சிறப்புக் களம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா, முகவரி மாற்றணுமா? - இதோ எளிய வழிகாட்டுதல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா, முகவரி மாற்றணுமா? - இதோ எளிய வழிகாட்டுதல்

Veeramani

தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. வரும் டிசம்பர் 15 ஆம் தேதிவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக இன்று மற்றும் நாளை நவம்பர் 21, 22  ஆகிய தேதிகளில்  தமிழகம் முழுவதும் முகாம்கள் நடைபெறுகின்றன. டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய நாட்களிலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன. பொதுவாக தங்கள் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது, மேலும் சில குறிப்பிட்ட இடங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. இம்முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் இடமாற்றம் ஆகியவற்றுக்கான படிவங்கள் கிடைக்கும், பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.

யாருக்கு எந்த படிவம்?

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐயும், பெயரை நீக்க படிவம் 7-ஐயும், திருத்தத்திற்கு படிவம் 8-ஐயும், இடமாற்றத்திற்கு படிவம் 8ஏ-ஐயும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் தகுதி?

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பதாரருக்கு 1.1.2021-இல் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதாவது 1.1.2003 க்கு முன்னர் பிறந்தவர்கள் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

யாரிடம் விண்ணப்பிப்பது?

வரும் டிசம்பர் 15 ஆம் தேதிவரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச் சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி  மற்றும் உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களில் இந்த அலுவலகம் செயல்படுகிறது.

சிறப்பு முகாம் நாட்களில் அந்தந்த வாக்குச் சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம்  விண்ணப்பிக்கலாம். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

என்னென்ன சான்றுகள் வேண்டும்?

  • புகைப்படம் -1
  • அடையாள சான்று-1
  • முகவரி சான்று-1
  • வயது சான்று-1

முகவரி சான்று ஆவணங்கள்:

  • பாஸ்போர்ட்
  • ஓட்டுநர் உரிமம்
  • வங்கி / கிஸான்/ அஞ்சல் அலுவலக சமீபத்திய கணக்குப் புத்தகம்
  • குடும்ப அட்டை
  • வருமான வரித்துறையின் கணக்கீடு ஆணை
  • சமீபத்திய வாடகை உடன்படிக்கை
  • சமீபத்திய குடிநீர்/ தொலைபேசி/ மின்சாரம்/ சமையல் எரிவாயு இணைப்பு ரசீது

வயதுச் சான்று ஆவணங்கள்:

  • பிறப்புச் சான்றிதழ்
  • வயது குறிப்பிடப்பட்ட 5, 8, 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • பாஸ்போர்ட்
  • பான் கார்டு
  • ஓட்டுநர் உரிமம்
  • ஆதார் அட்டை

அடையாள சான்று:

  • ஆதார் கார்டு
  • பான்கார்டு
  • ஓட்டுநர் உரிமம்
  • வங்கி கணக்கு புத்தகம்
  • பாஸ்போர்ட்

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் என்ன செய்ய வேண்டும்?

வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6A-ஐ நேரில் அல்லது தபாலில் அனுப்பலாம். வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6A நேரில் அளிக்கப்படும்போது அதனுடன் கூட விண்ணப்பதாரரின் புகைப்படம், ஏனைய பிற விவரங்களுடன் விசா பற்றிய குறிப்பு அடங்கிய  பாஸ்போர்ட் பக்கங்களின் நகல்களை சேர்த்து அளிக்கவேண்டும்.

மாற்று புகைப்பட அடையாள அட்டை விண்ணப்பிக்கும் நடைமுறை:

இடம் பெயர்தல்,திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்து போதல் ஆகிய காரணங்களுக்காக மாற்று புகைப்பட அடையாள அட்டை பெற வேண்டியிருப்பின் வட்டாட்சியர் / மண்டல அலுவலகத்தில் படிவம் 001 இல் விண்ணப்பிக்கலாம்.

 - வீரமணி சுந்தரசோழன்