சிறப்புக் களம்

கமல்ஹாசனின் ரசிகர்களே, அவருக்கு ஓட்டுப்போடுவார்களா என்பது சந்தேகம்தான்- வி.பி துரைசாமி

sharpana

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை தேர்வு செய்து, அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளராக தனித்து களம் காணும்போது பாஜகவின் வாக்குகளைப் கமல்ஹாசன் பிரிப்பாரா? என்பது குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமியிடம் பேசினோம்,

  “கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அக்கட்சியினருக்கு உரிமை உள்ளது. அவர், மிகப்பெரிய நடிகர்: மிகச்சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.  ஆனால், அரசியல் தலைவரா? என்ற நோக்கத்தில் பார்க்கப்படும்போது அவரால் மக்களின் நம்பிக்கையை பெறவோ, அதிக வாக்குகளைப் பெறவோ முடியாது. கமல்ஹாசனின் ரசிகர்களே, அவருக்கு ஓட்டுப்போடுவார்களா என்பது சந்தேகம்தான். நடிகராக அவரை ரசிப்பது என்பது வேறு. அரசியலில் ஓட்டு போடுவது என்பது வேறு. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா போல, அதே பழைய மனநிலையிலேயே இருப்பார்கள் என்பதை சொல்ல முடியாது.

தமிழக மக்களை வரும் சட்டமன்றத் தேர்தலில் ஈர்க்கப்போகும்  முகம் பிரதமர் மோடிதான். அவரை விஞ்சிய முகம் கமல்ஹாசனுடையது அல்ல. அதனால், எங்கள் கட்சிக்கும் கூட்டணிக்கும் கமல்ஹாசன் போட்டியே கிடையாது. பிரதமர் மோடி 13 ஆண்டுகள் முதல்வராகவும், ஆறு ஆண்டுகள் பிரதமராகவும் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி மக்களை உயர்த்தி வருகிறார். மக்கள் ஏற்றுக்கொண்டதால்தான் இரண்டாவது முறையாகவும் பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். பாகிஸ்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் மக்களை காப்பாற்றி வருகிறார் பிரதமர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதனால், எங்கள் கட்சியோடு கமல்ஹாசனை ஒப்பிடவேண்டாம். அவரால் எங்களுக்கு நிகரான போட்டியாக வரவும் முடியாது” என்கிறார், அவர்.