டப்பாவில் அடைக்கப்பட்ட ஒரு உணவுப்பொருளை வாங்கும்போது, விலை மற்றும் காலாவதி தேதி தவிர, வேறு எதையெல்லாம் நீங்கள் அதில் கவனிப்பீர்கள்? அட, இது ரெண்டு மட்டும் போதாதா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் போதாது. ஏனெனில், உணவென்பது விலை மட்டுமே அல்ல, உணவென்பது ஆரோக்கியம். ஒவ்வொரு உணவுப்பொருளும் கொழுப்புச்சத்து, புரதச்சத்து, கொலஸ்ட்ரால், கலோரி, சர்க்கரை சத்து என பல சத்துகளின் தொகுப்பு. ஆகவே நாம் எந்தவொரு பொருளை வாங்கினாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சத்துப்பட்டியலை கட்டாயம் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட அளவீடுகளுக்கு மேல் அவற்றில் ஏதும் இருந்தால், அதை வாங்கக்கூடாது.
ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், ‘எந்த உணவுப்பொருளாக இருந்தாலும் பரவாயில்லை. காலாவதி தேதி மட்டும் பார்த்தால் போதும் என்று நினைத்து, காலாவதியாகாத உணவுகளெல்லாம் உடலுக்கு நல்லதுதான் என்று எண்ணக்கூடாது. இது தவறான கருத்து’ என்கிறார்கள்.
டெல்லியை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் கவிதா, ஒரு உணவுப்பொருளில் எந்தெந்த சத்துகள் எவ்வளவு இருக்கலாம் / இருக்க வேண்டும், லேபிளை சரியாக படிப்பதன் அவசியம் என்ன என்பது குறித்து ஆங்கில தளமொன்றில் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அக்கட்டுரையின் உறுதுணையுடன், லேபிளை சரியாகும் முறை என்ன என்பது பற்றிய தகவல்கள், இங்கே தொகுத்துள்ளோம். இக்கட்டுரையின் வழியாக அத்தகவல்களை தெரிந்துக்கொள்ளுங்கள்!
பாக்கெட் / டப்பா என எதிலாவது அடைக்கப்பட்ட உணவுப்பொருளை வாங்கும்போது, நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் (வரிசைப்படி):
1) Serving Size (பரிமாறும் அளவு): இப்பகுதி, எத்தனை பேருக்கு இந்த ஒரு பாக்கெட் / டப்பா உணவுப்பொருள் போதுமானதாக இருக்கும் என்பதை சொல்லும். எந்தவொரு பொருளையும் வாங்கும் முன்னர், அதை எத்தனை பேருக்கு நீங்கள் பயன்படுத்த போகின்றீர்கள், எவ்வளவு நாள்களுக்கு அல்லது எத்தனை வேளையாக அதை பிரித்து பயன்படுத்தப் போகின்றீர்கள் என்பதை யோசித்துக்கொள்ளுங்கள். அதற்கேற்றார் போல அத்தனை பாக்கெட்கள் / டப்பாக்களை வாங்குவதற்கு இது உதவும். இதை பார்த்து வாங்கினால், மாதத்தில் பலமுறை ஷாப்பிங் செல்லும் வழிமுறை தன்னால் குறையும்.
2) Calories (கொழுப்புச்சத்து) : உங்கள் உடலுழைப்பு எந்தளவுக்கு இருக்கிறதோ, அதற்கேற்றார் போல்தான் உங்களுக்கான கலோரிகளும் அமைய வேண்டும். அதிக உடலுழைப்பு இருப்பவர்கள், அதற்கேற்ப கலோரிகள் அதிகமுள்ள உணவை எடுக்கலாம். அப்படி இல்லாமல், உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டும் என்பவர்கள், 1600 கலோரிகள் (பெண்கள்) முதல் 2000 (ஆண்கள்) என கலோரிகள் எடுத்தால் போதும். இந்தக் கலோரிகளை, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பிரித்து எடுத்துக்கொள்ளலாம். ஆரோக்கியமான உடலுக்கு, கலோரிகள் சீராக எடுத்துக்கொள்ளப்படுவதுதான் அடிப்படை.
உணவுப் பொருளை வாங்கும்போதே கலோரியை தெரிந்துக்கொண்டு, உங்களுக்கேற்ற கலோரியுள்ள உணவுகளை வாங்கினால், அதற்கேற்ப உங்கள் உடல்நலனிலும் கவனத்துடன் இருக்கலாம். ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் அதிக கலோரியுள்ள உணவுப்பொருளை சாப்பிட்டே ஆகவேண்டுமென்றால், அதற்கேற்ப உங்கள் உடலுழைப்பை நீங்கள் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியில்லாமல் உடலுழைப்பையும் அதிகப்படுத்தாமல்; கலோரியும் அதிகம் எடுத்தால் ஆபத்தே பதில்! ஆகவே எங்கும் எப்போதும் உங்கள் உடலுக்கேற்ப கலோரியை தேர்ந்தெடுங்கள்.
குறிப்பு: 150 கலோரிக்கு குறைவாக இருந்தால், அது குறைந்த கலோரி கொண்ட உணவு வகை. இதுவே, 150 - 400 என்றிருந்தால், சீரான அளவு; 400 க்கு மேல் இருந்தால் அதிகப்படியான கலோரி கொண்ட உணவுவகை. உங்கள் உடலுழைப்புக்கேற்ப, இதிலொன்றை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.
3) Total Fat (மொத்த கொழுப்புச்சத்து அளவு): இது எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அந்தளவுக்கு உங்களுக்கு நல்லது. இந்த அளவு யாவும், கிராம் கணக்கில் குறிப்பிடப்படும். ஒரு கிராம் என்பது, 9 கலோரிக்கு சமமானது என்பது மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு நீங்கள் 10 கிராம் கொழுப்புச்சத்தை எடுக்கின்றீர்கள் என்றால், அது 90 கலோரியை குறிக்கும். கலோரி இங்கே அதிகமானால், மேலே குறைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இரண்டும் சேர்ந்து, கூடுதல் உபாதைகளை உடலுக்கு கொடுக்கும்.
இப்பகுதியில், Good fat - Saturated fat - Trans fat என மூன்று பிரிவுகள் இருக்கும்.
- Good fat என்பது, Polyunsaturated மற்றும் Monosaturated fat என்ற பெயர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றால் உடலுக்கு தீங்கென்று எதுவுமிருக்காது.
- Saturated Fat என்பது, இதயத்துக்கு கெடுதல் தருவது. எனவே எந்தளவுக்கு இது குறைவாக இருக்கிறதோ, அந்தளவுக்கு கூடுதல் நல்லது. Trans Fat என்பது, மிக அதிக ஆபத்தை விளைவிக்கும் வல்லமை கொண்டது. இது, பூஜ்ஜியமென்றோ Nil என்றோ குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுகள், மிகவும் நல்லது.
- Trans fat என்பதை பிரித்து, சில நேரங்களில் குறிப்பிடப்படாமலும் இருக்கலாம். இந்த இடத்தில் குறிப்பிடுவதற்கு பதிலாக, அதை Ingredients எனப்படும் சேர்க்கப்பட்ட பொருட்களுக்கான பட்டியலில் 'Hydrogenated / Partially Hardrogenated / Shortening’ என்று குறிப்பிட்டிருப்பார்கள். அதுவும் பூஜ்ஜியமென்று இருக்க வேண்டும். இல்லையென்றால், ஆபத்துதான்.
4) Cholestrol (கொலஸ்ட்ரால்): இது Trans fat அளவுக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், இதிலும் தீங்குகள் இருக்கும். ஆகவே முடிந்தவரை இந்த அளவை குறைவாக வைத்துக்கொள்வதே நல்லது. அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவுகள் - மாட்டு இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, சீஸ், கோழிக்கறி, துரித உணவுகள், இனிப்புகள் ஆகியவை. இவற்றை அடைக்கப்பட்ட உணவாக இல்லாமல், தனியாக வாங்கி உபயோகப்படுத்தும்போதும் அளவில் கட்டுப்பாட்டோடு இருங்கள்.
5) Sodium (சோடியம்) : அன்றாட உணவில் உப்பு எந்தளவுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதை இது குறிக்கும். இந்த அளவு, ஒரு நாளில் 2400 என்றிருக்க வேண்டும். அதை தாண்டக்கூடாது. இந்த அளவுகோலில் நீங்கள் வாங்கும் பொருளை, எத்தனை பகுதியாக பிரித்து உண்ண வேண்டும் என்பதை மனதில் வைத்து அதற்கேற்ப அளவுப் பார்த்து வாங்குங்கள்.
தொடர்புடைய செய்தி: உடலில் சேரும் கொழுப்புச்சத்தின் வகைகள்... எந்தக் கொழுப்பு ஆபத்தானது - நிபுணர் விளக்கம்https://www.puthiyathalaimurai.com/newsview/114511/Expert-explains-types-of-Cholesterols-and-which-is-dangerous
6) Total Carbohydrates (மொத்த கார்போஹைட்ரேட்ஸ் அளவு)
இந்தப் பகுதியில் கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, சர்க்கரை அளவு ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். இதில், நார்ச்சத்து அளவு கார்போஹைட்ரேட்ஸைவிட அதிகமாக இருந்தால், நல்லது. நார்ச்சத்து குறைவாக இருந்தால், அது சுத்திகரிக்கப்பட்ட உணவுப்பொருள் என்று பொருள். இப்படியானவை உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்பதால், இப்படியான உணவுகளை தவிர்க்கவும். உதாரணத்துக்கு, ஒரு பிஸ்கட்டில் 20 சதவிகிதம் இரும்புச்சத்தும் 60 சதவிகிதம் சர்க்கரையும் இருந்தால், நமக்கு 60 சதவிகிதம் சர்க்கரை தேவைதானா என்று முதலில் யோசிக்க வேண்டும். ஒருவேளை அந்த பிஸ்கட்டை சாப்பிட்டால், அந்த நாளைக்கான சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை அளவை பொறுத்தவரை, உணவுப்பொருளில் மூன்றில் ஒருபகுதி சத்து இதில்தான் இருக்கும். எனவே இது குறைவாக இருந்தால், அந்த உணவும் ஆரோக்கியமானதாக இருக்கும். சில ஜூஸ் டப்பாக்களில், 'No added sugar' என குறிப்பிடப்பட்டிருக்கும். இதை பார்த்தவுடன், இதில் சர்க்கரையே சேர்க்கப்படவில்லை என நினைத்துவிடவேண்டாம். அவர்கள் கூடுதல் சர்க்கரைதான் சேர்க்கவில்லையே தவிர, அதில் Ingredient எனப்படும் அதை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தேவையான பொருளில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும்.
7) Protein (புரதம்): ஒருநாளில் ஒருவர் எடுத்துக்கொள்ளவேண்டிய சராசரி புரத அளவென்பது, 50 - 75 கிராம். உடற்பயிற்சி செய்வோருக்கு, இது கூடுதலாக தேவைப்படலாம். ஆகவே அதற்கேற்ப பொருளின் அளவை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
சில உணவுப்பொருள்களில், ‘இயற்கையான பொருள்களிலிருந்து உருவாக்கப்பட்டது’ என்றிருக்கும். இந்த கூற்றைப் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் எந்த செயற்கை பொருட்கள் அல்லது கூடுதல் சேர்க்கைகள் கொண்டிருக்க முடியாது. இருப்பினும், இது உணவுத் தயாரிப்பு இயற்கையாக ஆரோக்கியமானதாக இருப்பதால், அது இன்னும் கொழுப்பு, சோடியம், சர்க்கரைகள் மற்றும் கலோரிகளில் அதிகமாக இருக்கலாம். எனவே கவனம் தேவை.
8) Recommended Dietary Allowance (RDA) / Daily Value (%DV) (அன்றாடம் பரிந்துரைக்கப்படும் உணவுப்பொருளின் அளவு): தினசரி நாம் ஒவ்வொரு சத்தையும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும். உதாரணத்துக்கு, ஒரு ஜூஸ் பாக்கெட்டில் வைட்டமின் ஏ 30 சதவிகிதம் இருக்கிறதென்றால், அதை எடுக்கும் நாளில், மீதமுள்ள 70 சதவிகிதத்தை வேறு உணவின் மூலம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுக் கொள்ளவும். நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைவிட அதிகமாகச் சாப்பிடுவது ஆபத்துதான். இந்த பகுதியில் வைட்டமின் சத்துபோலவே பிற சத்துகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதையும் கவனித்து வாங்கவும்.
இவை அனைத்தையும் கவனித்து நீங்கள் பொருள் வாங்கும்போது, உங்களையறியாமல் நீங்கள் ஆரோக்கியமான வாழ்வுக்கு பழக்கப்படுத்தப்படுவீர்கள். ஆரோக்கியமான வாழ்வியல் என்பது ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் அளவு போன்ற வாழ்வியல் சிக்கல்களை கட்டுக்குள் வைக்க உதவும். உடல்பருமன் சிக்கலையும் தவிர்க்க உதவும்.