சிறப்புக் களம்

ஏவுகணை நாயகன்; இந்திய இளைஞர்களின் உந்துசக்தி - என்ன செய்தார் அப்துல்கலாம்?

கலிலுல்லா

இந்தியாவின் ஏவுகணை நாயகன், இளைஞர்களின் ஐகான், எளிமையே வலிமை என வாழ்ந்த அப்துல்கலாமின் 90 ஆவது பிறந்த நாள் இன்று. உலக மாணவர்கள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

நாட்டின் தென்கோடியான ராமேஸ்வரத்தில் படகோட்டியின் குடும்பத்தில் 1931 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தார் அப்துல் கலாம். இளம் வயதில் வறுமை துரத்தியதால், பள்ளி நேரம் போக சிறு, சிறு பணிகளை செய்து குடும்பத்திற்கு உதவியாக இருந்தார். மிதிவண்டியில் வீடு, வீடாக சென்று நாளிதழ்களை விநியோகிப்பதில் தொடங்கும் அவரது காலை நேரம்.

எனினும் படிப்பிலும் கவனமாக இருந்தார். தொடக்கப் பள்ளியில் அவரது ஆசிரியர் விதைத்த விதை, 1960 ஆம் ஆண்டில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தின் விஞ்ஞானியாக கலாம் உயர்வதற்கு காரணியானது. அங்கு நாட்டிற்கான பாதுகாப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்ட கலாம், முதன் முதலாக சிறிய ஹெலிகாப்டரை ராணுவத்திற்காக வடிவமைத்துக் கொடுத்தார். அதன் பின், அவரது வாழ்க்கையில் அனைத்தும் ராக்கெட் வேகம் தான். ஏவுகணைகளை உருவாக்கி ராணுவ பலத்தை அதிகரித்தார். பொக்ரான்-2 அணு ஆயுத சோதனைக்கு முக்கிய மூளையாக செயல்பட்டார்.

அடுத்தடுத்து பல வெற்றிகளை குவித்தாலும், அந்த வெளிச்சத்திலேயே நின்றுவிடாமல், அடுத்த இலக்கை நோக்கி தனது குழுவினரை உடனடியாக நகர்த்தும் குணம் கலாமிடம் இருந்தது. 2008 ஆம் ஆண்டு சந்திரயான் - 1 திட்டத்தின் மோதல் ஆய்வுக் கருவி நிலவில் இறங்கிய நாளில் உலகமே இந்தியாவை கொண்டாடியது. கட்டுப்பாட்டு அறையில் வெற்றியைப் பற்றி பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் எதிரில் நின்றிருந்தார் திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுறை. ஆனால், கலாம் வெற்றியை பற்றி பேசவில்லை அடுத்து என்ன? என்று கேட்கிறார். அந்தக் கேள்வியில் தான் தொடங்குகியது சந்திரயான்-2 திட்டத்தின் பயணம்.

இன்று இந்தியாவின் பெருமையாக உலக நாடுகளில் அறியப்படும் அக்னி ஏவுகணை திட்டத்தின் தொடக்க காலம் அக்னிப் பரீட்சையாக இருந்தது. சோர்ந்து போயிருந்த சக விஞஞானிகளிடம் நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்தார் கலாம். அதன் விளைவாக 1989 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி அக்னி ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது. அக்னி ஏவுகணை இந்திய ராணுவத்தின் வரலாற்றில் இடம் பெற்றது. கலாம் இந்தியர்கள் மனதில் இடம் பிடித்தார். 2002 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக பதவியேற்பதற்கு முன்பாகவே, பாரத ரத்னா விருதை பெற்றவர். 40-க்கும் மேற்பட்ட டாக்டர் பட்டங்களையும் பெற்றிருக்கிறார் கலாம்.

தாய்நாட்டிற்கு தொழில்நுட்பத்தை வழங்கும் விஞ்ஞானியாக மட்டும் நின்றுவிடாமல் எதிர்கால இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாகவும் மிளிர்ந்தவர் கலாம். அதனால் தான் கலாமின் பிறந்தநாளை ஐ.நா. உலக மாணவர்கள் தினமாக அறிவித்து கவுரவித்திருக்கிறது.