சிறப்புக் களம்

பா.ஜ.க தலைமையை எதிர்க்க தயாராகும் வருண்காந்தி - கட்சியில் தொடர்ந்து நீடிப்பாரா?

webteam

பாஜகவை பொறுத்தவரை அங்கிருக்கும் யாரும் கட்சித்தலைமைக்கு எதிராக குரல் எழுப்புவதில்லை. எதிர்த்து பேசுவதுமில்லை. அப்படியிருக்கும்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் மீது வாகனங்கள் மோதும் காணொளியை தனது ட்விட்டரில் பதிவிட்டது மட்டுமல்லாமல், நீதி கிடைக்க வேண்டும் என வெளிப்படையாகவே வருண்காந்தி குரல்கொடுத்திருக்கிறார். பாஜகவில் இது தான் தற்போதைய ஹாட் டாப்பிக்!

கட்சியிலிருந்து வருண் காந்தி மீது என்ன மாதிரியான நடவடிக்கை பாயும் என கவனிக்கப்பட்ட நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவிலிருந்து வருண் காந்தி நீக்கப்பட்டுள்ளார். அவரது தாய் மேனகா காந்தியும் புதிய பா.ஜ.க. தேசிய செயல்குழுவில் இடம்பெறவில்லை.

பாஜக தலைமை மீதான வருண்காந்தியின் அதிருப்தி என்பது இன்று தொடங்கியதல்ல. லக்கிம்பூர் கேரி சம்பவ சர்ச்சைக்கு முன்பே, வருண் மற்றும் மேனகா காந்தி கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளனர். 2019 வரை அமைச்சராக இருந்த மேனகா, பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றிபெற்று அரசு அமைத்தபோது புறந்தள்ளப்பட்டார். வருண் காந்திக்கு அமைச்சர் பதவி கிட்டுமா என எதிர்பார்க்கப்பட்டநிலையில், அவருக்கு இதுவரை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வருண் மற்றும் மேனகா உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்ற போதிலும் அவர்கள் மோடி அமைச்சரவையில் இடம் பெற முடியவில்லை.

யார் இந்த மேனகா மற்றும் வருண் காந்தி?

மேனகா காந்தி ராகுல்காந்தியின் சித்தப்பா சஞ்சய் காந்தியின் மனைவி. அவரது மகன் தான் வருண் காந்தி. வருண்காந்தியை சில ஆண்டுகளுக்கு முன்பு ராகுல்காந்தி சந்தித்து பேசியபோது ஏற்பட்ட அரசியல் சலசலப்பு காரணமாக வருண்-மேனகா காந்தி பாரதிய ஜனதா காட்சியிலேயே தொடர்கின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேனகா காந்தி. அதே மாநிலத்தில் பிலிபிட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி. எனவே தான் ட்விட்டரில் வருண் காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தது பாஜகவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் நேர்மையான விசாரணை மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். சமாஜவாதி கட்சி, இடதுசாரிகள், சிவா சேனா, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் உத்தரபிரதேச அரசுக்கும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கும் எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வருண் காந்தி லக்கிம்பூர் கேரி சம்பவத்துக்கு கண்டனம் தெர்வித்துள்ளது, பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வருண் மற்றும் அவரது தாயார் மேனகா காந்தி பா.ஜ.க. தேசிய செயல்குழுவில் சேர்க்கப்படாத நிலையில், அவர்கள் கட்சியில் தொடர்வார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இவர்களை போலவே மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துவரும் சுப்ரமணிய சாமியும் பா.ஜ.க. தேசிய செயல்குழுவில் இடம்பெறவில்லை என பாஜக தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

- கணபதி சுப்ரமணியம்