சிறப்புக் களம்

”ஈழத்தை வைத்து பிழைக்க நினைப்பவர்கள் இழிவானவர்கள்” : டி.அருள் செழியன்!

sharpana

இலங்கை கிரிக்கெட் வீரரும் தமிழருமான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் சேதுபதிக்கு அரசியல் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் பத்திரிகையாளரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதையாசிரியருமான டி.அருள் செழியன் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்து வருகிறார். அவரிடம் பேசினோம்,   

   “நான் கிரிக்கெட் ரசிகரோ முத்தையா முரளிதரன் அனுதாபியோ அல்ல.  தமிழீழ விடுதலை போர் முடிவுக்கு வந்த நேரத்தில் அவர் இலங்கை அரசுக்கு ஆதரவாக ஒரு நிகழ்ச்சியில் சில  கருத்துக்களை தெரிவித்ததாக சில இணையங்களில் கொந்தளிப்பான செய்திகள் வந்தன. சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரன்  கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வந்த நாள் முதலே அதற்கு எதிர்ப்புகளும்  எழ ஆரம்பித்தன.



அப்போது ஒருநாள் இது குறித்து நான் சேதுபதியிடம் கேட்டபோது, 'இதில் அரசியல் கருத்து ஏதும் இல்லை. கதை நல்லா இருக்கு அதனால் நடிக்கிறேன்..' என்றார். தற்போது அந்த படத்தின் அறிவிப்பு வெளியான சூழலில் இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு எதிரான கருத்துக்கள் பரவலாக வர ஆரம்பித்தது.

முகநூலில் வசிக்கும் சில புதிய தமிழ் தேசியவாதிகள், விஜய்சேதுபதியை தரக்குறைவாக விமர்சித்து பதிவுகளிட்டனர். அதிலும் குறிப்பாக  தம்பி ஒருவர் விஜய நகர் பேரரசு, சிங்கள நாயக்கர் இவர்களோடு அவரை தொடர்பு படுத்தி ஒரு பதிவை போட்டார். அது மிகவும் அநாகரிகமான பதிவாக எனக்குத் தோன்றியது.

இன்று இவர்கள் வந்தேறிகள் என்று சொல்வோர்தான் முப்பத்தைந்து  ஆண்டுகளுக்கு முன்னர் புலிகள் தமிழகத்துக்கு உதவி கேட்டு வந்த காலத்தில் பேருதவி செய்து அவர்களுக்கு இங்கு களம் அமைத்துக் கொடுத்து உற்ற நண்பர்களாக  இருந்தவர்கள். 1985 ஆம் ஆண்டில் நாகர்கோயிலில் விடுதலைப் புலிகளின் தோழமைக் கழகத்தில் இருந்தேன். அப்போது ஈழத்திலிருந்து வந்த புலிகளின் பிரதிநிதிகளுடன் புலிகளுக்கு நிதி வசூல் செய்ய நண்பர்களுடன் போவது  வழக்கம், அவ்வாறு நாங்கள் போகும் போது தி மு க அல்லது தி க சார்புடைய வர்த்தகர்கள்தான் கணிசமான நிதியை அள்ளித் தருவதை பார்த்திருக்கிறேன்.

 டி.அருள் செழியன்

அப்படி போகும் போது ஒருநாள் , மார்த்தாண்டத்தில் ஒருவர் நிதி தர மறுத்ததோடு ஈழத் தமிழருக்கு எதிராக ஆத்திரத்தில் கூச்சல் போட்டார். இதுதான் ஈழ விடுதலைக்கு எதிராக நான் கேட்ட முதல் குரல். அப்போது எனக்கு அந்த குரலை பிடிக்கவில்லை ஆனாலும் அதற்குள் ஏதோ ஒரு ஆறாத காயம் இருப்பதை உணர்ந்தேன். அதாவது முகநூல் போராளிகள்  கூற்றுப்படி அவர் விஜயசேதுபதியின் உறவினரான ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவால் நாடு கடத்தப்பட்ட மலையகத் தமிழராம்.

 'எங்கள நாடு கடத்துனப்போ இவனுங்க (ஈழத் தமிழர்) வேடிக்கை பாத்தானுக இவனுகளுக்கு நான் எதுக்கு பணம் தரணும்..' அந்த குரல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலையகத் தமிழர் இலங்கையிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டபோது ஈழத் தமிழர்கள் வேடிக்கை பார்த்தார்களா இல்லையா என்பதையெல்லாம் நான் ஆராய்ச்சி செய்யவில்லை.  காரணம், அப்போது அந்த தருணத்தில் தலைவர் பிரபாகரனும் இல்லை புலிகளும் களத்தில் இல்லை. 

 இப்போதும் தலைவரும் இல்லை புலிகளும் இல்லை. புலிகள் இல்லா தேசத்தில் இன்று அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்த ஜாதி வெறி மீண்டும் தலை தூக்குகிறதாக நண்பர்கள் சொல்கிறார்கள். ஏற்கனவே, இலங்கை தமிழர்கள் ஈழத்தமிழர், மலையகத் தமிழர், கொழும்பு தமிழர் , தமிழ் முஸ்லிம்கள் என வழக்கம் போல பிரிந்து நிற்கிறார்கள். 

ஈழத்தில் யுத்தம் முடிந்த பின்னர் சிறைகளிலும் முகாம்களிலும் பிடிக்கப்பட்ட போராளிகளை மீட்க அவர்களின் உறவினர்கள் பரிதவிப்போடு போராடினார்கள். ஒருவழியும் தெரியாத நிலையில் அவர்களில் சிலர் சில காலத்திற்கு முன்புவரை தாங்கள் இனத் துரோகி என்றழைத்த  சிங்கள அரசுக்கு நெருக்கமாக இருந்த   கருணா ,டக்ளஸ், கேபி போன்றோரின் உதவியை நாடவேண்டி வந்தது. அவர்களும் பலரது விடுதலைக்கு உதவினர். பாதிக்கப்பட்ட மக்களிடம் 'ஏன் துரோகிகளிடம் உதவி கேட்டீர்கள்? என்று யாரும் கேட்க முடியாது. ஏனென்றால் அது அவர்களின் வாழ்வா? சாவா? பிரச்சனை.

 இப்போதும் ஈழத்தில் நம்மால் துரோகிகள் என்று சொல்லப்படுபவர்களையும் அனுசரித்துக் கொண்டுதான் ஈழத்து ஏழைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யுத்தம் முடிந்த பின்னர், இப்போது புலிகளுக்காக புலம் பெயர் தேசங்களில் உழைத்தவர்கள் பலரும் தங்கள் தாய் மண்ணிற்கு வந்து போகிறார்கள். யுத்தத்தால் இழப்புகளை சந்தித்தவர்களுக்கு, புலம் பெயர் தமிழர்கள் தனியாகவும் குழுக்களாகவும் புனர்வாழ்வு அளித்து வருகிறார்கள். 

யுத்தம் தொடர்ந்த காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்த புலம் பெயர் வணிகர்கள், தற்போது ஈழப் பகுதிகளில் விவசாயப் பண்ணைகள் அமைத்து அங்கிருந்து புலம் பெயர் நாடுகளுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்து வருகிறார்கள். சிங்கள அரசால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டவர்கள் கூட அரச ஆதரவாளர்களுடன் உறவுகளை மேம்படுத்திக் கொண்டு  இலங்கைக்கு சுமுகமாக வந்து போய் கொண்டிருக்கிறார்கள்.

 அப்படிப் பார்த்தால்  இவர்கள் அனைவரும் விஜயநகர வகையறாக்கள்தானா? விஜய் சேதுபதியும் மலையகத் தமிழரான முத்தையா முரளிதரனும் இணைந்திருக்கிறார்கள். இந்த படம் இலங்கை அரசியலை கதைக்கப் போவதில்லை. ஆரம்பத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போன்ற இசை நிகழ்ச்சிகளையே நடத்த விடாதபடி எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின்னர் கத்திக்கு எதிராக கத்தினார்கள்.

 பின்னர் லைக்காவின் வீடு கட்டும் திட்டத்துக்கு ரஜினிகாந்த் போகக்கூடாது எனக் கொடி பிடித்தார்கள். ஆனால், இங்கே கால் ஊன்றி விட்ட பிறகு லைக்காவுக்கு எதிராக குரல் எழுப்பிய ஒரு தலைவர் பிறகு தன் நண்பர்களுக்கு பட வாய்ப்பு கேட்டு லைக்காவுக்கே 'like' போட்டதை நான் அறிவேன். முத்தையா முரளிதரன் படம் நல்ல திரைக் கதையுடன் நயமாக வந்தால் நானும் ரசிப்பேன். இல்லையேல் வழக்கம் போல கடந்து போவேன்.



இலங்கையில் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், கொழும்பு தமிழர்கள், இஸ்லாமிய தமிழர்கள் என்றும் இன்னும் ஜாதிப் பிரிவுகளாலும் பிரிந்து இருக்கிறார்கள். தமிழீழ அரசியலையும் அங்குள்ள மக்களின் உணர்வுகளையும் தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்தும் போக்கு தமிழக அரசியலில் இன்றும் தொடர்கிறது. தன்னலமற்ற தமிழ் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மறைவுக்கு பின்னர் போலிகளின் ஆட்டம் அதிகரித்திருக்கிறது. ஈழ அரசியலை தங்கள் சுய வாழ்வுக்கு பயன்படுத்தும் இவர்கள் முத்தையா முரளிதரனை வைத்து தங்கள் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய நினைக்கிறார்கள்.

நம் ஊரில் தீண்டாமை முதல் பல்வேறு சமுக பிரச்சினைகள் இருக்க இன்னமும் இங்கு ஈழத்தை வைத்து பிழைக்க நினைப்பவர்கள் இழிவானவர்கள். இலங்கை  அரசியல் வேறு தமிழக அரசியல் வேறு என்ற புரிதல்  இல்லாமல் இயங்கும் தமிழ் சங்கிகளுக்கு என் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலேயே நான் என் கருத்தை பதிவு செய்கிறேன்.

தொகுப்பு - வினி சர்பனா