ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மகராஷ்டிராவின் தேவேந்திர கங்காதரராவ் பட்னாவிஸுக்கு எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு முடிவே இல்லை. மகராஷ்டிரா முதல்வராக மூன்று முறை இருந்தாலும், கள அரசியலில் அவருக்குக் கடும் சவால் காத்திருக்கிறது. எதிர்க்கட்சிகளால் வரும் பிரச்னைகளை விட உட்கட்சி, கூட்டணிக்கட்சிகள் தரும் தலைவலிதான் அவரைத் தடுமாற வைக்கிறது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக மகராஷ்டிரா பாஜகவின் ஒரே முகமாக இருந்து வரும் பட்னாவிஸ், நாக்பூரின் செல்லப்பிள்ளை. அவரை விட மூத்தவரான நிதின் கட்கரி போன்றவர்கள் டெல்லி அரசியலில் தீவிரமானதால் கிடைத்த வெற்றிடத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டவர். குஜராத் மோடி, உ.பி யோகி வரிசையில் மகராஷ்டிரா பட்னாவிஸுக்கு இடமுண்டு.
5 நாட்கள் மட்டுமே ஒரு முறை முதல்வராக இருந்திருக்கிறார். சென்ற ஆட்சியில் துணை முதல்வராக, ஷிண்டேவின் அரசில் அங்கம் வகித்தவர். இரண்டு முறை முதல்வராக இருந்தவர், தன்னுடைய கட்சியின் நலனுக்காகத் துணை முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டது இந்திய அரசியலில் எவரும் கண்டிராத காட்சி.
2024ல் மூன்றாவது முறையாக அவர் முதல்வரானபோது, பாஜகவிடம் போதுமான இடங்கள் இல்லை. மகாயுதி கூட்டணி அரசில் ஷிண்டேவின் தலைமையிலான சிவசேனாவும், மறைந்த அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றுள்ளது. சென்ற ஆட்சியில் முதல்வராக இருந்த ஷிண்டே, தற்போது துணை முதல்வராக இருக்கிறார்.
ஷிண்டேவுக்கும் பட்னாவிஸ்க்கும் இடையேயான பனிப்போர், சென்ற ஆட்சியிலேயே ஆரம்பமாகிவிட்டது. ஷிண்டேவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தித்தான் 2024 தேர்தலை எதிர்கொண்ட நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பட்னாவிஸ் முதல்வரானதை ஷிண்டே ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இரு தரப்புக்கும் இடையேயான விரிசல், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற மேலவைத் தேர்தலில் பகிரங்கமாக வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் கோட்டையான நாக்பூர், புனே போன்ற இடங்களில் பாஜகவுக்குக் கிடைத்த தோல்வி, யாரும் எதிர்பாராதது.
தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வில் சக கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைப்பு தரவில்லை என்பதைப் பாஜகவினர் வெளிப்படையாகவே பேசினார்கள். நமக்கு எதிரி, வெளியில் இல்லை. கூட்டணிக்குள்தான் இருக்கிறார்கள் என்று பாஜகவினர் பொறுமினார்கள். எங்களைப் பாஜகவின் அடிமையாக யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று ஷிண்டே தரப்பினரும் பதிலடி தந்தர்கள்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் ஷிண்டே தரப்பு போர்க்கொடி உயர்த்தியது. மகாயுதி கூட்டணி தொடர வேண்டுமா என்பதைப் பாஜகதான் முடிவு செய்ய வேண்டும். ஷிண்டே மீண்டும் முதல்வராக வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்துள்ளார்கள். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதுதான் சரி என்கிறார், ஷிண்டே கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரவீந்திர தங்கேகர். அடுத்து இதே கருத்தை முன்வைத்து ஷிண்டேவை மீண்டும் மகாராஷ்டிரா முதல்வராக்க வேண்டும் எனச் சிவசேனா எம்.எல்.ஏ அப்துல் சத்தார் பேசியது, பிரச்னையின் உச்சம். கூட்டணி முறிந்தாலும் பரவாயில்லை என்று ஷிண்டே ஆதரவாளர்கள் முடிவெடுத்து போன்று இருந்தது. நெருப்பில்லாமல் புகையாது, சம்பந்தப்பட்ட தலைவர்களின் அனுமதியில்லாமல் அவர் பேசியிருக்க முடியாது என்பது உண்மைதான்.
மேலவைத் தேர்தலுக்கு முன்பே ஷிண்டேவை குறிவைத்து வெளியான சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு, கூட்டணிக்குள் பெரிய கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2024 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த ஆளும் மகாயுதி கூட்டணி தனக்கு ₹500 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகச் சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் குற்றம் சாட்டியதெல்லாம் வெளியாகியிருந்தது. 2 ஆண்டுகளுக்கு முந்தைய ஆடியோ ஏன் தற்போது கசியவிடப்பட்டது? அதில் பேசியிருக்கும் பெண் குரல் யாருடையது? ஷிண்டேவின் மகனுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்றெல்லாம் மகராஷ்டிராவில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. ஆடியோ வெளியே கசிந்ததன் பின்னணியில் பாஜகவினர் இருப்பதாகச் சிவசேனாவின் தலைவர் ராம்தாஸ் கதம் குற்றம் சாட்டினார். ஆடியோ கசிந்த விஷயம் குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதான் ஷிண்டே ஆதரவாளர்களின் அதிருப்திக்குக் காரணம். அஜித் பவார் இல்லாத நிலையில் பட்னாவிஸ் அரசின் நம்பர் டூவாக உலா வரும் ஷிண்டேவின் செல்வாக்கை குறைக்கும் நடவடிக்கையாகவே அவரது ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிர சட்டமன்றத்தில் தனித்து ஆட்சியமைக்கப் பாஜகவுக்கு 145 இடங்கள் தேவை. பாஜகவிடம் தற்போது 132 இடங்கள் மட்டுமே இருப்பதால் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. எதிர்க்கட்சி வரிசையில் உள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து யாரும் பாஜகவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இல்லை. உத்தவ் தாக்கரே கட்சியிலிருந்து பிரிந்து வந்தவர், ஷிண்டே. ஆகவே, தாய்கழகத்திற்குத் திரும்பிப் போகமாட்டார்கள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை பாஜகவினர் மத்தியில் இருக்கிறது.
ஷிண்டே தரப்போ, எந்த எல்லைக்கும் செல்ல தயாராகவே இருக்கிறது. உத்தவ் தாக்கரே, ஷிண்டே இருவருமே மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் வாரிசுகள்தான். உத்தவ் தாக்கரே, பால் தாக்கரேவின் குடும்ப வாரிசு. ஷிண்டே, அவரது கொள்கை வாரிசு. இருவருமே சகோதரர்கள்தான். என்றாவது ஒரு நாள் இருவரும் இணைந்து செயல்பாடுவார்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்துள்ளார்கள். இடியாப்ப சிக்கலில் இருந்தாலும், பட்னாவிஸுக்கு அனுபவம் கைகொடுக்கிறது. உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே பங்கேற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்றதன் மூலமாகப் பாஜகவுக்கு வேறு வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். ஷிண்டேவின் செல்வாக்கைக் குறைக்கும் வேலைகளைப் பாஜக செய்யக்கூடும்.
பாஜக, சிவசேனாவில் இன்னொரு பிளவை ஏற்படுத்தும் என்கிறார், மகராஷ்டிரா மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் அதுல் லோண்டே பாட்டீல். அடுத்து வரும் ஆறு மாதங்களில் மகராஷ்டிராவில் ஏகப்பட்ட அரசியல் மாற்றங்களுக்கு வாய்ப்பு இருப்பதாகச் சிவசேனாவின் மாநிலங்களவை எம்.பி சஞ்சய் ராவத் கணிக்கிறார். நாக்பூரிலேயே பாஜக தோற்றுப் போனதற்கு ஆட்சிக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. நாக்பூரைச் சேர்ந்த பட்னாவிஸுக்கு, காங்கிரஸ் கட்சியிடமிருந்து இடத்தை மீட்பது முக்கியமானது. அதை விட முக்கியமானது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நம்பிக்கையை முழுமையாகப் பெறுவது.
முன்னாள் எம்.எல்.சி-யும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சங்க பரிவார அமைப்புகளுக்கு நெருக்கமானவரான அனில் சோலேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, சுதாகர் கோஹலே என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிருப்தியடைந்த அனில் சோலே, சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு முதல்வரே அவரது வீட்டிற்குச் சென்று சமாதானம் செய்ய வேண்டியிருந்தது. போட்டியிலிருந்து பின்வாங்கினாலும், அதிருப்தி நீடிக்கிறது.
புனேவிலும் கூட, பட்னாவிஸ் ஆதரவு பெற்ற வேட்பாளர் தேர்வு, தவறில் முடிந்தது. ஷிண்டே ஆதரவாளர்களின் ஆதரவை ஆளுங்கட்சியால் பெற முடியவில்லை. அவுரங்காபாத்தில், முன்னாள் அமைச்சர் அப்துல் சத்தார் போன்ற ஷிண்டே சிவசேனா தலைவர்கள், ஷரத் பவார் கட்சியின் வேட்பாளரை வெளிப்படையாகவே ஆதரித்தார்கள்.
ஆளும் பாஜக, தன்னுடைய கூட்டணிக் கட்சிகளான (அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே) மற்றும் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் திரும்பி வந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகச் சங்கப் பரிவார் அமைப்புகளிடையேயும் அதிருப்தி தெரிகிறது.
மறுபுறம் பட்னாவிஸ் தரப்பை தனிமைப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடக்கின்றன. ராய்காட் மாவட்டத்தின் பசுமையான மலைப்பகுதிகளில் 32,000 மரங்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் கர்ஜாத் திட்டத்தை உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே எதிர்த்துக் களமிறங்கியபோது, ஷிண்டேவின் சிவசேனாவும், அஜித் பவாரின் என்.சி.பி கட்சியும் ஆதரவு தெரிவித்தன. ஆளும் கூட்டணிக் கட்சிகள், பாஜகவின் பெரியண்ணன் மனப்பான்மையைக் குறை சொல்ல, பாஜகவினரோ அவர்களுடைய நம்பகத்தன்மையை விமர்சனம் செய்கிறார்கள். அஜித் பவார் மறைவுக்குப் பின்னர், மராத்தா பகுதியின் மாபெரும் தலைவராக ஷிண்டே உருவெடுத்திருக்கிறார் என்பது உண்மை. மராத்வாடா பகுதியைச் சேர்ந்த 46 எம்.எல்.ஏ-க்களில் 41 பேர் மகாயுதி கூட்டணியில் இருக்கிறார்கள். இதில் 26 பேர் மாராத்தா பின்னணியில் வந்தவர்கள்.
கடந்த காலங்களில் மராத்தா இமேஜ், மகராஷ்டிர அரசியலை புரட்டிப்போட்டிருக்கிறது. ஷரத் பவார், அஜித் பவார் உள்ளிட்ட பல தலைவர்களை உருவாக்கியிருக்கிறது. சிவசேனாவும் ஏராளமான மராத்தா தலைவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. ஆனால், மராத்தா முகம் இல்லாத பாஜகதான் பல ஆண்டுகளாகவே தள்ளாடுகிறது என்கிறார்கள்.
1960-ல் மகாராஷ்டிர மாநிலம் உருவானதிலிருந்து, மக்கள் தொகையில் 32% வரை உள்ள மராத்தா சமூகமே அரசியலிலும், கூட்டுறவுச் சங்கங்களிலும், சர்க்கரை ஆலைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை ஆட்சியிலிருந்த முதல்வர்களில் பெரும்பாலானவர்கள் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
மாநிலம் முழுவதும் செல்வாக்கு செலுத்தும் ஒரு ஒருமித்த மராத்தா முகம் பாஜகவுக்குள் இல்லை. 2024 மக்களவைத் தேர்தலில் மராத்வாடா பகுதியில் பாஜக கடும் பின்னடைவைச் சந்தித்ததற்கு இதுவே முக்கியக் காரணமாக இருந்தது.
வரலாற்று ரீதியாக மகாராஷ்டிராவில் நிலவும் 'மராத்தா - பிராமண' அரசியல் முரண்பாடுகளைப் பயன்படுத்தி, "ஒரு பிராமணர் முதல்வராக இருப்பதால் மராத்தா இடஒதுக்கீடு தடுக்கப்படுகிறது" என்கிற பிரசாரத்தை எதிர்க்கட்சிகளும் மனோஜ் ஜராங்கே பாட்டீல் போன்ற சமூக ஆர்வலர்களும் எளிதாக முன்னெடுக்க முடிகிறது.
மராத்தா இடஒதுக்கீடுப் போராட்டங்கள் தீவிரமடையும் போதெல்லாம் பிராமணரான பட்னாவிஸின் இமேஜ், எதிர்க்கட்சிகளுக்கு எளிய இலக்காக மாறிவிடுகிறது. இவற்றையெல்லாம் கூட்டணி வியூகங்கள் மூலம் பாஜகவால் வெற்றிகரமாக முறியடிக்க முடிந்துள்ளது. இனி முடியுமா என்பதுதான் கேள்விக்குறி!