சிறப்புக் களம்

”கலைஞர் போட்டப் பாதையில் ஸ்டாலின் வெற்றிகரமாக போகிறார்: ரவிக்குமார் எம்.பி பேட்டி

”கலைஞர் போட்டப் பாதையில் ஸ்டாலின் வெற்றிகரமாக போகிறார்: ரவிக்குமார் எம்.பி பேட்டி

sharpana

தி.மு.க தலைவர் கலைஞர் 2018 ஆம் ஆண்டு மறைவுக்குப்பின், ஆகஸ்ட் 28 ஆம் தேதி இதே நாளில்தான் தி.மு.கவின் அடுத்த தலைவராக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க ஸ்டாலின். இந்த, இரண்டு ஆண்டுகளில் திமுக  தலைவராக கூட்டணிக் கட்சிகளிடம் மு.க ஸ்டாலின் பழகும் விதம், செயல்பாடுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் எம்.பியிடம் பேசினோம்…

       “தி.மு.க தலைவராக கட்சியையும் கூட்டணிக் கட்சிகளையும் அரவணைத்து கொண்டும் உறுதியோடு வழிநடத்தியும் செல்கிறார் மு.க ஸ்டாலின்.  யாருக்கும் மனக்கசப்பு இல்லாமல் ஜனநாயகப்பூர்வமாக சிறந்த தலைமை என்பதை இரண்டு வருடத்தில் மெய்ப்பித்திருக்கிறார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.கவை வெற்றிகாணச் செய்திருக்கிறார். கூட்டணிக் கட்சிகளையும் பெரிய வெற்றிபெற வைத்தார். தொகுதிப் பங்கீட்டின் போதும் பெரிய முணுமுணுப்புகள் எதுவும் இல்லாமல் எல்லோரும் மகிழ்ச்சியாக செயல்பட அவரது அணுகுமுறை காரணமாக இருந்தது. தேர்தல் முடிந்தும் தோழமைக் குலையாமலும் ஒற்றுமையோடு இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் இந்தியாவிலேயே மாநில உரிமைகளுக்காக உரக்க முழுக்கமிடும் குரலாக தி.மு.கவும், அதன் கூட்டணிக் கட்சிகளின் குரலும்தான் ஒலிக்கிறது என்றால், அது ஸ்டாலின் தலைமைப் பண்பின் மிகச்சிறந்த சிறப்பு. மாநில சுயாட்சிக் கொள்கை, மாநில உரிமைகள், தமிழினத்தைக் காப்பது போன்றவற்றிலும் சமரசம் செய்துகொள்ளாமல் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளார். இப்போதுகூட, நீட் எதிர்ப்புக்காக  மற்ற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி வழக்குத் தொடுக்கச் சொல்வதெல்லாம் அப்படியே  கலைஞரின் ஆளுமை.  

     இன்று தென்மாநிலங்களில் மக்கள் பிரச்சனைகளுக்காக அனைத்திலும் முன்னணிப் பாத்திரத்தை தி.மு.க எடுத்துச் செல்கிறது. அதுவும், கலைஞர் போட்டப் பாதைதான். அதிலும், ஸ்டாலின் வெற்றிகரமாக போகிறார். தலைவர்களிடம் சமத்துவம் என்பது முக்கியமான பண்பு. கலைஞருக்கு மிகப்பிடித்த வாக்கியமும் கூட. அந்த சமத்துவப் பண்பை இவரிடமும் பார்க்க முடிகிறது. அதேபோல, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் எங்கெல்லாம் நசுக்கப்படுகிறதோ உடனடியாக குரல் கொடுக்கும் தலைவராக இருக்கிறார். சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பில் கலைஞர் வழியையே பின்பற்றுகிறார்.

         2006 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக  நான் கலைஞரிடம் பழகிய காலம் என்பது அனுபவ முதிர்ச்சிக்கொண்ட காலம். அந்த அனுபவ முதிர்ச்சி  அணுகுமுறையில்தான் வரும்.  ஸ்டாலினிடம் பிடித்த பண்பு ஒளிவு மறைவு இல்லாதவர்.  ஸ்டாலின் வெளிப்படையான பண்பு கொண்டவர். விருப்பு வெறுப்புகளை மறைத்து வைத்துக்கொண்டு ராஜதந்திரம் என்று சொல்லும் அணுகுமுறை இவரிடம் கிடையாது. இதுவே, இவருடைய பெரிய பலம். பிடித்தால் நேரடியாக பாராட்டுவார். வருத்தம் இருந்தால் மனதில் வைத்துகொண்டு சிரித்துப் பேசிவிட்டு பின்னால் பேசும் பழக்கமெல்லாம் கிடையாது. வருத்தமென்றால் நேரடியாக கேட்பார். இதனை, அவர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும்போதிலிருந்து பார்த்து வருகிறேன். இன்று,  இது பெரும்பாலான அரசியல்வாதிகளிடம் இருக்க வேண்டிய பண்பு.  தலைமை என்றால், ராஜதந்திரமாக இருக்கவேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், தலைமை என்றால் வெளிப்படைத் தன்மையோடு இருக்கவேண்டும். அதுதான்,  ஜனநாயகப்பூர்வமானது. அந்த விதத்தில் இவருடைய பண்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

          அடுத்தது அவரின் உழைப்பு ரொம்ப பிடிக்கும். கடினமாக உழைக்கக்கூடியவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் எனக்கு வாக்கு சேகரிக்க வந்தார். பிரச்சாரத்தில் பேசிவிட்டு செல்லும்போது, அவருடன் நானும் சென்றேன். அப்போது, தொகுதி பற்றி கேட்டறிந்தார். ‘எல்லாம் நல்லாருக்குண்ணே. ஆனால், விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் இன்னும் கொஞ்சம் பணியாற்றவேண்டும்’ என்றேன். வண்டி விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. திடீரென, விக்கிரவாண்டி அருகே வண்டி வரும்போது நிறுத்தச் சொல்லிவிட்டு விக்கிரவாண்டி டவுனில் வாக்கு சேகரிக்க ஆரம்பித்துவிட்டார்.  இதனை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்போது,  மதியம் 1 மணி. கடுமையான வெயில். கூடவே வந்திருந்த அவரது மனைவிகூட, அவரது நலனில் அக்கறைகொண்டு வெயில் என்று பதறினார். ஆனால், ஸ்டாலின் உடனடியாக இறங்கி கிட்டத்தட்ட 1 மணிநேரம் ஒவ்வொரு கடையாக சென்று வாக்கு சேகரித்தார். இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறாரே என்று நெகிழ்ந்துவிட்டேன். வாக்கு சேகரித்துவிட்டு வந்து,  ‘நீங்கதான் விக்கிரவாண்டி வீக்கா இருக்குன்னீங்களே அதான்’ என்றார். தேர்தல் முடிவுகளிலும் விக்கிரவாண்டி பகுதி அதிக வாக்குகளை பெற்றது. அதற்கு,  அவர் இறங்கி ஓட்டுக்கேட்டதுதான் காரணம். அவருடைய உழைப்பு என்பது பிரமிக்கத்தக்க அளவில் இருக்கும் என்பதை கண்ணால் கண்டேன். கலைஞர் போலவே கொள்கைகளில் சமரசமற்றத் தலைவர் ஸ்டாலின்” என்று நெகிழ்கிறார், ரவிக்குமார் எம்.பி

- வினி சர்பனா