சிறப்புக் களம்

உயிர்களை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டம்: அரசு செய்ய வேண்டியது என்ன? - விரிவான அலசல்

நிவேதா ஜெகராஜா

ஆன்லைன் சூதாட்டம் எப்படிப்பட்ட மோசமான நிலைக்கு தள்ளும் என்பதை சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த இரு சம்பவங்கள் வெளிக்காட்டியிருந்தன. அவற்றில் முதல் சம்பவம், மனைவி, மகன்களை கொடூரமாக கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட வங்கி அதிகாரியின் செயல். அடுத்த சம்பவம், ஆன்லைன் சூதாட்டத்தால் கொள்ளையராக மாறிய ரயில்வே ஊழியர் சம்பவம். இதில் ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்ட இருவருமே, நல்ல வேலையில் – உயரிய பணியில் - அதிக சம்பளத்தில் இருந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கே இந்த நிலை என்றால், சாமாணிய எளியவர்களின் நிலையை சொல்லித் தெரிவிக்க வேண்டாம்.

இந்தளவுக்கு ஆன்லைன் சூதாட்டங்களின் தாக்கமும், அதனால் நிகழும் குற்றங்களும் அதிகரித்ததன் பின்னணி என்ன; இதையெல்லாம் எப்படி தடுப்பது என்பது குறித்து ஆரோய்ந்தோம்.

கடந்த 2020 நவம்பரில் ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடை செய்திருந்தது. அதிலிருந்து இச்சம்பவங்களை காண்போம். பின்வந்த நாள்களில், அந்த தடையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்தத் தடை நீட்டிப்பே, இப்படியான தொடர் சம்பவங்களுக்கு காரணமெனக்கூறி இந்த ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது சமூகவலைதளங்கள் மற்றும் பிற ஊடங்கள் வழியாக மக்களால் அரசிடம் முன்வைக்கப்பட்டு வருகிறது. சீனா போன்ற நாடுகளில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை இல்லை, ஆனால் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் அது போல இல்லை என்கிறார்கள் சைபர் வழக்கறிஞர்கள்.

சைபர் வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன் இதுகுறித்து நம்மிடையே பேசுகையில், “தொடக்கத்தில், குறிப்பிட்ட அந்த ஆன்லைன் விளையாட்டுக்கு ஒருவரை அடிமையாக்குவது மட்டுமே அந்த செயலியின் நோக்கமாக இருக்கும். அதன்பின்னர், அந்நபரை பணம் கட்டி விளையாட வைக்கும் முயற்சியில் அந்தச் செயலி ஈடுபடும். தொடர்ந்து அவர்களை இன்னும் அடிமையாக்கி, பணத்தை இழக்க வைக்க தொடங்கும். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பயணர், இந்த செயலி முழுக்க முழுக்க மனிதர்க்ளால் விளையாடப்படுவதுதான் என்று நினைக்கத் தொடங்கிவிடுவார். ஆனால் உண்மை அதுவல்ல. உண்மையில், செயலியிலுள்ள அல்காரிதம்தான் பயணர் எப்போது ஜெயிக்க வேண்டும், எப்போது தோற்க வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்யும். இதை உணர்வதற்குள், அவர் பெரும் பணத்தை இழந்திருப்பார்.

சீனாவை போல தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் நடைமுறையில் அதை சாத்தியப்படுத்த முடியவில்லை. மத்திய அரசு நினைத்தால் மட்டுமே, இதை கொண்டுவர முடியும்” என்றார்.

ஆனால் மத்திய அரசு இதை அமல்படுத்தாமல் இருக்கவும், சில காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் முதன்மையாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். கருப்பு பணத்தை இது போன்ற விளையாட்டுகள் மூலம் மாற்ற வாய்ப்பு இருப்பதாலும் விரைந்து மத்திய அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இணைய தொழில்நுட்ப நிபுணர் விமலாதித்தன் செயலிகள் குறித்து மணி பேசுகையில், “எந்தவொரு செயலியையும் மொபைலில் இன்ஸ்டால் பண்ணும்போது, விதிகளை மக்கள் படிக்க வேண்டும். மக்கள் மத்தியிலான விழிப்புணர்வே அனைத்துக்கும் முதன்மை. இதற்கு அடுத்தபடியாக, சீனாவை போல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். சீனாவில், இந்தச் செயலியை பயன்படுத்த நேரக் கட்டுப்பாடுகளும் அதிகபட்ச பண வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற கட்டுப்பாடுகள், இங்கும் விதிக்கப்பட வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகள் தடையை விடவும், கட்டுப்பாடுகளேவும் நமக்கு பெருமளவில் உதவும்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு மட்டுமன்றி, ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகளுக்கும் இதுபோன்ற பண வரம்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். ஏனெனில் அதனாலும் பலரும் பாதிக்கப்படுகின்றனர். பல கடன் வழங்கும் செயலிகள், அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, பயனரின் பணத்தை பறிக்கிறது. இதையெல்லாம் அரசு சரிசெய்ய வேண்டும்” என்றார்.

இப்படியாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடையோ அல்லது குறைந்தபட்சத்துக்கு கட்டுப்பாடுகளோ விதிக்கப்பட வேண்டுமென பல தரப்பினரும் அரசுக்கு முன்வைத்து வருகின்றனர்.

- ஜெ.நிவேதா | சுப்ரமணியன்