Model Image Chat Gpt
சிறப்புக் களம்

வடக்கு வாசல் - 1 | தடுமாறும் ஆம் ஆத்மி.. பாஜகவை நெருங்கும் அகாலி தளம்.. பஞ்சாப்பில் புதிய கூட்டணி?

பஞ்சாபில் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, பலவீனமாக இருந்தாலும் பஞ்சாப் அரசியலை கவனமாகவே கையாளுகிறது.

ஜெ.ராம்கி

பஞ்சாப்பில் ஆரம்பமாகும் இருமுனைப் போட்டி!

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பஞ்சாப் மாநிலத்தில், தேர்தல் அரசியல் சூடுபிடிக்க ஆரம்பமாகிவிட்டது. ஆம் ஆத்மி கட்சியின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திடீரென்று பாஜகவில் இணைந்த நிகழ்வுக்குப் பின்னர் மாநில அரசியலில் ஆம் ஆத்மி vs பாஜக என இருமுனைப் போட்டி தீவிரமாகியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டியாக இருந்த களம், தற்போது இருமுனைப் போட்டியாக மாறியிருப்பதற்கு காங்கிரஸ் & சிரோமணி அகாலி தளத்தின் செல்வாக்கு தொடர்ந்து இறங்குமுகத்தில் இருப்பதுதான் காரணம். காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப்பூசலும், அகாலி தளத்தின் வாரிசு அரசியலும் தொடர்ந்து அவர்களை பலவீனமாகவே வைத்திருக்கிறது. இருதரப்பும் கூட்டணிகளை கட்டமைக்கும் முடிவுக்கு வந்துள்ளன. அரசியல் சூழல், ஆம் ஆத்மி vs பாஜக என்னும் இருமுனைப் போட்டியை நோக்கி மெல்ல நகர்ந்து வந்துள்ளது.

Arvind Kejriwal, PM Modi

இந்நிலையில் சீக்கிய மதகுருமார்களின் அதிகார அமைப்பான அகால் தக்த், கை ஓங்கியிருக்கிறது. 2022இல் ஆம் ஆத்மி கட்சி சார்பாக சீக்கியரான பகவந்த் மான் முதல்வரான பின்னர் அகால் தக்த் அமைப்பிற்கும் ஆளும் அரசுக்கும் முரண்பாடுகள் முளைத்துள்ளன. சீக்கிய சமூக அடையாளங்களையும் பெருமிதங்களையும் தூக்கிப்பிடிப்பதில் இருதரப்பிற்கும் நடுவே கடும் போட்டி நிகழ்கிறது. சீக்கியர்களின் பிரதிநிதியாக பேசவேண்டியது யார் என்பதில் தொடங்கிய அடையாளச் சிக்கல், முதல்வருக்கும் அகால் தக்த் அமைப்பிற்கும் இடையே பெரிய விரிசலை உண்டாக்கியிருக்கிறது.

சீக்கியர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய ‘சட்லஜ்’!

‘சட்லஜ்' (Satluj) திரைப்பட சர்ச்சை அதில் முக்கியமானது. திரையரங்குகளில் வெளியிட தடை செய்யப்பட்டாலும் இணையத்தில் வெளியாகி சீக்கியர்கள் மத்தியில் பெரும் எழுச்சியைத் தூண்டிய படமாகக் கொண்டாடப்படுகிறது. 1980-90களில் பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை விமர்சித்து, போலி என்கவுன்டர்கள், காவல்துறையின் அடக்குமுறைகள் குறித்துப் பேசி வந்த சமூக ஆர்வலர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம், இது. வெளியாவதற்கு முன்பே பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்திய இத்திரைப்படம், சென்சாருக்கு அனுப்பப்பட்டபோது 127 இடங்களில் மாறுதல் செய்ய வேண்டியிருந்தது. ஆகவே, சென்சார் செய்யப்படாமல் ஓடிடி தளத்தில் வெளியானது. வெளியான 48 மணி நேரத்தில் ஓடிடி தளத்திலும் தடை செய்யப்பட்டது. அப்பாவி சீக்கியர்களின் குரலை அரசுகள் முடக்குவதாக அகால் தக்த் கண்டித்தது. போலி என்கவுன்டர்களில் பலியானவர்களுக்காக அகால் தக்த் சார்பில் சிறப்பு பிரார்த்தனையான 'அரதாஸ்' நடத்தப்பட்டு, அதில் ஏராளமான சீக்கியர்கள் பங்கேற்று, ஆட்சிக்கு எதிராக பேசினார்கள்.

ஆட்சி, அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் பஞ்சாப் மாநிலத்தின் பெரும்பான்மை சீக்கியர்கள் மத்தியில் அகால் தக்த்க்கு செல்வாக்கு உண்டு. இதுவரை வளர்ச்சி அரசியலை முன்னிலைப்படுத்தி, மக்கள் நலத்திட்டங்களை மட்டுமே பேசிவந்த ஆம் ஆத்மி கட்சியை சீக்கிய மதகுருமார்களுக்கு எதிராக நிறுத்தியிருப்பதால் தேர்தல் அரசியலை எதிர்கொள்வதற்கு தடுமாறுகிறது. ஆம் ஆத்மியின் ஒரே முகமான முதல்வர் பகவந்த் மான், சீக்கிய மரபுகளுக்கு எதிரானவர் என்று அகால் தக்த் நேரடியாக விமர்சனம் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சியால் எந்தவித எதிர்வினையும் செய்ய முடியாமல் மௌனமாக கடக்க வேண்டியிருந்தது. எனினும், ஆம் ஆத்மி கட்சித் தலைமை பகவந்த் மான் மீது முழு நம்பிக்கை வைத்து, 2027 தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. கூடவே, சீக்கிய மத அமைப்புகளை அமைதிப்படுத்தும் நடவடிக்கைகளையும் கையிலெடுத்திருக்கிறார்கள்.

சீக்கியர்களின் புனித நூலை அவமதித்தால் கடும் தண்டனை!

சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பை அவமதிப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்துள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புற ஹிந்து மத ஆதரவாளர்களின் ஆதரவை தக்க வைத்துக்கொள்ளவும் ஆம் ஆத்மி முயற்சி செய்கிறது. அமிர்தசரஸ் அருகே சீதா, லவன் & குசன் கோயில் திட்டம், பாட்டியாலாவில் காளிமாதா கோவிலை புதுப்பித்தல், ’ஹமாரே ராம்’ என்னும் பெயரில் மாநிலம் முழுவதும் நாடகம் நடத்துவது என்று ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்துள்ளது.

Bhagwant Mann

ஆம் ஆத்மியின் வாக்கு வங்கி அரசியல், அவர்களது ஆதரவாளர்களாலேயே ஆச்சர்யமாக பார்க்கப்படுகின்றன. அப்படியொரு முகத்தை இதுவரை யாரும் பார்த்ததில்லை. டெல்லியிலும், பஞ்சாபிலும் ஒரு முழுமையான மாற்றுச் சக்தியாகத்தான் ஆம் ஆத்மி தன்னை முன்னிறுத்திக் கொண்டது. அதன் காரணமாகத்தான் டெல்லியில் காங்கிரஸ் vs பாஜக; பஞ்சாபில் காங்கிரஸ் vs அகாலி தளம் என்று இருமுனைப் போட்டி கடுமையாக இருந்தபோதும், மாற்று சக்தியாக வந்து குறுகிய காலத்தில் பெரும் எழுச்சி பெற்றது.

பாரம்பரிய கட்சிகளான காங்கிரஸ் & அகாலி தளம் போன்ற கட்சிகள் மீது மக்கள் கொண்டிருந்த கடுமையான எதிர்ப்பை ஆம் ஆத்மி சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. வாரிசு அரசியலோ, வாக்கு வங்கி அரசியலோ, மதவாத அரசியலோ செய்யாமல் வளர்ச்சி அரசியலைப் பற்றி மட்டுமே பேசி ஆட்சி நடத்தமுடியும் என்று செயல்பட்டு வந்த ஆம் ஆத்மி கட்சிக்கு பத்தாண்டுகளுக்கு பிறகு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்துக்களை ஒருங்கிணைத்து, வலுவான வாக்கு வங்கியாக மாற்றிய பாஜக

பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை இந்துக்கள் எந்நாளும் வாக்கு வங்கியாக இருந்ததில்லை. நகர்ப்புறம், கிராமப்புறம் என்று மாநிலம் முழுவதும் பிரிந்து கிடக்கிறார்கள். இந்துக்களை ஒருங்கிணைத்து, வலுவான வாக்கு வங்கியாக கட்டமைக்கும் பாஜகவின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. ஆம் ஆத்மியின் தொடர்ச்சிய எதிர்ப்பு காரணமாக இருந்திருக்கிறது. மத அடையாள அரசியலைச் செய்வதாக பாஜகவை குற்றம்சாட்டி வந்த ஆம் ஆத்மி, இன்று தன்னுடைய முக்கியமான ஆயுதத்தை இழந்திருக்கிறது.

Amarinder Singh Raja

பஞ்சாப்பில் பலவீனமாக இருக்கும் காங்கிரஸ்

பஞ்சாபில் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, பலவீனமாக இருந்தாலும் பஞ்சாப் அரசியலை கவனமாகவே கையாளுகிறது. கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிப்பூசல், நீண்டகால பிரச்னையாக தொடர்கிறது. எதிர்வரும் தேர்தலை கட்சியின் மாநிலத் தலைவரான அமரீந்தர் சிங் ராஜா வாரிங் தலைமையில் சந்திப்பதா அல்லது முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் சந்திப்பதா என்பதில் குழப்பங்கள் நீடிக்கின்றன.

ஜாட் சமூகத்தைச் சேர்ந்த அமரீந்தர் சிங் ராஜா வாரிங் மற்றும் பர்கத் சிங் இருவரும் மாநில அரசியலில் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள். முன்னாள் முதல்வர் சன்னி சுதந்திரமாக செயல்பட விரும்புகிறார். தேசிய அளவில் அறிமுகமுள்ள காங்கிரஸ் முகமான மணீஷ் திவாரி போன்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சீக்கிய மதகுருமார்களின் அரசியலில் தலையிட்டால் 'ஆபரேஷன் புளூஸ்டார்' மற்றும் அதற்கு பிந்தைய நிகழ்வுகள் தந்த கசப்புகள் வேறு விதமாக பிரதிபலிக்கும் என்பதால் காங்கிரஸ் முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறது.

பிரதமருடன்  சிரோமணி அகாலி தளத் தலைவர் சந்திப்பு

இந்நிலையில் பாஜகவும் தன்னுடைய ஆட்டத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. சிரோமணி அகாலி தளத்தின் தலைவரான சுக்பீா் சிங் பாதல், டெல்லியில் பிரதமரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். சந்திப்புக்குப் பின்னர் தொகுதி மறு வரையறை, பெண்களுக்கான இடஒதுக்கீடு போன்ற விஷயங்களில் அகாலி தளத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவை பாஜக அறிமுகப்படுத்தியபோது அதை எதிர்த்து அகாலி தளம் வாக்களித்தது. மூன்றே மாதங்களுக்குள் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அதே மசோதாவை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளது. பாஜகவை அகாலி தளம் நெருங்குவதால் மறுபடியும் பஞ்சாபில் கூட்டணி வரும் சாத்தியங்கள் தெரிகிறது.

sukhbir badal singh

அகாலிதளம் - பாஜக கூட்டணி, பஞ்சாப் மாநில அரசியல் வரலாற்றில் ஓர் இயல்பான கூட்டணி என்பதில் சந்தேகமில்லை. 1997 முதல் 2017 வரை 20 ஆண்டுகள் நீடித்த வெற்றிகரமான கூட்டணி. இதுவரை 3 முறை ஆட்சியமைத்திருக்கிறார்கள். பொதுவாக அகாலிதளம், கிராமப்புற விவசாயிகள் மற்றும் சீக்கியர்களை அடித்தளமாக கொண்ட கட்சி. பாஜகவோ நகர்ப்புற இந்துக்களுக்கான கட்சி. இரண்டும் சேர்ந்தால் பலமான கூட்டணியாக இருக்கும் என்கிற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.

கூட்டணி உருவாவதில் ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. பஞ்சாப் அரசியலில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்திய அகாலி தளம், பாஜக அரசு கொண்ட வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து என்.டி.ஏ கூட்டணியைவிட்டு வெளியேறியது. மகராஷ்டிராவில் பாஜகவுக்கு சிவசேனாபோல், பஞ்சாபில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பகமான பார்ட்னராக இருந்த அகாலிதளம் விலகியதால் பாஜகவுக்கும் இழப்பு இருந்தது. மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றாலும் அகாலிதளம் கட்சியுடனான உறவு சீரடையவில்லை.

சிறிய கட்சியாக சுருங்கிப்போன அகாலி தளம்

2022இல் தனித்தனியாகப் போட்டியிட்டு பாஜக 2 இடங்களைப் பெற்றது. அகாலி தளம் தன்னுடைய அரசியல் வரலாற்றிலேயே மிக மோசமான பின்னடைவைச் சந்தித்து வெறும் 3 தொகுதிகளை மட்டுமே வென்றது. ஆம் ஆத்மியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அகாலி தளம் சிறிய கட்சியாக சுருங்கிவிட்டது. கிராமப்புற மற்றும் சீக்கிய வாக்காளர்களிடையே இருந்த பாரம்பரிய ஆதரவுத் தளமும் சிதைந்து போயுள்ளது.

pm modi, amit shah

ஒருவேளை மறுபடியும் கூட்டணி உருவானால், இடங்களைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் எழக்கூடும். அகாலிதளம் முன்னர் 94 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும் போட்டியிட்டு வந்தன. கடந்த 5 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் பாஜக கணிசமாக வளர்ந்திருக்கிறது. ஆகவே, 50 சதவீத இடங்களை கேட்டுப் பெறுவதற்கு முயற்சி செய்யக்கூடும்.

ஆம் ஆத்மிக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்காமல், கூட்டணியாக எதிர்கொண்டால் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்கிறார்கள். ஆனால், தேர்தலில் எதை முன்வைத்து பிரசாரம் செய்வது என்பதிலும் சிக்கல் இருக்கிறது. வாரிசு அரசியல், மத அடையாள அரசியல் என்று எதைச் செய்தாலும் கூட்டணிக்கு எதிராகவே போய்விடும்.

ஜாதி, மதத்தின் அடிப்படையில் தேர்தலை அணுகாத கட்சிகள்

போதைப்பொருள் நடமாட்டம், வேலைவாய்ப்பின்மை, நதிநீர்ப் பங்கீடு உள்ளிட்டவை பஞ்சாப் அரசியலில் தொடர்ந்து கவனம்பெற்று வருகின்றன. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஓராண்டாகவே பேசுபொருளாக இருந்து வருகிறது. குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு எதிரான ‘கேங்ஸ்டரன் தே வாரா’ நடவடிக்கையை ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், சட்டம் ஒழுங்கு நிலை சீராக இல்லை என்பதுதான் நிஜம்.

சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் நடமாட்டம் போன்ற பிரச்னைகளை முன்வைத்துதான் தேர்தலைச் சந்திக்க முடியும். சென்ற முறை 117 தொகுதிகளில் 92 இடங்களைப் பெற்ற ஆம் ஆத்மி, இம்முறை அதே வெற்றியை பெறுவது கடினம். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற மோசமான தோல்வியிலிருந்து கட்சியால் இன்னும் மீண்டு வரமுடியவில்லை.

பஞ்சாப், தேசிய அளவில் தனித்து தெரியும் மாநிலம். ஜாதி, மதத்தின் அடிப்படையில் கட்சிகள் இதுவரை தேர்தலை அணுகியதில்லை. அகால் தக்த் போன்ற அமைப்புகளின் தாக்கம் இருந்தாலும், தேர்தல் அரசியலில் பெரிய அளவில் முடிவுகள் மாறியதில்லை. அரசியல் சாசனம் 370 பிரிவு நீக்கம், அயோத்தி ராமர் கோயில், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற தேசிய அளவிலான பிரச்னைகளிலிருந்து பஞ்சாப் எப்போதும் விலகி நின்றிருக்கிறது. அதே நேரத்தில் வேளாண்மைச் சட்டங்கள் உள்ளிட்ட வாழ்வதார விஷயங்களில் தீவிரமாக களமிறங்கியதுண்டு. பஞ்சாபிகளை புரிந்துகொள்வது கஷ்டம்தான்!