சிறப்புக் களம்

"அழகு தோலில் இருக்காது, பிரியத்தில்தான் இருக்கும்" - மாடல் ரம்யா கிரிஸ்டினா ’பளிச்’ பேட்டி

"அழகு தோலில் இருக்காது, பிரியத்தில்தான் இருக்கும்" - மாடல் ரம்யா கிரிஸ்டினா ’பளிச்’ பேட்டி

நிவேதா ஜெகராஜா

ஐந்து வயதிலிருந்து, வெண்புள்ளி பாதிப்போடு போராடும் ரம்யா, இன்று உலக வெண்புள்ளி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நம்மிடையே பேசினார்.

பெண்களை மையப்படுத்திய அழகுக்கலை பொருட்களின் விளம்பரங்கள், நமக்கு என்ன சொல்லிக்கொடுத்திருக்கின்றன என சற்று யோசித்துப் பார்த்தால், ‘கருப்பாக இருக்கும் பெண்கள், தன்னம்பிக்கை குறைவாக இருப்பார்கள். பின் அந்த விளம்பர பொருளை பயன்படுத்தி, வெள்ளையாகிவிடுவார்கள். அந்த ‘சிறு புள்ளி’ கூட கொஞ்சமும் நிறம் குறையாத வழுவழு சருமம் அவருக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும்; அந்த தன்னம்பிக்கையால் அவர் வாழ்க்கையில் ஜெயிப்பார்கள். அதன்பின், நல்ல வேலை கிடைக்கும் - காணும் ஆண்களெல்லாம் அவரிடம் காதலில் விழுவார்கள்’ என்பதாகத்தான் இருக்கிறது.

எழுதப்படாத விதி போல, காலம் காலமாக இதுவே விளம்பர பெண்களின் முகங்களாக இருக்கிறது. இங்கு, அழகென்பது வழுவென்ற – பளிச் நிற தோல்தான். அதனாலேயோ என்னவோ, விளம்பர மாடல்களெல்லாம், வெள்ளை நிறமுடையவர்களாகவே இருக்கிறார்கள்.

இவர்களுக்கிடையில், வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டு, தற்போது அதை எதிர்கொண்டிருக்கும் ரம்யா கிரிஸ்டினா, தனியாகவே நமக்கு தெரிந்தார். ஐந்து வயதிலிருந்து, தனக்கு இந்த பாதிப்பு இருக்கும் என கூறும் ரம்யா, மீடியா துறையை சார்ந்தவர்தானாம். உதவி இயக்குநராகவும், திரைப்படங்களுக்கான எழுத்தாளராகவும் பணியாற்றிய இவர், தற்போது அட்டகாசமான மாடல். இன்று உலக வெண்புள்ளி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நம்மிடையே பேசினார் அவர்.

“மாடலிங் என்பது, நானே எதிர்ப்பாராம எனக்கு கிடைச்ச ஒரு துறை. என் ஃப்ரெண்ட் ஒருத்தங்க, நல்லா புகைப்படம் எடுப்பாங்க. ஒருமுறை, வித்தியாசமான – தனித்துவமான விஷயங்களை புகைப்படம் எடுக்கனும்னு நினைச்சு, என்னை மாடலா இருக்க முடியுமானு கேட்டாங்க. கேமிராவுக்கு பின்னாடி வேலை செய்யுற நாம, ஏன் கேமிராவுக்கு முன்னாடி வரக்கூடாதுனு நினைச்சு, இந்தப் பயணத்தை தொடங்கினேன். அந்த ஃபோட்டோஷூட்டுக்கு, பயங்கர வரவேற்பு கிடைச்சுது இணையத்துல. தொடர்ந்து நிறைய பேர், என்னை ஊக்கப்படுத்தினாங்க. அந்த ஊக்கம்தான், இன்னைக்கு நான் இந்தளவுக்கு வெளியே தெரிய காரணம்” என்கிறார் ரம்யா.

மேலும் பேசிய அவர், “நான் ரொம்ப சராசரியான பொண்னு தான். சின்ன வயசுலருந்து, இந்த பாதிப்புனால, ஏராளமான நிராகரிப்பும், அவமானமும் என் வாழ்க்கையில இருக்கு. தொடக்கத்துல, கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. ஒருகட்டத்துல இந்த பாதிப்பு பற்றி புரியவைக்கலாம்னு கூட நினைச்சேன். ஆனா, அந்த சின்னவயசுல எத்தனை பேருக்கு என்னால புரியவைக்க முடியும் சொல்லுங்க. அதனால, அந்த முயற்சியையும் விட்டுட்டேன்.

என்கூட படிச்ச மாணவர்கள் மட்டுமில்லாம, சில ஆசிரியர்களும்கூட என்னை கிண்டல் பண்ணியிருக்காங்க. அந்த வயசுல, என்கூட படிச்சவங்களுக்கே என் நிலையை புரிய வைக்க என்னால முடியலை. இதுல, ஆசிரியர்கள் - என் நண்பர்களோட பெற்றோருக்கெல்லாம் எப்படி புரியவைக்க முடியும்? அந்த மிரட்சியே, என்னை மன அழுத்தத்துக்கு உள்ளாகிடுச்சு. சரி, பாதிப்பையாவது சரிசெய்யலாம் என நினைச்சா, மருத்துவத்துல வழி கிடைக்கலை. ஏராளமான சிகிச்சைகள்... தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவரையா அணுகினோம். எல்லாமே வீண். ஒருக்கட்டத்துக்கு மேல, அதுவும் முடியாதுன்னு தெரிஞ்சுது. எல்லாம் சேர்ந்த இன்னும் மன அழுத்தம்.

அதுக்குப்பிறகு, நமக்கு இவங்களுக்கு புரிய வைக்கிறது வேலை இல்ல; நம்ம வாழ்க்கையில ஜெயிக்கனும்னு நினைச்சேன். நல்லா படிச்சு, எனக்கான துறையை சேர்ந்தெடுத்தேன். இப்போ வரை நல்லா இருக்கேன்.

என்னோட ஆதங்கமெல்லாம் ஒன்னுதான். இங்க, எங்களை போன்றவங்களை சக உயிராகூட மதிக்காத நிலைமைதான் பரவலா இருக்கு. அந்த நிலைமை மாறணும். நாங்களும், மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய சராசரி உயிர்கள்தான். ஒரு குறைபாட்டை காரணமா பிடிச்சுக்கிட்டு, சக உயிரை ஏளனம் செய்வது, எவ்வளவு பெரிய வன்முறைன்னு பலருக்கு தெரிய மாட்டேங்குது.

அழகென்பது, பிரியத்தின் விளைவுதான். நீங்க எல்லாரும் வரையறுத்துவைக்கும் வெள்ளை தோலிலும் பளிச் பொலிவிலும் அழகு கிடையாது. இந்தப் புரிதல், இங்கிருக்கும் பெரியவர்களுக்கு வர வேண்டும் என்பதுதான் என்னோட எதிர்ப்பார்ப்பு. இந்த குறைபாட்டால பாதிக்கப்பட்ட எங்க எல்லாருக்கும், இதுவொரு நோயில்லைன்னு தெரியும். தெரியாதது, எதிர்ல இருக்கும் ஏளனப்பார்வையை வீசுபவர்களுக்குத்தான். நாங்க பலமுறை எங்க நிலையை உங்களுக்கு காட்ட முயற்சித்தும், நீங்க அதை காதுலகூட வாங்க மறுத்துட்டீங்க. அதனால, இங்க கவலைப்பட வேண்டியதும், முடங்கிக்கிடக்க வேண்டியதும் நாங்க இல்ல; சக உயிரைக்கூட மதிக்கத்தெரியாத, நீங்கதான்” என்று அழுத்தமாக சொன்னார், ரம்யா.

ஆம், அழகென்பது பிரியத்தின் விளைவே!