் சென்றோ அல்லது ஆன்லைன் மூலம் போலீஸ் நிலைய அதிகாரியைத் தொடர்புகொண்டு புகார் செய்தோ, ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்ய முடியும். அதன்பின் 3 நாட்களுக்குள், பாதிக்கப்பட்டவர் குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்துக்குச் சென்று அதை வழக்கமான முதல் தகவல் அறிக்கையாக மாற்றலாம், அதற்கான ஆவணமும் ஜீரோ எப்ஐஆர் பதிவுசெய்த போலீஸ் நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

cjp protest

ஜீரோ எப்.ஐ.ஆர். எப்போது அறிமுகம்?

2012ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாகிக் கொல்லப்பட்டார். அதுகுறித்து விசாரிக்க நீதிபதி வர்மா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, “குற்றம் நடந்த பகுதியின் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய வேண்டியதில்லை எந்த போலீஸ் நிலையத்திலும் பதிவு செய்யலாம்” என்று பரிந்துரை அளித்தது. குற்றவியல் சட்டத்திருத்தம் 2013இல் இதைச் சேர்க்குமாறும் அந்தக் குழு பரிந்துரை செய்தது. இதையடுத்து, 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் ஜீரோ எப்ஐஆர் தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியது.

ஜீரோ எப்.ஐ.ஆர். எதற்கு தேவை, அவசியம் என்ன?

ஜீரோ எப்.ஐ.ஆர். எந்தச் சூழலில் பதிவு செய்யலாம் என்பதைச் சில உதாரணங்கள் மூலம் புரிந்துகொள்ளலாம். அதாவது, ஒரு குற்றம் தொடர்பாக புகார் அளிக்க ஒருவர் போலீஸ் நிலையத்துக்குச் செல்லும்போது, அந்த போலீஸ் அதிகாரி அந்தக் குற்றம் தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் நடக்கவில்லை, குற்றம் நடந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என மறுக்கலாம். இதனால் குற்றம்செய்தவர்கள் தப்பிச் செல்லவும், வழக்கைத் திசைதிருப்பவும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கும் பொருட்டு, பாதிக்கப்பட்டவர் எந்த போலீஸ் நிலையத்திலும் தன்னுடைய பாதிப்பை எடுத்துக் கூறி, போலீஸ் அதிகாரி மூலம் ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம். இதைப் பாதிக்கப்பட்டவர் நேரடியாக போலீஸ் நிலையம் வந்தோ அல்லது ஆன்லைன் மூலம் புகார் அளித்தோ, போலீஸ் அதிகாரி உதவியுடன் ஜீரோ எப்.ஐ.ஆர் உடனடியாக பதிவு செய்யும்போது காலதாமதம் தவிர்க்கப்படுகிறது, அந்த எப்.ஐ.ஆர் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆன்லைன் பதிவேட்டில் ஏற்றப்படும்.

  • போலீஸ் அதிகார எல்லை என்ற சாக்கு சொல்வது தடுக்கப்படும்.

  • எந்த போலீஸாரும் குற்றச்சம்பவத்தின் தீவிரம் கருதி உடனடியாகத் தலையிட்டு விசாரணையைத் தொடங்க முடியும்.

  • ஆதாரங்களைப் பாதுகாக்க முடியும், குற்றம் செய்தவர்களை விரைந்து கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த முடியும்.

  • பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள், குழந்தைகளாக இருந்தால், அவர்களை உடனடியாகப் பாதுகாப்பாகக் காப்பகத்துக்கு அனுப்ப முடியும்.

  • ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யும்போது, போலீஸார் எந்தக் காரணத்தைக் கூறியும் தட்டிக்கழிக்க முடியாது.

  • குற்றம் செய்தவர்கள் தப்பிச் செல்வதற்கும், வழக்கு திசைமாறுவதற்கும் வாய்ப்பு குறையும்.

  • ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்து 3 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் நடந்த பகுதியில் இருக்கும் போலீஸ் நிலையத்துக்குச் சென்று ஜீரோ எப்ஐஆர்ரை வழக்கமான எப்ஐஆராக மாற்ற முடியும்.

யாரெல்லாம் ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம்?

ஜீரோ எப்.ஐ.ஆர் பாதிக்கப்பட்டவர்தான் போலீஸ் நிலையம் சென்று பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. பாதிக்கப்பட்டவர் சார்பாக அவரின் பெற்றோர், உறவினர்கள், வேறு எந்த நபரும் ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம். குற்றம் நடந்த சம்பவங்கள் குறித்த முழுமையான விவரம், நேரில் பார்த்தவர்கள் யார் வேண்டுமானாலும், இதைப் பதிவு செய்ய முடியும். வாரண்ட் இன்றி கைது செய்யக்கூடிய எந்தக் குற்றத்துக்கும் இதைப் பதிவு செய்யலாம். குறிப்பாக, கொலை, பாலியல் வன்புணர்வு, துன்புறுத்தல், ஆட்கடத்தல், குடும்ப வன்முறை, கலவரம், மோசமான சாலை விபத்துகள், பெரும் குற்றங்கள் ஆகியவற்றில் ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம். போலீஸார் உடனடியாக தலையிட வேண்டிய வழக்குகளிலும், அவசர வழக்குகளிலும் ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவுசெய்யலாம்.

‘எப்.ஐ.ஆர்’ மற்றும் ‘ஜீரோ எப்.ஐ.ஆர்’ இடையே உள்ள வேறுபாடுகள்

எப்.ஐ.ஆர்

1. ஒரு போலீஸ் நிலையத்தின் அதிகார எல்லை வரம்புக்குள் நடந்த குற்றத்துக்கு மட்டுமே பதிவு செய்யக்கூடியது வழக்கமான முதல் தகவல் அறிக்கை.

2. வழக்கமான எப்.ஐ.ஆர் பதிவாகும்போது சீரியல் எண் பதிவு செய்யப்படும்.

3. எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட போலீஸ் நிலையத்தில் உள்ள அதிகாரிகள்தான் அந்தப் புகாரை விசாரித்து தீர்வு காண்பார்கள்.

4. இந்த எப்.ஐ.ஆரில் குற்றம் குறித்த தகவல் அளிப்போருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

ஜீரோ எப்.ஐ.ஆர்

1. குற்றம் நடந்தபின் எந்த போலீஸ் நிலையத்திலும் புகாரைப் பதிவுசெய்ய முடியும். எந்தப் போலீஸாரும் புகாரைப் பெற்று அதை ஜீரோ எப்.ஐ.ஆர் ஆக மாற்றிப் பதிவு செய்யலாம். குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில்தான் புகார் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

2. ஒரு போலீஸ் நிலையத்தில் ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால், அதில் சீரியல் எண் பூஜ்ஜியமாக (0) பதிவு செய்யப்படும். வழக்கமான எப்.ஐ.ஆரில் சீரியல் எண் இருக்கும்.

3. ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவுசெய்த போலீஸ் நிலைய அதிகாரிகளே விசாரணையைத் தொடங்கலாம், குற்றம் நடந்தபோது அந்த எல்லையில் இருந்த போலீஸ் நிலைய அதிகாரிதான் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

4. ஜீரோ எப்.ஐ.ஆரில் குற்றம் குறித்த தகவல் அளிப்போருக்கு கட்டுப்பாடுகள் இல்லை. ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்தால் என்ன செய்யலாம்? பொதுவாக ஒரு குற்றம் நடந்துவிட்டால், பாதிக்கப்பட்டோர் சம்பவம் நடந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்துக்குச் செல்லாமல், வேறு எந்த போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்க முயலும்போது, அதை அதிகாரி பதிவுசெய்ய மறுக்கலாம். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தலாம்.

இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது என்ன?

1. பாதிக்கப்பட்டவர் தனது புகாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அல்லது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம் அமைந்திருக்கும் தாலுகாவின் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பலாம்.

2. மூத்த காவல் அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்டவர் தனது புகாரை பதிவுசெய்யப்பட்ட தபால்களிலோ அல்லது மின் அஞ்சல்களிலோ அனுப்பி ஜீரோ எப்.ஐ.ஆர் கோர முடியும்.

3. இணையதளம் வாயிலாக போலீஸ் அதிகாரிக்கு புகார் அளிக்கலாம் அல்லது இ-எப்ஐஆர் போர்டெல் மூலம் பாதிக்கப்பட்டவர் புகார் செய்யலாம்.

4. தேவைப்பட்டால் ஒரு வழக்கறிஞரை அமர்த்தி, முறைப்படி ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்வதை உறுதி செய்யலாம். ஜீரோ எப்ஐஆர் ஒரு போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டால், முடிந்தவரை குற்றம் நடந்த இடத்தின் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை உடனடியாகத் தொடங்கும். தாமதங்கள் ஏற்பட்டாலும் அதிகபட்சமாக 24 மணிநேரத்துக்குள் புகார் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்படும்.

ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யும்போது கவனிக்கவேண்டிய அம்சங்கள்

1. தகவல் அளிப்பவர் அல்லது பாதிக்கப்பட்டவர் ஜீரோ எப்ஐஆர்ரில் தனது பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிட வேண்டும்.

2. குற்றச் சம்பவம் நடந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை மிக முக்கியமானவை. அதைக் குறிப்பிட வேண்டும்.

3. சம்பவம் உண்மையாக எப்படி, எவ்வாறு நடந்ததோ, அதை கற்பனை கலப்பு இல்லாமல், உண்மைகளைத் தகவல் அளிப்பவர் அல்லது பாதிக்கப்பட்டவர் இதில் தெரிவிக்க வேண்டும்.

4. குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் தெரிந்தால், அவற்றை தகவல் அளிப்பவர் அல்லது பாதிக்கப்பட்டவர் ஜீரோ எப்.ஐ.ஆரில் குறிப்பிட வேண்டும்.

5. பாதிக்கப்பட்டவர் தனக்கு நேர்ந்த அநீதியை உறுதிப்படுத்த ஏதேனும் சாட்சிகள் இருந்தால், அதையும் அவர் குறிப்பிட வேண்டும்.

6. ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டபின், தகவல்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த, தகவல் அளிப்பவர் அல்லது பாதிக்கப்பட்டவர் அதைத்தானே படிக்க வேண்டும் அல்லது போலீஸார் மூலம் வாசிக்கச் செய்து சரிபார்க்க வேண்டும்.

7. தகவல் அளிப்பவர் அல்லது பாதிக்கப்பட்டவர் புகார் செய்யும்போது கையெழுத்தைத் தெளிவாகப் போட வேண்டும்.

8. 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்.' பிரிவின் கீழ் பதிவுசெய்து, நகல் ஒன்றைத் தகவல் அளிப்பவர் அல்லது பாதிக்கப்பட்டவருக்கு இலவசமாக வழங்குவர்.

9. வழக்கு உரிய போலீஸ் நிலையத்திற்கு எப்.ஐ.ஆர் மாற்றப்படும்வரை, அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட போலீஸார் முதல்கட்ட விசாரணையைத் தொடங்குவர்.

10. இந்தப் புகார் குற்றச்செயல் நடந்த பகுதிக்குரிய போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்படும். ஜீரோ எப்.ஐ.ஆராக இருந்தபோது பூஜ்ஜியமாக சீரியல் எண் பதிவு செய்யப்பட்டநிலையில், அங்கு முறையான சீரியல் எண்ணுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.

11. குற்றம் நடந்த பகுதிக்கு பொறுப்பான போலீஸ் நிலைய அதிகாரியால் அந்தப் புகார் முறையாக விசாரிக்கப்படும்.