சிறப்புக் களம்

நடிகர் கமலை ரசித்தது போல ரைட்டர் கமலையும் லோகேஷ் ரசித்திருக்கலாம்!- விக்ரம் திரை விமர்சனம்

subramani

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இன்று திரைக்கு வந்திருக்கும் சினிமா விக்ரம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரைக்கு வரும் கமல் படம் இது என்பதால் மிகுந்த எதிர்பாப்பு இருந்தது. அதனை கமல்ஹாசனும் லோகேஷ் கனகராஜும் பூர்த்தி செய்தார்களா பார்க்கலாம்.

காவல்துறை உயரதிகாரிகள் சிலரை தொடர்ந்து கொலை செய்கிறது மாஸ்க் அணிந்த மர்ம கும்பல். அந்த கும்பலைக் கண்டுபிடுக்கும் பொறுப்பு ஃபகத்துக்கு வழங்கப்படுகிறது. மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் கமல் மற்றும் ஃபகத் குழுவிற்கும் இடையே நடக்கும் அட்டகாச ஆக்‌ஷன் காட்சிகளின் தொகுப்புதான் விக்ரம்.

முதல் பாதியில் படத்தை டேக் ஆப் செய்து விட்டுப்போகும் கமல்ஹாசன் இடைவேளை வரை காணாமல் போகிறார். இது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம். அதே நேரம் இரண்டாம் பாதியில் திரையை முழுக்க தனதாக்கிக் கொண்டு அசத்தியிருக்குறார் கமல். முதல் பாதியில் கர்ணனாகவும், இரண்டாம் பாதியில் விக்ரமாகவும் வரும் கமலின் நடிப்புக்கு நல்ல தீனி போட்டிருக்கிறது இந்தப் படம். ஏன் கமல் இதையெல்லாம் செய்கிறார் என்ற விஷயம், கதையோடு ஒட்டும் படியாக இல்லை என்றாலும் மாஸ் கதைக்கு ஏற்ற லாஜிக்காக அது வொர்க் அவுட் ஆகிறது. அதுவே படத்தின் மூல கருவாகவும் அமைகிறது.

இரண்டரை மணி நேரத்தில் ஒரு லட்சம் தோட்டாக்களையாவது வெடிக்க வைத்திருப்பார் லோகேஷ் கனகராஜ். இந்த டமால் டுமீல் விசயங்கள் இரண்டாம் பாதியில் பெரிய தலைவலியை உண்டு செய்கிறது. அது போதாதென அனிருத்தும் இசைத்து தள்ளி இருப்பது காதுகளுக்கு பெருஞ்சோர்வையே தருகின்றது. விஜய் சேதுபதி கமலுக்கு டஃப் கொடுக்கும் வில்லனாக நடிப்பிலும் உடல் மொழியில் அசத்தியிருக்கிறார். சீக்ரட் ஏஜென்ஸி அதிகாரியாக வரும் ஃபகத் பாசில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் முக அசைவிலும் நடிப்பை அள்ளி வழங்கி இருக்கிறார். நரேன் குறிப்பிடத்தக்க நடிப்பை கொடுத்திருக்கிறார். கேமியோ ரோல் செய்திருக்கும் சூர்யா திரையில் தோன்றும் காட்சியில் அரங்கம் கரவொலியில் நிறைகிறது.

தியேட்டரில் பார்ப்கார்ன் விற்பவர் தவிர, சந்தான பாரதி, கமல் வீட்டில் வேலை செய்யும் பெண், கமல்ஹாசனின் டிரைவர் என திரையில் வரும் 80 சதவிகிதம் பேரை சீக்ரட் ராணுவ ஏஜெண்ட்டாக, காவல்துறை அதிகாரிகளாக காட்டியிருக்கிறார்கள். அதனை கொஞ்சம் கட்டுப்படுத்தியிருக்கலாம். பக்கத்து சீட்டில் இருப்பவரையே சந்தேகத்துடன் பார்க்கத் தோன்றுகிறது. பேரனிடம் பாசம் காட்டும் தாத்தா., மகனை இழந்த தந்தை., முன்னாள் ராணுவ அதிகாரி என கமல் அனைத்து புள்ளியிலும் நின்று விளையாடியிருக்கிறார்.

கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு அருமை. லோகேஸ் கனகராஜுக்கு இணையான பொறுப்பும் கடின வேலையும் செய்திருப்பது அன்பறிவும் அவரது குழுவும். அவர்களது ஸ்டண்ட் காட்சிகள் படத்தின் அனைத்து லாஜிக் பிரச்னைகளையும் அடித்து துவைத்துவிடுகிறது.

நீண்டகாலமாக திரையில் சிகரட் பிடிப்பதை தவிர்த்து வந்த கமல்ஹாசனை இந்த சினிமாவில் புகை பிடிக்க வைத்திருக்கிறார் லோகேஷ். அதனை தவிர்த்திருக்கலாம். அது இக்கதைக்கு அத்தனை முக்கியமான விசயமும் அல்ல. பெரிய லாஜிக் விஷயங்களை எதிர்பார்க்காமல் கமல்ஹாசனின் பக்கா ஆக்‌ஷன் சினிமாவை ரசிக்க நினைப்பவர்களுக்கு விக்ரம் நல்ல விருந்து.

கமலின் ஸ்க்ரீன் பிரெஸென்ஸை பார்த்து பார்த்து சினிமா கற்ற லோகேஷ் , கமலின் ரைட்டிங்கையும் வியந்து பார்த்து கற்றிருக்கலாம்.