சிறப்புக் களம்

'வாணிபத் தொடர்புக்கு ஆதாரம்'... கீழடி - வெள்ளி முத்திரை நாணயத்தின் சிறப்புகள் என்னென்ன?

கலிலுல்லா

கீழடியில் வெள்ளி முத்திரைக் காசு ஒன்று அண்மையில் கண்டறியப்பட்டது. இதன் சிறப்புகள் என்ன என்பது குறித்தும், வரலாற்று தரவுகள் குறித்தும் பகிர்ந்திருக்கிறார், சென்னை நாணயவியல் அமைப்பின் தலைவரும், வாழ்வியல் பயிற்சியாளருமான சென்னை மணிகண்டன்.

மதுரை - கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் வெள்ளிக் காசு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிடும்போது, ``வெள்ளியிலான முத்திரைக் காசு (Punch Marked Coin) ஒன்று சில நாட்களுக்கு முன் கீழடி அகழாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் வழியே, இதன் காலம் மெளரியர்களின் காலத்துக்குச் சற்று முன்னதாக பொ.யு.மு. நான்காம் நூற்றாண்டின் நடுவிலானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த அபூர்வ வெள்ளி முத்திரை காசின் சிறப்புகளையும், வரலாற்று தரவுகளையும், சென்னை நாணயவியல் அமைப்பின் தலைவரும், வாழ்வியல் பயிற்சியாளருமான சென்னை மணிகண்டன் விரிவாக விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தகவலில், "கீழடியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது மிகவும் அபூர்வமான வெள்ளி முத்திரைக் காசு. முந்தைய பழங்குடித் தமிழர்கள் வடபகுதியினருடன், வாணிபத் தொடர்பு மற்றும் வணிகப் பண்டமாற்றம் செய்திருக்கிறார்கள் என்பதற்கான ஆகச் சிறந்த ஆதாரமாக இந்த காசு விளங்குகிறது. கி.மு 300 - கி.பி 100 வரையிலான மௌரியர் ஆட்சி காலத்தில் வெளியிட்ட மஹதா வெள்ளி முத்திரைக் காசுதான் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வெள்ளி முத்திரைக் காசில் எருதின் தலை, கதிர்கள் இல்லாத சூரியன், வால் மேல்நோக்கி சுருட்டிய நாய், கதிர்களுடன் பிரகாசிக்கும் சூரியன், கூர்மையான 6 ஆயுதங்களை கொண்ட தொகுப்பு, மீன் குறியீடு மங்கலச் சின்னங்கள் விலங்குகளின் அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல இதன் பின்பக்கத்தில் வாணிபக் குறியீடும் உள்ளது.

இதற்கு முன்பாக அகரம் அகழ்வாய்வில் தங்கத்திலான வீரராயன் நாணயம் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.