சிறப்புக் களம்

முட்டை சாப்பிடுவதால் அறிவாற்றல் அதிகரிக்கிறதா? - என்ன சொல்கிறது ஆய்வு முடிவுகள்!

Sinekadhara

முட்டை என்றாலே நம் எல்லோருக்கும் முதலில் நினைவில் வரக்கூடியது புரதச்சத்து. உடலுக்கு தேவையான ஆரோக்கியமான புரதம் முட்டையிலிருந்து கிடைக்கிறது. எடை குறைப்பு, தசை அதிகரிப்பு, இதய நோய்கள் மற்றும் நீரிழிவை கட்டுக்குள் வைத்தல் போன்றவற்றில் முட்டையின் பங்கு அளப்பரியது. ஆனால் இவற்றுடன் முட்டையின் நன்மை முடிந்துவிடுகிறதா? என்றால் இல்லை. சிறந்த காலை உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிற முட்டையானது, அறிவாற்றலை அதிகரிக்கிறது என்கிறது புதிய ஆய்வு.

Nutritional Neuroscience இதழில் வெளியாகியுள்ள ஆய்வில், மூளை முட்டைகளை விரும்புவதாக குறிப்பிட்டுள்ளது. 18-75 வயதுக்குட்பட்ட 79 பேருக்கு, தினசரி முட்டைகள் சாப்பிட கொடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

சைக்கோமோட்டர் விஜிலென்ஸ் சோதனையின் அடிப்படையில், முட்டையை சாப்பிடும்போது, அதிலுள்ள புரத ஹைட்ரோலைசேட் NWT-03-ஆனது பங்கேற்பாளர்களை மேம்படுத்த உதவவில்லை. அதேசமயம், ஆண்டி-கியூ எதிர்வினை நேர சோதனையின்போது முட்டை சாப்பிடுவோரின் செயல்திறனானது அதிகரித்தது ஆய்வில் தெரியவந்தது.

முட்டையின் வேதியியல் கலவை மற்றும் உடலில் உள்ள ஹைட்ரோலைசேட் எவ்வாறு உடைகிறது என்பதை பொருத்துதான் உடலில் சேரும் நன்மையின் அளவும் இருக்கும் என்கிறது அந்த ஆய்வு. மேலும், சுய கட்டுப்பாடு, பகுத்தறிவு, படைப்பாற்றல், பணி ஆற்றல், மன நெகிழ்வுத்தன்மை மற்றும் பெரும்பாலான மூளை செயல்பாடுகளை கட்டுப்படுத்தி, அறிவாற்றலை மேம்படுத்தும் தன்மை ஹைட்ரோலைசேட் NWT-03-க்கு உண்டு என்பதை குறிப்பாக சுட்டிக்காட்டுகிறது ஆய்வு.

மூளையின் செயல்பாட்டை முட்டை எப்படி அதிகரிக்கிறது?

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் முட்டையின் பாகம் அதிலுள்ள மஞ்சள் கருதான் என்கின்றனர் நிபுணர்கள். மூளைக்கு நன்மை பயக்கும் என்றாலும், இது கொழுப்பு உணவு என்பதால் நீண்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு உட்கொள்ளும் உணவுடன் சிறிதும் சம்பந்தப்படவில்லை என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

லுடீன், ஜியாக்சாண்டின் மற்றும் கோலின் போன்ற தாவர ஊட்டச்சத்துக்கள் முட்டையின் மஞ்சள்கருவில் அதிகம் உள்ளது. இது அறிவாற்றலை அதிகரிக்கும். அதேசமயம், மூளை சிறந்த செயல்பாட்டை பெற, என்னென்ன மாதிரியான உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும் மற்றும் மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது எப்படி என்பது குறித்த ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்திவருகின்றனர்.

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் சில ஆரோக்கியமான உணவுகள்:
1. பழங்கள்
2. காய்கறிகள்
3. முழு தானியங்கள்
4. மெலிந்த புரதங்கள்

இந்த உணவுகள் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை உணவுகளை விலக்கிவைக்க உதவுகிறது. நினைவாற்றலை பொருத்தவரை ஒருவர் தனது உடலை எந்த அளவுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுத்து பார்த்துக்கொள்கிறார் என்பதை பொருத்தே செயல்படும். மூளை செயல்பாட்டுக்கு ஏற்ற உணவுகளை கொடுக்காதபோது, மந்தமான, கவனச்சிதறல் மற்றும் தினசரி வேலைகளில் கவனம் செலுத்தமுடியாமை போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே தினசரி மூளையின் செயல்பாட்டு ஏற்ற உணவுகளை உடலுக்கு வழங்குவதோடு, மூன்று வேளையும் தவறாமல் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம் என அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள்.