சிறப்புக் களம்

‘சர்கார்’ கதையே வேற.. அரசியல் கதையும் இல்லை. அரசியல்வாதி கதையும் இல்லை.

‘சர்கார்’ கதையே வேற.. அரசியல் கதையும் இல்லை. அரசியல்வாதி கதையும் இல்லை.

webteam

‘சர்கார்’ சம்பந்தமாக பலர் பல விஷயங்களை கற்பனை கலந்து எழுதுகிறார்கள். ஆகவே கடைசியா எழுத உங்ககிட்ட என்னதான்ப்பா இருக்கு? என பலர் யோசிக்கலாம். கட்டாயம் இருக்கு. அதான் ‘சர்கார்’ ஹைலைட்ஸ் அண்ட் சர்ப்ரைஸ். 

விஜய் ‘சர்கார்’ ஆடியோ ரிலீஸ் அன்று பேசிய பஞ்ச் வசனங்களால் இந்தப் படம் நிச்சயம் அரசியல் தலைவர்களை கட்டம் கட்டி காய் நகர்ந்தும் படமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் உட்பட எல்லோரும் கதை கட்டி விட்டார்கள். ஆனால் இந்தப் படத்தில் அரசியல் இருக்கு. ஆனால் அதில் விஜய் இல்லை என்பதுதான் மிக முக்கியமான செய்தி. அவர் இந்தப் படத்தில் ஒரு கார்பரேட் முதலாளி அவ்வளவுதான். ஆகவே அவர் ஆடியோ விழாவில் சொன்னதைபோல ‘நிஜத்தில் முதல்வர் ஆனால் முதல்வராக நடிக்க மாட்டேன்’ என்ற டயலாக்கிற்கு படத்தில் வேலையே இல்லை. ஏனென்றால் இந்தப் படத்தில் விஜய் நடிப்பிற்காககூட முதல்வராக நடிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

விஜய்யின் கதாப்பாத்திரத்தை மிக தெளிவாக வரையறை செய்துள்ளதாக முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஒரு ஹீரோ இல்லை. தெளிவாக சொல்லப்போனால் ஒரு வில்லனுக்கும் ஒரு வில்லனுக்கும் நடக்கும் போர் என்றுதான் அவர் கூறியிருக்கிறார். ஆகவே விஜய் ஒரு கார்பரேட் வில்லனாக எண்ட்ரி கொடுக்கிறார் படத்தில். அதன் படி அவர் அதிகம் விரும்புவது வெற்றி. எதை தொட்டாலும் சக்சஸ். அப்படிபட்ட ஒரு கார்பரேட் முதலாளி முதன் முறையாக ஒரு தோல்வியை சந்திக்கிறார். அதாவது அவமானத்தை சந்திக்கிறார்.

ஆசையாசையாக இந்தியாவிற்கு ஓட்டளிக்க வரும் விஜய்யின் ஓட்டு களவாடப்படுகிறது. ஆகவே அவர் அவமானத்தால் முதல் தோல்வியை சந்திக்கிறார். அந்தத் தோல்வியை சரிகட்ட நினைக்கிறார் விஜய். அதற்குள் இறங்கி புலனாய்வை தொடங்குகிறார். கள்ள ஓட்டு என்பதற்கு பின்னால் பல கருப்பு ஆடுகள் இருப்பதை விஜய் உணர்கிறார். கள்ள ஓட்டை ஒழிக்க ஒரு டெக்னிக்கல் புரட்சியை கண்டறிகிறார். ஆனால் அந்த டெக்னிக்கல் விஷயத்திற்கு உயிர் கொடுக்க முடியாதபடி அரசியல் முதலைகள் சதி செய்கிறார்கள். அதை எப்படி முறியடிக்கிறார் விஜய்? அவர் மூலம் ‘ஒரு விரல் புரட்சி’ எப்படி உதயமாகிறது என போகிறது படத்தின் கதைக்களம்.

விஜய்யின் கார்பரேட் முகத்தை எடுத்து காட்டுவதற்காகதான் இந்தப் படத்திற்கு முருகதாஸ் ‘வில்லாதி வில்லன்’ என முதலில் தலைப்பு வைத்திருக்கிறார். ஆனால் அது அரசாங்கத்தின் குளறுபடிகளை கூற நினைத்ததால் ‘சர்கார்’ ஆக மாற்றப்பட்டிருப்பதாக அவர் மேலோட்டமாக அளித்துள்ள விளக்கத்தை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆக, சர்காரில் விஜய் சரி செய்வது அரசியலை அல்ல; அரசியல்வாதிகளையும் அல்ல; அவர் செய்வது ஒரு விரல் புரட்சி அரசு நிர்வாகத்தில் இருந்து தொடங்குகிறது. இந்தக் கதை முழுக்க முழுக்க அரசு நிர்வாக அமைப்பை குறிப்பாக தேர்தல் முறையை சீர்செய்ய முயற்சித்திருக்கிறது. அதையே உறுதி செய்திருக்கிறார் முருகதாஸ். 

இந்தக் கதையை முருகதாஸ் ‘மெர்சல்’ படத்திற்கு முன்பாகவே விஜய்க்கு கூறிவிட்டார். ஆனால் அவர் அட்லீ படத்தை முடித்துக் கொண்டு உங்கள் படத்தை தொடங்குவோம் என பதிலளித்திருக்கிறார். அதன்படி ப்ளான் போட்டு முருகதாஸ் காத்திருக்கும் போதுதான் ‘மெர்சல்’ அரசியல் வசனங்களால் நாடே பற்றி கொண்டு எரிந்தது. அந்தச் சர்ச்சைக்கு பின் மீண்டும் முருகதாஸை அழைத்து விஜய், “ஒரு டயலாக் பேசினதற்கே இவ்வளவு பிரச்னை. நாம நீங்க சொன்ன பழைய கதையையே பண்ணணுமா? இல்ல வேற கதைக்கு போகலாமா?” எனக் கேட்டதாக முருகதாஸே கூறியிருக்கிறார். 

ஆனால் அவர்,“அரசியல்வாதிகளை நாம குறை சொல்றோம். ஆனால் நம்ம கடமையை நாம ஒழுங்கா செய்றோமா? ஒரு குடிமகனா நம்ம கடமையை சரியா செய்ய வலியுறுத்தும். அதனால இந்தக் கதையையே பண்ணுவோம்” என்று விஜய்க்கு விளக்கம் தந்திருக்கிறார். அவரது விளக்கத்தின்படி பார்த்தால் இதில் அதிகம் அரசியல்வாதிகள் பிரச்னை இருக்காது என்பது புரிகிறது. அவர்களை அடிக்கவில்லை என்றால்? பொதுமக்களை நோக்கி கேள்வி எழுப்புகிறது. நீங்க சரியா இருங்க.. எல்லாம் சரியாகிவிடும் என்கிறது.  

சரி, டீசருக்கு வருவோம். இதில் இறுதியாக ஒலிக்கும் வார்த்தை get ready folks. இதே வசனத்தைதான்  ‘எந்திரன்’ படத்தில் ரஜினி பயன்படுத்தி இருந்தார். அதேபோல ‘பாட்ஷா’வில் ரஜினியை கட்டி வைத்து தாக்கும் மின்கம்ப காட்சியைபோல ஒரு காட்சி ‘சர்கார்’ டீசர் மழைப்பாடல் காட்சியில் பதிவாகி இருக்கிறது. டீசரில் விஜய் வரும் ஒரு விலையுர்ந்த கார் லாரி மோதி விபத்து ஏற்படுவதை குறிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்தக் காட்சியில் வரும் வண்டியின் எண்: TN01 CM 1000 என வருகிறது. இதில் CM என்ற எழுத்து எதையோ பூடகமாக குறிக்கிறது என்கிறார்கள் அவர்களது ரசிகர்கள். மந்திரிகள் எல்லாம் தங்களின் கார்களுக்கு MP என நம்பர் வாங்குவது ஒரு ட்ரெண்ட் தமிழ்நாட்டில் இருப்பதை குறிக்கும்படி உள்ளது இந்த CM சீக்ரெட்ஸ்.

அடுத்து விஜய் ஆடியோ வெளியீட்டுக்கு போட்டு வந்த பச்சை கலர் சட்டை டீசரில் இரண்டு இடங்களில் வருகிறது. ஆக, இசை வெளியீட்டு விழாவிற்கு இதே சட்டையை விஜய் திட்டமிட்டே உடுத்தி வந்திருப்பதாகவும் அவர் மேடையில் பேசிய வசனங்கள் கூட படத்தில் அதே சட்டையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் விஜய் பேசும் வசனங்களாகவே இருக்கும் என்றும் அவரது ரசிகர்கள் கருத்திட்டு பேசி வருகிறார்கள்.  

அதேபோல் ஒரு பழைய பங்களாவில் விஜய் சில அரசியல்வாதிகளை அடித்து நொறுக்கும் சண்டைக் காட்சி இடம் பிடித்திருக்கிறது. அந்தக் காட்சியை Zoom செய்தால் அங்கே ஒரு புகைப்படம் கறுப்பு வெள்ளையில் உள்ளது. அந்தப் படத்தின் சாயல் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரையையும் மு.கருணாநிதியையும் சுட்டிக்காட்டுவதைபோல உள்ளது என்கிறார்கள் சமூக வலைத்தளவாசிகள்.

முருகதாஸின் ‘கத்தி’ கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக ஒரு சாமானியன் செய்யும் புரட்சியை பேசியது. இந்த ‘சர்கார்’ ஒரு கார்பரேட் முதலாளி சமூகத்தில் எப்படி மாற்றங்களை கொண்டுவர முயற்சிப்பார் என்பதை பேசுகிறது. ஆக, ஒரு விஷயம்தான். ஆனால் இரண்டு துருவங்களின் அனுகுமுறையை மாற்றி போட்டு கதையை பேசியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். 

இந்தப் படத்தில் இரண்டு காட்சிகள் மிக உணர்சிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று அண்ணாசாலை வழியே விஜய் 2 ஆயிரம் இளைஞர்களுடன் வலம் வரும் பைக் பேரணி. அடுத்து இறுதியில் இரண்டே கால் நிமிஷம் விஜய் பேசும் உணர்ச்சி மிகும் உரை. இந்தக் காட்சி ஏற்குறைய ‘ரமணா’வில் விஜயகாந்த் பேசும் நீண்ட டயலாக்கிற்கு இணையாக இருக்கும் என்கிறது முருகதாஸின் நெருங்கிய வட்டாரம். ‘ரமணா’வில் ஊழலை பேசிய முருகதாஸ் இந்தப் படத்தில் மக்கள் எப்படி ஊழலுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதை கூரியிருக்கிறார். 

டீசரில் தெரிவதைபோல கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் ஒரு அழகுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என தெரிகிறது. அவர் கேரக்டரில் பெரிய வெயிடேஜ் ஒன்றுமில்லை. இங்கே சர்ப்ரைஸ் கேரக்டர் வரலட்சுமிதான். அவர்தான் விஜய்க்கு நேரெதிர் கேரக்டர். ஆக, வில்லாதி வில்லனுடன் மோதும் வில்லியாக வரு படம் முழுக்க வலம் வருகிறார்.