சிறப்புக் களம்

‘வைதேகிகள் காத்திருக்கிறார்கள்’ நடராஜன்களுக்குத்தான் காதல் கண்கள் தெரிவதில்லை! காதல் வாழ்க

rajakannan

“உங்களிடம் நான் தனியாக கொஞ்சம் பேசணும்; இன்று மாலை சந்திக்கலாமா?” என்று தன் உள்ளத்தில் காதல் உணர்வலைகளை உதிக்கச் செய்த நடராஜன் சொல்லிவிட்டு சென்ற பின் வைதேகி எல்லையில்லா ஆனந்தம் கொள்கிறார். பூப்பதற்கு முன்பே வாடிப்போன மல்லிகையை போல் வாழ்க்கையில் ஒளியிழந்து இருளில் சிக்கி தவித்தும் வரும் அவளுக்கு, வெள்ளைப் புடவையில் விதவைக் கோலம் பூண்டு மீளா துயரில் வாடும் அவளுக்கு அவனின் சந்திப்பு புதிய உலகத்தின் கனவுகளை கண்முன் நிறுத்தியது.

ஓடோடி அவனை சந்திக்க ஆற்றங்கரைக்கு சென்றால், எல்லையில்லா ஆனந்தத்தில் மூழ்கியிருந்த வைதேகிக்கு, தன் வாழ்க்கையில் இனியும் இருள்தான் தொடரப் போகிறது என்ற அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவளிடமே வந்து தான் இன்னொரு பெண்ணை காதலிப்பதாக கூறிவிட்டு அதற்கு உதவியும் செய்யுமாறு கோரிக்கையும் வைக்கிறான் நடராஜன். அவளது இதயத்தை மீண்டும் மீளா துயர் ஆட்கொண்டுவிட்டது. ஆம், 'வைதேகி காத்திருந்தாள்' படத்தின் மிக முக்கியமான காட்சி அது. கணவனை இழந்த ஒரு இளம் பெண்ணின் மனதில் உதித்த காதல் உணர்வுகளை அழகாக சித்திரித்த காவியம் அது.

இன்றும்கூட தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த திரைப்படம் 'வைதேகி காத்திருந்தாள்'. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே கணவனை இழந்து வெள்ளைப் புடவையை வேண்டா வரமாக வாங்கிக் கொண்ட வைதேகி கதாபாத்திரத்தில் நடிகை ரேவதி நம்மையெல்லாம் கலங்க வைத்திருப்பார். கணவனை இழந்த பெண்களின் வாழ்வில் காதல் என்ற மலர் அரும்பக் கூடாதா? வண்ணங்களில் இருந்து அவர்கள் ஒதுங்கியேதான் இருக்க வேண்டுமா? என்ற ஆயிரம் கேள்விகளை இந்தப் படம் நம்மில் விதைத்துவிட்டு செல்கிறது. ‘காதலிச்ச அனுபவமும் இல்லாம, கல்யாண பண்ணிகிட்ட சுகமும் இல்லாம என் மகள் படுற வேதனைய பார்த்து எத்தனை நாள் சும்மா இருக்க முடியும்.’ என்று அவளின் தந்தை படும் வேதனை நம்மையும் ஆட்கொண்டு விடுகிறது.

வைதேகியின் வாழ்விலே நடராஜன் என்ற இளைஞன் வருகிறான். அவனோ வைதேகியின் மனதில் மழைச்சாரல் போல காதல் எண்ணங்களை தூவிவிட்டு செல்கிறார். முதன் முதலில் அவனது உடல் இவள் மீது உரசிச் செல்லும் அந்த தருணத்தில் இருந்தோ.. ஏதோ ஒரு தருணத்தில் அந்த விதை விழுந்துவிட்டது. அவள் மனதிலோ புதிய கற்பனைகளும் ஆசைகளும் துளிர்விட்டு வளர்ந்து கொண்டே இருந்தது. ‘அவ கையாலையே உனக்கு குங்குமம் கெடச்சிருக்கு; என் கையாலதான் இன்றைக்கு உனக்கு குங்குமச் சிமிழ் கிடைக்கணும்னு இருந்திருக்கு’ என்ற அந்த வார்த்தைகள் தான் வைதேகியின் காதல் உணர்வுகளை ஆழப்படுத்திவிட்டது.

இருள் சூழ்ந்த வாழ்வில் புதிய ஒளி கிடைத்த மகிழ்ச்சியை இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே பாடலில் அப்படி வடித்திருப்பார்கள்.. இசையாகவும்..உள்ளத்தின் எண்ணத்தை வெளிப்படுத்தும் வரிகளாகவும். பாடல் முழுவதும் கரை புரண்டோடும் மகிழ்ச்சிக்கான இசையை ஓட விட்டிருப்பார் இளையராஜா.

“நாயகன் கைத்தொடவும்
வந்த நாணத்தை பெண் விடவும்

மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்..” இந்தப் பாடல் வரிகள் வைதேகியின் உள்ளக்கிடக்கையில் இருந்த காதல் வேட்கையை தெளிந்த நீரோடைபோல் நமக்கு காட்டுகிறது. அதிலும், ‘ஆலிலையோ தொட ஆளில்லையோ’ என்பதுதான் அவளின் ஏக்கத்தை நமக்கு கடத்துகிறது.

ஆனால், வைதேகியின் மன உலகை நடராஜன் அறியவே இல்லை. அப்படியான சிந்தனையே அவனுக்கு இல்லை. நடராஜன்களின் கண்களுக்கு வெள்ளைப் புடவை அணிந்த வைதேகிகள் வண்ணமயமாக தெரிவதேயில்லை, அவளுக்குள் பூக்கும் காதலும் புரிவதே இல்லை, வைதேகிகளுக்கு காதல் உணர்வுகள் எழும்பக் கூடாதா?. அவளது மனதில் காதல் உணர்வுகள் பூத்த கனப் பொழுதில் அது வாடி வதங்கிவிடுகிறது.

காதல் உணர்வுகளே தமக்கு சொந்தமில்லையா.. வாடி வதங்குவதற்குதான் தன் வாழ்க்கையா என்ற வைதேகியின் ஆதங்கத்தை வெளிக் கொண்டு வந்திருக்கும் அழகு மலராட பாடல். அவள் கடவுளாக நம்பும் நடராஜரிடமே தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்க்கிறார். தன் சிலம்பொலி புலம்புவதை கேள் என்று உரக்க பாடுகிறாள். ‘விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை; குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை’ என்று தன் உள்ளத்தின், உடலின் ஏக்கங்களை கண்ணீருடன் எடுத்து இயம்புகிறாள். பகலும் இரவு தமது இருவிழியில் கனவுகள் வரும் பொழுது என்ன செய்வேன் என்று வேதனைப்படுகிறாள்.

“ஆகாயம் இல்லாமலே
ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது
ஆதாரம் இல்லாமலே
ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது

தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது” என்று தன்னுடைய நிலையை உணர்த்துவதோடு, வசந்தம் இனி வருமா! வாழ்வினிமை பெருமா! என்றும் ஏங்கிப் பாடுகிறாள்.

“ஊதாத புல்லாங்குழல்
எனதழகு சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா
ஒரு துணையை
தேடாத வெள்ளை புறா

பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாக கொதிக்கின்றது
நீரூற்று பாயாத நிலம்போல நாளும்
என் மேனி தரிசாக கிடக்கின்றது

தனிமையிலும் தனிமை
கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில்
எதற்கு இந்த இளமை” இந்த வரிகளை கேட்டாலே கணவனை இழந்து வாழும் இளம்பெண்கள் ஒவ்வொரு நாளும் படும் வேதனை நமக்கு புரியும்.

’கட்டாயத்தின் பேரில் இப்படிக் கன்னிகையாகக் காலங்கழிக்க வேண்டிய நிலையை என்ன சொல்லுவது?’ என்று தன்னுடைய 'வாடா மல்லிகை' சிறுகதையில் புதுமைப்பித்தன் கேள்வி எழுப்புகிறார். இக்கதையை படித்தவர்கள் நிச்சயம் கணவனை இழந்துவாடும் பெண்களுக்குக்காக கண்ணீர் சிந்தக் கூடும்.

கணவனை இழந்த பின் ஒரு பெண்ணிற்கு மறுமணம் என்பதை எல்லோரும் எளிதில் பேசிவிட முடியும். ஆனால், காதல் உணர்வுகளை தான் பேசுவதற்கு கலையும், இலக்கியங்களும் குறைவாக இருக்கிறது. வைதேகி காத்திருந்தாள் அந்த வகையில் ஒரு சிறந்த படைப்பு. இன்றும் நம்மைச் சுற்றிலும் வைதேகிகள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்குள் காதலுக்கான தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. சமூகம் இட்ட வேலிக்குள் அவர்கள் தமது எண்ண உணர்வுகளை எளிதில் வெளிக்கொணர முடியாத நிலையில் இருக்கிறார்கள். அதனை நடராஜன்கள் தான் தியாகமாய் எண்ணிவிடாமல், இயல்பான காதலால் அந்த வேலியை தூக்கி எறிய வேண்டும்.