சிறப்புக் களம்

கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்வது யார்? - ஆளும் கட்சியா? திமுகவா?

கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்வது யார்? - ஆளும் கட்சியா? திமுகவா?

webteam
‘கோவிட்-19’ வைரஸ் குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ‘ரேபிட் டெஸ்ட்’கருவிகள் வாங்கப்பட்டது குறித்து ஆளும் கட்சியான அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே சர்ச்சை நடந்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் ‘எந்த நேரத்தில் அரசியல் செய்து? திமுக தலைவர் ஸ்டாலின் இந்த நேரத்தில் மலிவான அரசியலில் ஈடுபடுகிறார்’ என்று பேசி வருகிறார்.  
 
பொதுமக்கள் இதனை எப்படிப் புரிந்து கொள்கிறார்கள்? எதிர்க்கட்சியான திமுக இந்தத் தருணத்தில் அரசியல் செய்கிறதா? எனப் பத்திரிகையாளர் ஷியாமிடம் கேட்டோம். அதற்கு அவர் பல உதாரணங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.  ஷாயாம் பேசுகையில், “அறிவியல்பூர்வமாக பார்த்தால் இந்த ரேபிட் டெஸ்ட் என்பதே அவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தது கிடையாது. ஆனால் ஐசிஎம்ஆர்தான் இந்த ரேபிட் டெஸ்ட் என்பதையே முதலில் பரிந்துரைத்தது. இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் ஒரு நிச்சயமற்றவை. ஆகவே நாம் அதனைக் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்தே இருக்க வேண்டாம். 
 
ஆனால் தமிழக அரசு ஆணை போட்டுவிட்டது. இப்போது டெல்லி நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கை யார் போட்டு இருக்கிறார்கள்? இரண்டு நிறுவனங்கள்தான் போட்டுள்ளார்கள். இது அந்த இரு நிறுவனங்களுக்குள் நடக்கும் வியாபார  போட்டி. இப்போது ஒரு நிறுவனம் சார்பாகத் தீர்ப்பு கிடைத்துள்ளது. அப்படியென்றால் பாதிப்புக்குள்ளான நிறுவனம் நிச்சயம் மேல் முறையீடு செய்யும். இந்தப் பிரிவினையைக் கொண்டு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா? என்பது பெரிய கேள்விதான்” என்கிறார் ஷியாம்.
 
 
மேலும் அவர், “ஆளும் கட்சியான அதிமுக இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை வாங்குவதற்கான ஆர்டரே போட்டிருக்க வேண்டாம் என்பது என் கருத்து. இந்தக் கருவிகளை வாங்க தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்பு நிதியாக வங்கியில் நிச்சயம் செலுத்தி இருக்கும். அப்படி செலுத்தினால்தான் கருவிகளை முதலில் வாங்க முடியும். முழுவதுமாக கிடைத்த பிறகு மொத்த தொகையை அப்புறம் அளிப்பார்கள். ஆனால் அடிப்படையில் முதல் தொகையொன்று வழங்கப்பட்டிருக்கும்? அப்படி என்றால் அந்தத் தொகை என்ன ஆகும்? நேற்று அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியைப் பார்த்தேன். அதில் அவர் கொஞ்சம் குழம்பி போய்ய் பேசுவதைப்போல்தான் எனக்கு தெரிந்தது. இதில் அரசியல் இருக்கிறது என்பது உண்மைதான். எதிர்க்கட்சி என்றால் அரசியல் செய்யத்தான் முயற்சிக்கும் அதில் தப்பில்லை” என்கிறார் ஷியாம்.
 
 
பத்திரிகையாளர் இராதாகிருஷ்ணன் கூறுகையில், “அரசியல் கட்சிகள் எல்லா விசயத்தையும் அரசியல் நோக்கத்துடன்தான் செய்யும். அதில் சந்தேகம் இல்லை. அப்படி அவர்கள் செய்கின்ற அரசியல் நிச்சயம் மக்களைச் சார்ந்ததாகத்தான் இருக்க வேண்டும். உலகம் முழுவதும் கொரோனாவிற்கு எதிராக மக்கள் அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கீழே இருக்கின்ற தொழிலாளி முதல் அமெரிக்காவில் உள்ள அதிபர் வரை போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் பாரபட்சமே இல்லை. 
 
 
கேரளாவை எடுத்துக் கொண்டால் அனைவரும் சேர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். கீழே இருக்கின்ற கிராம பஞ்சாயத்தில் தொடங்கி மேலே உள்ள முதல்வர் வரைப் போராடுகிறார். மகாராஷ்டிராவில் கூட அப்படிதான். ஆனால் தமிழகத்தில் அனைத்து விஷயங்களிலும் முதல்வர் பழனிசாமியின் பெயர் மட்டுமே வரவேண்டும் என்பதைப்போன்ற ஒரு விஷயம் நடக்கின்றது. இதைத்தான் நான் தமிழகத்தில் நடக்கும் அவலமாகப் பார்க்கிறேன்.
 
தமிழகத்தில் மாநகராட்சியில் இருக்கின்ற ஐஏஎஸ் அதிகாரிகளை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும் என்ற மனநிலைதான் வெளிப்படுகிறது. கிராம அளவில் போய் வேலைகள் செய்ததைப் போல தெரியவில்லை. கன்னியாகுமரியில் கொரோனா கட்டுப்பாட்டுடன் இல்லை. ஆனால் பக்கத்தில் இருக்கின்ற திருவனந்தபுரத்தில் கட்டுப்பாட்டுடன் உள்ளது. அது எப்படி?  எடப்பாடி சொல்வதைப் போல யார் அரசியல் செய்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். அதை வெளிப்படையாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை” என்றார்.