வேலுநாச்சியார், கட்டபொம்மன்
வேலுநாச்சியார், கட்டபொம்மன் PT
சிறப்புக் களம்

வீரமும் விவேகமும் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியாரின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

Jayashree A

தமிழர்களின் வீரத்தை பறை சாற்றும் மன்னர்களில் முக்கியமானவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனும், வேலு நாச்சியாரும். இவர்கள் இருவரும் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வெற்றிபெற்றவர்கள். இவர்களின் பிறந்த தினமான இன்று இவர்களின் வரலாற்றை சற்று திரும்பி பார்க்கலாம்

வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களில் முக்கியமானவர்.

தமிழகத்தில் உள்ள ஒட்டபிடாரம் பகுதியை ஆட்சி செய்து வந்தவர் ஜெகவீரபாண்டிய நாயக்கர். இவர் அவையில் அமைச்சராக இருந்தவர் தெலுங்கு நாட்டைச்சேர்ந்த கெட்டி பொம்மு. கெட்டிபொம்மு பேச்சுவாக்கில் மருவி கட்டபொம்மு என்றானது. ஜெகவீரபாண்டியனுக்கு பின்னால் கட்டபொம்மு அரசரானார். இந்த கட்டபொம்முவிற்கு ஜனவரி 3ம் தேதி 1760-ல் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். இவருக்கு ஊமைத்துரை, துரைசிங்கம் என்ற சகோதரர்களும் இருசகோதரிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

கி.பி.1793ல் ஆங்கிலேயர் இந்தியாவின் தெற்கு பகுதியில் காலூன்றிய சமயம், தெற்கு பகுதியை ஆட்சி செய்து வந்த சிற்றரசர்களிடம் கப்பம் வசூலித்தனர். கப்பம் தர மறுத்த அரசர்களை சிறை பிடித்தும், அவர்களின் ராஜ்ஜியத்தை அபகரித்தும் வந்தனர். அப்படி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்த ஆங்கிலேயர் வீரபாண்டியனிடம் கப்பம் கேட்டனர். கப்பம் கட்ட மறுத்த வீரபாண்டியன் மீது ஆலன் துரை தலைமையில் ஆங்கிலேயர்கள் படை எடுத்து வந்தனர். அதில் ஆலன் துரை கட்டபொம்மனிடம் தோற்று ஓடினார்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனை கைது செய்ய முயன்றார். அது தோல்வியில் முடிந்தது. பிறகு பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்து விடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.

செப்டம்பர் 9, 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆங்கிலேயருக்கு அடிமையான புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டான். அக்டோபர் 16, 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் தற்போது நினைவுச்சின்னம் உள்ளது.

வேலுநாச்சியார்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி மற்றும் முத்தாத்தாள் தம்பதியருக்கு 1730 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்வர் வேலு நாச்சியார். விஜயரகுநாத சேதுபதி தனது மகள் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்து அவருக்கு வில், வேல், வாள், சிலம்பம், வளரி மற்றும் குதிரை ஏற்றம் சவாரி போன்ற பயிற்சிகளை கற்றுக்கொடுத்தார். அன்றைய தேதியில் ஆண்கள் மட்டுமே அவற்றை அதிகம் கற்றுவந்தனர். அவர்களிடமிருந்து வேலு நாச்சியார் தனித்துவமாக தெரிந்தார். வேலு நாச்சியார், ஆயுதப் பயிற்சிகளில் மட்டுமின்றி கல்வியிலும் சிறந்து விளங்கினார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம் என பல மொழிகளையும் கற்று தேர்ந்தார்.

வேலுநாச்சியாருக்கு 16 வயதாகும்பொழுது, அவர் சிவகங்கையை ஆண்டு வந்த சசிவர்ணதேவரின் மகனான முத்துவடுகநாதருக்கு அவர் மணம்முடித்து வைக்கப்பட்டார். சசிதேவர் காலத்திற்கு பிறகு முத்துவடுகநாதர் சிவகங்கையின் அரசராக முடிசூட்டிக்கொண்டார்.

வேலுநாச்சியார்

இச்சமயத்தில் ஆற்காடு நவாப் ஆங்கிலேயருடன் சேர்ந்து சிவகங்கையை பிடிப்பதற்கு படையெடுத்து வந்தார். ஆனால் அமைச்சர் தாண்டவராயபிள்ளை உதவியுடன் ஆங்கிலேயரை விரட்டி அடித்தனர். இருந்தபோதிலும் ஆற்காடு நவாப் ஆங்கிலேயருடன் சேர்ந்து திட்டம் ஒன்றை தீட்டி, முத்துவடுகநாதரை மறைந்திருந்து தாக்கி கொன்று சிவகங்கையை கைப்பற்றினர்.

தனது கணவரை கொன்றவரை பழிதீர்க்கவேண்டும் என்று நினைத்த வேலு நாச்சியார், தனது குழந்தை வெள்ளச்சியுடன் மறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். இச்சமயத்தில் அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை மற்றும் மருது சகோதரரின் உதவியுடன், படைபலத்தை அதிகரித்து, ஆங்கிலேயரின் மேல் மும்முனை தாக்குதல் நடத்தி, ஆங்கிலேயரை தோற்கடித்து சிவகங்கையை மீட்டார்.