posters
posters pt desk
சிறப்புக் களம்

என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை! சர்ச்சை போஸ்டர்களும் சங்கடத்தில் மதுரை மக்களும்..!

Kaleel Rahman

யேப்பா இதுக்கெல்லாமா போஸ்டர் அடிப்பீங்க என புருவம் உயர்த்தி பார்க்கும் அளவிற்கு எதுக்கெடுத்தாலும் போஸ்டர் அடிக்கும் கலாச்சாரம் மதுரையில் அதிகரித்துள்ளது. சாலையோரங்களை ஆக்கிரமதித்துள்ள பிளக்ஸ் பேனர்கள் சுவர்களை அலங்கோலப்படுத்தியுள்ள போஸ்டர்கள். கல்யாணம் காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா தொடங்கி அரசியல் கட்சியினர் முதல் சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் வரை விமர்சனத்துக்கு உள்ளாகும் வகையில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் கலர் ஃபுல்லான மதுரை நகரம் கலையிழந்து காட்சியளிக்கிறது என்கின்றனர் தூங்கா நகரவாசிகள்.

அண்ணன் தம்பி, மாமன் மச்சான், அங்காளி பங்காளி என உறவுகளோடும் நட்புகளோடும் கூடி வாழும் கோபுர நகரமான மதுரையில், சமீபகாலமாக ஒட்டப்படும் போஸ்டர்கள், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கவே செய்வதாக கூறுகின்றனர். கல்யாணமா கட்அவுட், போராட்டமா போஸ்டர், பிறந்தநாள் விழாவா பிளக்ஸ் பேனர் என பந்தாவுக்காக, பதவி ஆசையோடு சர்ச்சைக்குரிய பேனர்களை வைத்து சங்கடத்தை ஏற்படுத்துகின்றனர். அரசியல் தலைவர்களை வருக வருக என வரவேற்று போஸ்டர் அடிப்பதோடு வராத நடிகர்களை வா தலைவா வா என அரசியலுக்கு வரவேற்று போஸ்டரும் அடிக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் எமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் அடித்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

கல்யாண மண்டப வாசலில் கட்அவுட் வைக்கும் தாய்மாமனில் தொடங்கி, அரசியலில் தனது இருப்பிடத்தைக் காட்டிக்கொள்ள பிளக்ஸ் பேனர் வைக்கும் அரசியல் பிரபலம் மற்றும் நடிகர் கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்த்து அந்த கட்சியில் பொறுப்புகளை பெறத் துடிக்கும் ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர் வரை. இதை ஒரு புதிய கலாச்சாரமாகவே செய்து வருகின்றனர். இது என்ன கலாசாரம், இந்த ஆடம்பரம் தேவையா இதனால் என்ன கிடைக்கிறது என அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேசினோம். அவர்கள் தெரிவித்த கருத்துகளை விரிவாக பார்க்கலாம்.

அழகர் (ரஜினி மன்றம், மதுரை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்

அழகர்

கலை என்றாலும் அரசியல் என்றாலும் மதுரைகென்று தனி கலாச்சாரம் இருக்கு. மிந்தியெல்லாம் சுவர் விளம்பரம் செஞ்சாங்க. இப்ப போஸ்டர், பிளக்ஸ் என்று வந்துருச்சு. இது காலங்காலமா இருக்குற கலாச்சாரம் தான். மதுரைக்கு இது ஒன்னும் புதுசல்ல. அரசியல் கட்சியில் தொண்டனாக இருப்பதும் நடிகனுக்கு ரசிகனாக இருப்பதும் ஒன்னுதான். இவங்களுக்காக போஸ்டர் ஒட்டுறதும் பிளக்ஸ் பேனர் வைக்கிறதும் ஒரு விளம்பரத்துக்குதான். நான் ரஜினி ரசிகன் என்பதை எப்படி வெளிக்காட்ட முடியும். இதுபோல போஸ்டர் பிளக்ஸ் வைப்பதன் மூலம் எங்களை வெளிக்காட்டிக் கொள்ள முடியும்” என்றார்.

விஜய் அன்பன், விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி

விஜய் அன்பன்

நடிகர் மேல் உள்ள பாசத்தால் போஸ்டர் ஒட்டியது, இப்போது தங்களை வெளிக்காட்டிக் கொள்ள பிளக்ஸ் வைப்பது போல் ஆகிவிட்டது. அதுதான் உண்மை. சர்ச்சைக்குரிய போஸ்டர்களை அடித்தால் தளபதிக்கு பிரச்னை வரும் என்பதை யாரும் யோசிப்பதில்லை. நடிகரை அரசியலுக்கு வாங்கன்னு அழைப்பது வேற ஆனால், பிற கட்சித் தலைவர்களோடு தளபதியை கிராபிக்ஸ் பண்ணி சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டுவதுதான் சங்கடத்தை ஏற்படுத்துது.

இது போன்ற விசயங்களை தளபதி விரும்புவது கிடையாது. இதுபோன்று செய்யக்கூடாது என்று பொதுச் செயலாளரும் அறிக்கை கொடுத்திருக்காங்க. ஆனாலும் ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் செஞ்சுக்கிட்டுதான் இருக்காங்க. இதுபோன்ற அடிக்கப்படும் போஸ்டர்களையும் மீடியா காரங்க எடுத்து போடுறாங்க. அதுக்காகவே சிலர் சுய விளம்பரத்துக்காக சர்சைக்குரிய போஸ்டர்களை அடிக்கிறாங்க” என்றார்

ராமமூர்த்தி, மதுரை மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி அமைப்புச் செயலாளர்

Rama moorthi

கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஐ வரவேற்று போஸ்டர் ஒட்றோம்னா அவரை உளமாற வரவேற்றுதான் போஸ்டர் ஒட்டுறோம். ஆனாலும் அதில் ஒரு விளம்பரமும் இருக்கு. இப்போதைய அரசியல் சூழலில் நான் உங்க பின்னாடி இருக்கிறேன் என்ற விளம்பரம்தான். இது விசுவாச விளம்பரம் கிடையாது. தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் விளம்பரம். போஸ்டர் பிளக்ஸ் வைப்பது போல பேப்பரிலும் விளம்பரம் கொடுப்போம். என்றார்.

சங்கர் பாண்டி, பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர்.

பிளக்ஸ் வைக்கிறதுக்கு முக்கிய காரணமே சுய விளம்பரம்தான். தலைமையிடம் நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்ள. மதுரை மக்களுக்கு சினிமா மோகம் அதிகம், அந்த மோகத்தால்தான் விளம்பர கலாசாரம் காலம் காலமாக உள்ளது. கல்யாணமா இருந்தாலும் கருமாதியா இருந்தாலும் கட்அவுட் கலாச்சாரமாக மாறிவிட்டது. நான் யார் என்பதை கட்சியினருக்கும் நான் வசிக்கும் பகுதியில் உள்ளவர்களுக்கும் காட்டிக் கொள்ளவே போஸ்டர் அடிக்கிறோம். அரசியலில் சீட் வாங்க வேண்டுமென்றால் அந்த பகுதியில் அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்பார்கள். அதற்கான விளம்பரம்தான் போஸ்டர் அடிக்கிறதும். பிளக்ஸ் பேனார் வைக்கிறதும் என்றார்.

sankar pandi

நீங்க போஸ்டர் ஒட்டுங்க பிளக்ஸ் பேனர் வையுங்க ஆனால், பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமலும் சர்ச்சையை ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.