நான்கு சுவர்களுக்குள் தனித்தனியாக வாழும் இந்த காலகட்டத்தில் பெற்றோர் - குழந்தைகளின் உறவை மேம்படுத்துவது அனைத்துக் குடும்பங்களுக்கும் தேவையான ஒன்று. இந்த உறவு குடும்பத்தை ஒன்றாக்கி மகிழ்ச்சியுடன் வைக்கிறது. அது தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி, சமூகத்தையே மகிழ்ச்சியாக வைக்கிறது. பெற்றோர் - குழந்தைகளுக்கு இடையேயான உறவு வலுவாக இருக்கும்போது, குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஓர் உணர்வு உருவாவதுடன், குழந்தைகளிடம் இருந்து நேர்மறையான செயல்பாடுகள் வெளிப்படும். இதனால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோர் - குழந்தை உறவின் முக்கியத்துவம் குறித்தும், அதை மேம்படுத்தும் வழிகள் பற்றியும் குழந்தைகள் நல ஆர்வலர்களும், உளவியல் ஆலோசகர்களும் கூறும் வழிகாட்டுதல்கள்:
பெற்றோர் - குழந்தைகள் உறவின் முக்கியத்துவங்கள்
நேர்மறையான பெற்றோர் - குழந்தைகள் உறவை மேம்படுத்த சில வழிகள்
பொதுவாக தாய் - குழந்தை உறவானது கரு வயிற்றில் உருவாகும்போதே தொடங்கிவிடுகிறது. ஆனால் தந்தையை பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே குழந்தையுடனான உறவை மேம்படுத்தவேண்டும். எனவே குழந்தை பிறந்ததிலிருந்தே அவர்களுடன் நேரம் செலவிடுவது அவசியம்.
பெற்றோர், குழந்தைகளுடன் தங்கள் நேரம் மற்றும் முயற்சியை செலவிடுதல் வேண்டும். அதாவது உங்களுடைய அன்பை எந்தெந்த இடங்களில், எந்தெந்த வழிகளில் காட்டமுடியுமோ அப்போதெல்லாம் காட்ட தவறாதீர்கள். நேரம் செலவிடுதல் அவசியம் என்றாலும், அவர்களுடைய வயதை கருத்தில் கொள்ளவேண்டும். சிறுகுழந்தைகள் அதிகநேரம் பெற்றோருடன் செலவிட ஆசைப்படும் அதே சமயத்தில், வளர் இளம்பருவத்தினர் தனியாக நேரம் செலவிட ஆசைப்படுவர். குழந்தைகளின் எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்துகொள்ளும் பெற்றோராக இருத்தல் அவசியம்.
உங்களுடைய அன்பை அவர்களிடம் எடுத்துக்கூறுங்கள். அதாவது நீங்கள் அவர்களை நேசிப்பதை அடிக்கடி கூறுங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கும், உங்களுக்கும் இடையே சண்டை சச்சரவு ஏற்படும்போது, நிலைமையையும் உணர்வுகளையும் எடுத்துக்கூறி, அவை அனைத்திற்கும் மேல் உங்கள் அன்பு பெரியது என்பதை புரியவையுங்கள்.
குழந்தைகளுடன் விளையாடுவது அவசியம். இன்று பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்களாக இருப்பதால், குழந்தைகள் விளையாட ஏங்கிப் போயிருப்பர். எனவே அவர்களுக்கு பெற்றோர்மீது கோபம் அதிகரிக்கும். சில நேரங்களில் தனிமையிலேயே இருந்துவிடலாம் என அவர்கள் மனது இறுகிவிடும். எனவே சிறுவயதிலிருந்தே விளையாட்டு, பாட்டு என அவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொள்வது அவசியம்.
சாப்பிடும், தூங்கும் நேரத்தை தீர்மானிப்பது அவசியம். குறிப்பாக தூங்கும்போது குழந்தைகளுக்கு கதை சொல்லுதல், அந்த நாளில் பள்ளியில் நடந்தது பற்றி கேட்டல் போன்ற செயல்கள் வேலைக்கு செல்லும் பெற்றோராக இருந்தாலும் கூட அவர்களுக்கு குழந்தைகளுடனான உறவை வலுப்படுத்தும்.
குழந்தைகளுக்கு நீங்கள் தேவைப்படும்போது கண்டிப்பாக உங்களின் கவனம் கிடைத்தல் அவசியம். குழந்தைகள் ஏதாவது கேட்டால் அதுகுறித்து பதிலளிக்க நீங்கள் தயாராக இருப்பதுடன், அந்த பதில் குழந்தைகளை நிறைவு செய்வதாகவும் இருத்தல் அவசியம். அப்போதுதான் குழந்தைகளின் மனநலம் நன்றாக இருக்கும். எப்போதும் கோபத்தை மட்டுமே வெளிப்படுத்தல் கூடாது.
குழந்தைகள்மீது நம்பிக்கை வைக்கும் பெற்றோராக இருப்பதுடன், அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்தல் அவசியம். மேலும் அவர்கள் உண்மையாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும் நீங்களும் குழந்தைகளிடம் உண்மையாக இருத்தல் அவசியம்.