சிறப்புக் களம்

‘கள்ளிக்காடு கண்டெடுத்த கவிதை நாயகன்’ வைரமுத்து!

‘கள்ளிக்காடு கண்டெடுத்த கவிதை நாயகன்’ வைரமுத்து!

webteam

பாட்டெழுத வருமாறு அவசரமாக பாரதிராஜா அழைக்க, விரைந்து தென் தமிழகம் நோக்கி ரயில் ஏறுகிறார் வைரமுத்து. அடுத்த நாள் காலை உணவுக்காக வைரமுத்து, பாரதிராஜா அனைவரும் கூடுகிறார்கள். ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் தங்கை புகுந்தவீட்டுக்கு செல்லும் காட்சி வைரமுத்துவுக்கு  விளக்கப்படுகிறது. அப்போது நெப்போலியனும், விஜயகுமாரும் கதாபாத்திர வேடத்திலேயே வருகிறார்கள். அவர்களைக் கண்ட வைரமுத்து கதாபாத்திர குணத்தையும், அவர்களது மீசையையும் இணைத்து இப்படியாக வரி எழுதுகிறார். 

''அணில்வால் மீச கொண்ட அண்ணே ஒன்ன விட்டு 
புலிவால் மீச கொண்ட புருஷனோட போய் வரவா''

இந்த வரிகள் மூலம் அணிலுக்கும் புலிக்கும் இடையேயான உறவை பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையேயான உறவாக சொல்லி ஒரு பெண்ணின் மனநிலையை வரிகளின் காட்சிப்படுத்தி இருப்பார் வைரமுத்து. ரசனைகள், உவமைகள், கற்பனைகள் என்பதையும் தாண்டி கதாபாத்திர எதிரொலிப்பை பாடல் வரிகளில் பாடலாசிரியர்கள் கொண்டு வருவது வழக்கம். அதில் வைரமுத்து ஒரு படிமேல்தான்.

கிராமம் சார்ந்த பாடல்களில் வைரமுத்துவின் வரிகள் சற்று அதிகமாக ஒளிரும். பல பாடல்களில், ''நான் படித்ததை எழுதுவதில்லை, பார்த்ததை எழுதுகிறேன்'' என வைரமுத்துவே கூறியுள்ளார். வயல் வரப்புகளும், மலை முகடுகளும், பொன்வண்டும், சாரைப்பாம்பும் வைரமுத்து பாடல்களில் வாழ்கிறது என்றால் அது வெறும் கற்பனை அல்ல. 

தேசிய விருது வாங்கிய ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ பாடலில் வரும் 

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லுடைச்சி வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே

இந்த வரிகளில் எல்லாம் வைரமுத்து தன் தாய்க்காக எழுதிய வரிகள் இல்லாமல் வேறு என்ன?

காதலின் ஸ்பரிசம், காதலின் வளர்ச்சி, காதலின் பிரிவு என காதலின் அனைத்து பரிமாணங்களையும் வலியுணர்ந்து எழுத்தில் வடிப்பது வைரமுத்துவின் தனிச்சிறப்பு. ‘நேருக்கு நேர்’ படத்தில் வரும் ‘மனம் விரும்புதே’ பாடலில் வரும், 

''அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது''
என்ற வரிகள், இளைஞர்களின் உணர்வுகளை பிரதிபலித்து காதலின் ஸ்பரிசத்தை தாங்கி நிற்கும்.

''பூங்காற்றே அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும்
நான் உன் போன்ற பெண்ணோடு''
என ‘மின்சார கனவு’ படத்தில் பூப்பூப்பது போல காதலை சொன்னவர் வைரமுத்து.

''என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே, அதற்காகவா பாடினேன்?
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே, அதற்காகத்தான் வாடினேன்
முதலா, முடிவா, அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்''
என்று  ‘பம்பாய்’ காதலுக்காக உருகி வார்த்தை படைத்துள்ளார் வைரமுத்து.

பெண் வர்ணனையை வார்த்தைகளால் ரசிப்பதில் வைரமுத்துவுக்கு நிகர் அவரே. 

''விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது?
பூ வாசம் வீசும்
உந்தன் கூந்தலடி
’’ என கூந்தலையும், 

''இவ்வுலகம் இருண்ட பின்னும்
இருளாத பாகம் எது ?
கதிர் வந்து பாயும்
உந்தன் கண்களடி
'' 

எனக் கண்களையும் இயற்கையோடு ஒப்பிட்ட ரசனைக்காரர் வைரமுத்து. அவர் தானே, ‘ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் என்றும் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்’ என்றும் வர்ணித்தவர். ‘எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்’ என்ற இடத்தில், மருதாணி கைகள் நம் கண் முன்னே வந்து போவதை மறுக்கமுடியவில்லை தானே?

இயற்கையை வைரமுத்து வார்த்தைகளில் கொடுக்கும் போது அது குளிர் என்றால் நமக்கு குளிர்கிறது. மழை என்றால் உடல் நனைகிறது. பகல் இரவாகும் தருணத்தை  ''வானமகள், நாணுகிறாள்...வேறு உடை, பூணுகிறாள்" என்பதை தாண்டி கவித்துவமாய் சொல்லிவிட முடியுமா.? 

''முகிலினங்கள் அலைகிறதே,
முகவரிகள் தொலைந்தனவோ? 
முகவரிகள் தொலைந்ததனால்
அழுதிடுமோ, அது மழையோ?”
மழைக்குப் பின்னால் இப்படி ஒரு கதையை இதற்கு முன் நாம் நினைத்ததுண்டா?

புல்லின் சிரிப்பும் பச்சை நிறம், கிளையில் காணும் கிளியின் மூக்கு, அந்தி வானம் அரைக்கும் மஞ்சள், அலையில்லாத ஆழி வண்ணம், கார்காலத்தின் மொத்த நிறம், மழையில் ஒடியும் தும்பை நிறம் என ஒரே பாடலில் வண்ணத்துடன் சேர்த்து இயற்கை குழைத்து கொடுத்தவர் வைரமுத்து. 

வைரமுத்துவின் பாடல்கள் தோண்டத் தோண்ட வருகின்றன. ''வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்'' என அவர் எழுதிய வரிகளே, அவர் பாடல்களை பாராட்டி எழுதுபவர்களுக்கும் நிலைமையாகிறது. 

'வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்'
என்ற வரிகளுக்கு ஏற்பவே வானம் வாழும் வரை அவர் நமக்கு வார்த்தைகள் படைக்க வேண்டும். 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கவிஞரே!