கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பீகார் & ஜார்கண்ட் மாநில முதல்வர்கள் இருவரும் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். கடந்த 25 ஆண்டுகாலமாக இரண்டு மாநிலங்களுக்கும் இடையே தீராத பிரச்னையாக இருந்த சோன் நதி நீர்ப் பங்கீட்டிற்கு ஒருவழியாக நிரந்தர தீர்வு எட்டப்பட்டது.
கடந்த காலங்களில் மத்திய நீர் ஆணையம் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் இரு மாநில அதிகாரிகளுடன் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், தீர்வை எட்ட முடியவில்லை. வறட்சிப் பகுதிகளுக்குக் கூடுதல் தண்ணீர் வேண்டும் என ஜார்கண்ட்டும், தன்னுடைய பாசன அளவு குறைந்துவிடும் என பீகாரும் உறுதியாக நின்றதால் உடன்பாடு எட்டப்படவில்லை
கடந்த ஆண்டு ராஞ்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கிழக்கு மண்டல முதல்வர்கள் கூட்டத்தில் சோன் நதிப் பங்கீடு பற்றியும் பேசப்பட்டது. பின்னர் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் சார்ந்த குழுக்கள் உருவாக்கப்பட்டு, இரு மாநிலங்களிலும் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, நிதிஷ் குமார் முதல்வராக இருந்தபோதே வரைவு தயாராகிவிட்டது.
நிதிஷ் குமார் பதவியிலிருந்து விலகி, பாஜக சார்பில் சாம்ராட் சௌத்ரி முதல்வரான பின்னர் ஒப்பந்தம் பற்றிய பேச்சுகள் மறுபடியும் ஆரம்பமாகின.
ஒருவழியாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல், பீகார் முதல்வர் சம்ராட் சௌத்ரி மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின்படி, பீகாருக்கு 250.47 டிஎம்சி தண்ணீரும், ஜார்கண்ட் மாநிலத்திற்கு 87.12 டிஎம்சி தண்ணீரும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசியல்ரீதியாக பாஜகவுக்கு கிடைத்த வெற்றியாக ஒப்பந்தத்தைச் சொல்ல முடியும். நீதிமன்றங்களின் கதவுகளை தட்டாமல், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் & மத்திய அரசின் முன்னெடுப்பால் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் 25 ஆண்டுகால பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப் பிரச்னைகளில் குறிப்பாக காவிரி, கிருஷ்ணா, கோதாவரி போன்ற நதிகளின் நீரை பங்கீடுவதில் பிரச்னை தொடர்ந்து இருந்து வரும் நிலையில் சோன் நதி விஷயத்தில் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதை ஒரு சிறந்த முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார்கள், நீரியல் வல்லுநர்கள்.
1973-இல் ஒருங்கிணைந்த பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளடக்கிய மாநிலங்களுக்கிடையே பன்சாகர் ஒப்பந்தம் கையெழுத்தாகி, 2000 வரை நடைமுறையில் இருந்து வந்தது. சோன் நதியின் நீரையும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்சாகர் அணையைக் கட்டுவதற்கான செலவுகளையும் 3 மாநிலங்களும் பகிர்ந்து கொள்வதுதான் பன்சாகர் ஒப்பந்தத்தின் அடிப்படையான விஷயம்.
2000-ல் பீகாரில் இருந்து ஜார்கண்ட் தனி மாநிலமாகப் பிரிந்தபோது, பன்சாகர் ஒப்பந்தத்தின்படி ஒருங்கிணைந்த பீகாருக்கு வழங்கப்பட்ட நீர் தொகுப்பிலிருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு உரிய பங்கு பிரித்து தரப்படவேண்டும். பன்சாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியின் பெரும்பாலான பகுதிகள், ஜார்கண்ட் மாநிலத்திற்குள் வந்த காரணத்தால் ஜார்கண்ட் அதிக பங்கை கோரியது.
இது தவிர சோன் நதியின் துணை நதியான வட கோயல் நதியின் குறுக்கே ’மண்டல் அணை’ கட்டும் பணி 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலால் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கிடப்பில் போடப்பட்டது.
கோடைகாலத்தில் நீர்மட்டம் குறையும்போது, கீழ்நிலைப் பகுதியான பீகாருக்கு மாநிலத்திற்குத் தேவையான நீர் கிடைக்கவில்லை; மேல்நிலைப் பகுதியில் உள்ள ஜார்கண்ட் கூடுதல் நீரை தேக்கி வைத்துககொள்கிறது என்கிற புகாரும் எழுப்பப்பட்டது. காவிரி விஷயத்தில் கர்நாடகா vs தமிழ்நாடு நினைவுக்கு வருகிறதா?
பீகார், பன்சாகர் ஒப்பந்தத்தை முன்வைத்து சோன் நதி நீருக்கு முழு உரிமை கொண்டாடியது. நதி நீரைப் பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல, நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்டுவதிலும் இரு மாநிலத்திற்கும் இருவேறு கருத்துகள் இருந்து வருகின்றன.
மழைக்காலத்தில் நீர், கடலில் சென்று கலப்பதைத் தடுக்க, இந்திரபுரி தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க பீகார் முயற்சி செய்தது. அதற்கு ஜார்கண்ட் கடும் எதிர்ப்பை முன்வைத்தது. தடுப்பணையின் உயரத்தை அதிகரித்தால் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
ஜார்கண்டின் கர்வா மற்றும் பீகாரின் ரோஹ்தாஸ் எல்லைப் பகுதியில் சோன் நதியின் குறுக்கே அணை கட்ட முன்மொழியப்பட்ட திட்டம், கடாம்பரி அணையை கட்டுவதில் பீகார் அரசு உறுதியாக இருக்கிறது. மேகதாது நினைவுக்கு வருகிறதா?
கடாம்பரி அணை கட்டப்பட்டால், ஏராளமான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும். ஆயிரக்கணக்கான மக்கள், வீடுகளை இழந்து இடம்பெயர வேண்டியிருக்கும் என்பதால் ஜார்கண்ட் பகுதியில் கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது.
சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட பீகார் - ஜார்கண்ட் ஒப்பந்தத்தின் மூலம், அணையின் நீர்மட்டம் சரி செய்யப்பட்டு மக்களுக்கு இழப்பீடு, மறுவாழ்வு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்திரபுரி தடுப்பணை, கடாம்பரி அணை கட்டும் பணிகள் மறுபடியும் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.
ஜார்கண்டில் பாஜகவின் அரசியல் எதிரியான ஜேஎம்எம் முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் துணையோடு கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறார். கடந்த காலங்களில் சோன் நதி நீர் பிரச்னையை தீர்ப்பதில் ஹேமந்த் சோரன் பெரிய அளவில் முயன்றதில்லை. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வந்துள்ளது. ஆகவே, மத்திய அரசின் தலையீட்டால் நடந்த விஷயம் என்பது பாஜகவுக்கு நேர்மறையான பிம்பத்தைத் தந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
ஜார்கண்டின் வடமேற்குப் பகுதிகளான பலாமு, கர்வா மாவட்டங்கள் கடும் வறட்சியாக பாதிப்பப்பட்டவை. சோன் நதி நீர்ப் பங்கீட்டில் ஜார்கண்ட்டின் பங்கு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டிருப்பதால் பாசன நீராகப் பயன்படுத்திக் கொள்ள புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்கிறார்கள். புதிய அணைகள் கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
கடந்த 25 ஆண்டுகளில் தேர்தல் நேரங்களில் சோன் நதி நீர் பெரும் பிரச்னையாக பேசப்பட்டிருக்கிறது. பீகார், ஜார்கண்ட் எல்லையோர பகுதிகளில் கட்சி வேறுபாடின்றி ஆளுங்கட்சிகளை விமர்சித்து ஏராளமான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், தேர்தலுக்கு பிந்தைய காலங்களில் இரு மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்த கூட்டணி அரசுகளும், நிச்சயமற்ற அரசியல் சூழலும் நீடித்த காரணத்தால் தீர்வை நோக்கி செல்லவில்லை.
இதில் மத்திய நீர்வளத்துறையின் பங்களிப்பு முக்கியமானது. சோன் நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீர்வரத்தை அறிவியல் பூர்வமாக துல்லியமாக அளவிட்டு, பங்கீட்டை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. குறிப்பாக இரு மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஆய்வு விபரங்கள், அணையின் உயரம் உள்ளிட்ட குறிப்புகளையும் வெளிப்படைத்தன்மையோடு பகிர்ந்து கொண்டதோடு, சம்பந்தப்பட்ட மாநிலங்களை ஆய்வு செய்து அறிக்கையை தருமாறு கேட்டுக்கொண்டது.
கடந்த காலங்களிலும் அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட விஷயங்கள் நிரந்தர தீர்வை நோக்கி நகர வைத்துள்ளன. இரு மாநிலங்களும் ஒப்பந்தத்தை சரியாகப் பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு மேற்பார்வைக் குழுவையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களிலும் அரசியல் ரீதியாக பாஜகவுக்கு நிறைய ஆதாயம் இருப்பதை புரிந்துகொள்ள முடியும். பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள கிராமப்புற வாக்கு வங்கியை குறிவைத்து பாஜக தொடர்ந்து இயங்கி வருகிறது.
கடந்த தேர்தலில் உள்ளூர்ப் பிரச்னைகளையும், பழங்குடியினர் நலன்களை மையமாக வைத்து ஜேஎம்எம் அமைத்த வியூகத்திற்கு முன்னால், பாஜகவின் தேசியவாதப் பிரசாரம் தோற்றுப் போயிருந்தது. ஊழல் குற்றச்சாட்டில் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட விதம், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
உள்ளூர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரும் ஜார்கண்டின் பழங்குடியின மக்கள், நில உரிமை, கலாசாரம் மற்றும் வாழ்வாதாரப் பிரச்னைகளை பாஜக கண்டுகொள்ளாமல் மறைத்து, தேசியவாதம் பேசியதால் பாஜக மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள். கசப்புணர்வை நீக்குவதற்கு இதுவொரு வாய்ப்பு என்கிறார்கள்.
இரு மாநிலங்களுக்கிடையே ஒப்பந்தம், ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்திருக்கிறது என்கிறார், பீகார் முதல்வர். போஜ்பூர், பக்சர், ரோஹ்தாஸ், கைமூர், அவுரங்காபாத், அர்பால், கயா, பாட்னா போன்ற பீகாரின் தெற்குப் பகுதியில் உள்ள மாவட்டங்கள் சோன் நதி நீரை நம்பியே உள்ளன. 250 டிஎம்சி தண்ணீர் என்பது சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்துள்ளது. இதுவரை பீகாரில் கிங் மேக்கராக இருந்து வந்த பாஜக, ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் செய்துள்ள முக்கிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. (
பீகாரின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த விவசாய சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கும் கிராமப்புற வாக்குகளை பாஜக பக்கம் திரளவைக்கவும் இது கைகொடுக்கும் என்கிறார்கள். அடுத்த கட்டமாக சோன் நதி நீரை, பல்கு நதியுடன் இணைக்கும் திட்டம் ஆரம்பமாக உள்ளது. ஆண்டுதோறும் கயாவில் நடைபெறும் பித்ரு பக்ஷ மேளா திருவிழா காலங்களில் பல்கு நதியில் தண்ணீர் தடையின்றி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால் பீகார் பாஜகவினர் உற்சாகமாக உலா வருகிறார்கள்.
(வடக்கு வாசல் திறக்கும்..)